அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வாகையூர்
1

பொதுத் தேர்தல்
பெரியார் பணி "பாரி பறித்த பறி'
நெடுஞ்செழியன் பாசறையில் இருந்த பாங்கு
சங்கரலிங்கனார் செய்த தியாகம்

தம்பி!

பொங்கற் புதுநாள்! தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள்!

இன்பம் பொங்கிடும் எழிலோவியமாக இல்லமெலாம் விளங்கிடும் விழா நாள்!

புதுக்கோலம் காட்டி, பூரிப்பை ஊட்டிடும் கண்கவர் வண்ணம் பல எழும் நாள்!

பசுமையின் பாங்கும் பயனும், பளிச்சிடும் பொன்னாள்!

மனைதொறும் மனைதொறும் மயிலும் குயிலும், மானும் உலவிடும், மலர்வனமாகும் மாண்புபெறும் நன்னாள்!

ஏராளர் தம்மாலே மாந்தரெலாம் சீராளர் ஆயினர் காண் என்று, செந்நெலும் செங்கரும்பும் செப்பிடும் சீரிய நாள்!

மேலே பார்த்துப் பெருமூச்செறியாது, மேதினியை மறந்து ஏதினிவாழ்வு என்று ஏக்கமுறாது, என் மனை என் மகவு, என் உழைப்பு, என் உயர்வு என்று மட்டுமல்லாது நம் இல்லம், நம் நாடு, நமது நலன் என்று நயம் கூறி, தோழமை வழங்கிடும், தூய்மை துளிர்த்திடும் திருநாள்!

வீழ்ந்துபட்டான் ஒரு கொடியன் விண்ணவன் அருள தாலே! ஆங்கவன் தன் அருள்பெறவே, அடிபணிந்தே அளித்திடுவீர், தேன் கதலி பலாவுடனே செம்பொன்னும் ஆடையுந்தான்! யாம் வான்சுரரை விட்டு வந்த பூசுரர் காண் என்று கூறி, ஆன்றோர் நெறிமறந்தார் அனைவரையும் அலைக்கழிக்கும், ஆரியத்தின் காவலர்கள் மக்களை அண்டிடாத அருந்திருநாள்.

உழைப்போனின் உதிரத்தை உண்டு உருசி கண்டவனும், ஒருகணம் உள்ளமதில் உண்மைக்கு இடமளித்து "பெற்றோம் நாம் பெருஞ்செல்வம் மற்றெதனால்? அவர் உழைப்பதனால்! உழைத்தோர் உருக்குலைந்தார், உண்ட நாம் பெருத்து விட்டோம். என்றும் இந்நிலைதான் என்றே இறுமாந்து இருந்திடுதல் இனியும் நடவாது, குன்றெடுக்கும் நெடுந்தோள்கள் குலுக்குவது கண்டிட்டோம், ஆட்காட்டி விரலுக்கு அடங்கினோர், ஏன்? என்று அழுத்தமும் திருத்தமும் அழகுபெறக் கேட்டெழுந்தார், ஆர்த்தெழுந்து அவர் உரிமைக்கவர், ஆணையிட்டுக் காட்டு முன்னம், அவா அடக்கி, அவரவர் உழைப்புக்கு அவரவரே உரிமையாளர் என்றுள்ள அறநெறிக்கு அடி பணிவோம்; பிணியாகோம்'' - என்று தனக்குத் தானேனும் தத்துவம் கூறிக்கொள்ளும், புத்தறிவு பூத்திட மெத்தவும் உதவும் மேலான நாள்.

தமிழரின் இத்திருநாளன்று, நுமது இல்லமெல்லாம் இன்பம் பொங்குக! என்ற என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன் - அதுபோன்றே நீவிர் எனக்களிக்கும் நல்லன்புக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

கார் கண்டதால் கலாபம் விரித்தாடும் மயில்போன்று இந்தத் திருநாள் காணும்போதே, தமிழரின் உள்ளத்தில் உவகை மலர்ந்திடக் காண்கிறோம்.

இத்தனைக்கும், இதற்கு முன் இல்லாத அளவிலும் முறையிலும் விளக்குகளின் வரிசைகளோ, மணியோசைகளோ, காது குடைந்திடும் ஒலி கிளம்பும் வேட்டுச் சத்தமோ, வீண் ஆரவாரமோ, இந்நாளில் இருப்பதில்லை.

"பொங்கலோ! பொங்கல்!'' என்று இல்லத்துள்ளார் அனைவரும் எழுப்பிடும் குரலொலி, இன்னிசையாகிறது; காலத்தின் பல கோலங்களைக் கண்டு கண்டு தெளிந்து, முதுமைக் கோடுகள் முகத்தினில் பதிந்துள்ள பெரியவரின் குரலும், தத்தை பெற்றெடுத்த அஞ்சுகத்தின் தீஞ்சுவைக் குரலும், முழக்கமிடும் காளையர்கள் வழக்கத்தை மாற்றி, கனிவுகூட்டி எழுப்பிடும் குரலொலியும், பொங்கலோ! பொங்கல்! என்று கூறுவது, புதுப்பானை தன்னிலே பொங்கிடும் பால் கண்டுமட்டுமல்ல, உள்ளமதில், உன்னைக் கண்டதால், உயிருக்குயிரே! பொங்கி எழும் காதலினையும் குறித்தேதான் என்று கண்ணால் பேசிடும், ஆரணங்கின் இசையொலியும், எல்லாம் கலந்து, இன்னதென்று விளக்கிட முடியாததோர் இன்னிசையாகிறது!

பொங்கிற்றா பால், தம்பி, பால் பொங்கிற்றா, அக்கா, - என்று பாங்குடன் கேட்டு மகிழ்வர். நாட்டிலே மனைகள் பலப் பல இருப்பது, தோட்டத்திலே பலப்பல மலர்ச்செடிகள் இருத்தல்போல; எல்லாவற்றிலும் நறுமணம் எழுந்தால், பொழில் முழுதும் மணம் பரவும், அங்குப் பயிலும் காற்றும் மலராகி அனைவருக்கும் சுவை தரும் என்பதுபோல், வீடெங்கும் விழா இருந்தால், நாடே விழாக்கோலம் காட்டும்; இன்பம் சில இல்லங்களிலும், இருள் பலவற்றிலும் இருக்குமானால், அது எருக்கம் செடிகள் படர்ந்துள்ள காடதனில், இங்கொன்றும் அங்கொன்றுமாக இஞ்சியும் மஞ்சளும் இருத்தல் போன்றதாகும்; எனவே, பொங்குக இன்பம், எங்கும் பொங்குக, எல்லோர்க்கும் இன்பம் கிடைத்திடுக! - என்று வாழ்த்தும் மாண்பினை அனைவரும் பெற்றிடும், பயிற்சி நாள் ஆகிறது, பொங்கற் புதுநாள்.

இந்த ஆண்டோ! பொங்கற் புதுநாளன்று, நமக்கெல்லாம், ஓர் புதுவிதமான இன்ப உண்ர்ச்சி, கருவில் உலவும் களிப்புப் போல் எழுகிறது.

மனத்துக்கிசைந்த மங்கை நல்லாள், கருவுற்றாள் என்று, மெல்லிய குரலில் பேசி, ஓர் புன்னகையை வீசுகிறார்களே, அது கெட்ட அடலேறு, "ஓ! ஓ! தேன் துளி, தெவிட்டாத பாகு, யான் பெற்றேன் இன்பத்தின் கனியை,'' என்றெல்லாம் எண்ணி எண்ணி, களிநடம் புரியும் இதயம்கொண்டோனாகிறானே, அஃதேபோல, நாம் ஈடுபடுவது இந்தப் பொதுத் தேர்தலில் என்று திட்டம் வகுத்துக்கொண்டுவிட்டதனால், அதன் விளைவாக நாம் பெறக் கிடைக்கும் வெற்றி பற்றிய எண்ணம், உள்ளத்துக்குப் புதியதோர் உணர்ச்சியைத் தரத்தான் செய்கிறது. இதோ, இன்று இல்லம் கொள்ளும் விழாக் கோலம்போன்ற மற்றோர் மகிழ்ச்சிகொள் கோலம், நாடு பெறுமன்றோ, நாம் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பெற்றி பெற்றால் என்று எண்ணாத இளைஞர் இல்லை, பேசிடாத பெரியவர் இல்லை, இதனை விரும்பிடாத நல்லவர்கள் இல்லை, அதனை நஞ்செனக் கருதும் சிலர் உளர் என்கிறார்கள் - மலர் தூவிய பஞ்சணையிலேகூடத்தான் மலர்க்காம்பு முள்ளாகுமாம், சில வேளைகளில், அதனால் என்ன?

இதற்கு முன்பெல்லாம் நாம் கண்டுகளித்த பொங்கற் புதுநாளைவிட, இந்த ஆண்டு, நமக்கெல்லாம் அதிகமான அளவுக்கு ஆர்வம் தருவதாக அமைகிறது; நமது உழைப்பையும் தூய்மையையும் உணர்ந்து பாராட்டி, நமது இடையறாத பணியினைக் கண்டு மகிழ்வுற்று, மேலும் பணியாற்றிடும் வாய்ப்பினை வழங்கிட, நாடு எந்த அளவுக்குப் பக்குவப்பட் டிருக்கிறது, நல்லன செய்தால் அல்லன அகலும் என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, நாடு, நடந்துகொள்வதிலே, எந்த அளவுக்குத் திறம்பெற்றுத் திகழுகின்றது என்பனவற்றை எடுத்துக் காட்டிட உதவும் பொன்னான வாய்ப்பாக அமைகிறது, இந்தப் பொதுத் தேர்தல். எனவே, பால் பொங்கி, அதனால் மகிழ்ச்சி பொங்கிடும் மனைகளிலே வீற்றிருக்கும் அன்பர்கட்கெல்லாம், நாடு புதியதோர் தொண்டர் படையினைப்பெற்று, ஆட்சித் துறைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எழுந்துள்ள வேளை இது என்ற எண்ணம் கனிந்திருக்கத்தான் செய்யும்.

அவர்தம் பேராதரவு பெறத்தக்க விதத்திலே, பணியாற்றி வந்துகொண்டிருக்கிறோம் என்பதனாலே, நமக்கு, உரிமையோடு கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் எழுந்தது, மக்கள் மன்றத்திலே இதற்கான ஒப்பமும் கிடைத்தது, இதுபோது செயல்படு கட்டம் அடைந்துள்ளோம், செய்நன்றி மறவாதார் தொகை குறைந்துபடவில்லை என்ற நம்பிக்கை நாதமாகி நிற்கிறது, பயணத்தைத் துவக்கிவிட்டோம், போதுமான அளவு பலம் தேடித் திரட்டிக்கொள்ளக்கூட நேரமின்றி. ஏனெனில், நாம் நமது மக்களுடைய நேர்மையில் மிக மிக அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறோம். உற்றார் எவர்? மாற்றார் யாவர்? உண்மை ஊழியம் புரிந்திடும் பண்பு எவரிடத்தில் உளது? ஊரை அடித்து உலையில் போட்டிடும் உலுத்தர்போக்கு கொலு வீற்றிருப்பது எவ்விடத்தில்? என்பதனையெல்லாம் ஆய்ந் தறிந்திடும் ஆற்றல்மிக்கவர்கள் நமது மக்கள், என்பதிலே நாம், நம்பிக்கை கொள்கிறோம்; எனவேதான், மலை என உருவும் மதயானையன்ன போக்கும்கொண்டு, எதிர்ப்பட்டோர் அழிவர், அழிவர் என்று ஆர்ப்பரித்திடும் ஆளும்கட்சியை, தடுத்து நிறுத்தி, தட்டிக் கேட்டிட, கணக்குக் காட்டச் சொல்லிட, முனைந்து நிற்கிறோம்; மூக்கு உடைபடும் என்போரும், முகத்தில் கரி பூசப்படும் என்று ஏசுவோரும், மூலைக்கு மூலை துரத்தி அடிப்போம் என்று முழக்கம் எழுப்புவோரும், உளர்; சந்தனக் காட்டிலேயே, சத்தற்ற செடி கொடி அறவே இல்லாமலே உள்ளன? உள்ளன; இருக்கட்டும், மக்களின் அறிவுக்கண் நல்ல முறையில் விளங்கிடுமானால், கறை பூசிக் காரியத்தைக் கெடுத்திட முனைந்திடும் "கண்ணியர்களின்' செயல், நாணறுந்த வில்லில், முனை ஒடிந்த அம்பினை, கரம் குறைந்தவன் ஏற்றிடும், காதையாகிப்போகும்.

இந்தக் "காரக்கருணை' ஒரு புறம் இருக்கட்டும் - கரும்பும் மஞ்சளும், இதோ; அவைதமைக் காண்கிறோம், அகம், இன்பம் பொங்கும் கலமாகிறது.

நடைபாதை வியாபாரிகள்: பொருள் என்ன இதற்கு?

நாளங்காடி - அல்லங்காடி: இவை தமிழர் தாழ்ச்சியுறாத நாட்களில் இருந்து வந்த எழில்.

இன்று, தமிழ் இனம், சொந்த நாட்டிலேயே "சோற்றுக்கு அலைபவர்கள்' ஆகியுள்ளனரன்றோ; இவர்தமில் ஒருசிலர் சென்னை நகரில், கடை வீதியில், நடைபாதையில் நின்றும், நடந்தும், இருந்தும், போலீஸ் புகும்போது மறைந்தும், சிறு சிறு சாமான்களை விற்று வாழ்கிறார்கள். இவர்கள் "இலாபம்' என்ன பெறுவர்? அணாக்கள்; மிகச் சுறுசுறுப்பாக வேலை செய்தால், ஒரு நாளில் சில அணாக்களே கிடைக்கும்; இதில் ஒரு பகுதியைச் சேர்த்துத் துளிகளைத் திரட்டித் தூய உள்ளம் படைத்த அந்தத் தோழர்கள் தேர்தல் நிதிக்கு என்று சென்னைக் கடற்கரைக் கூட்டத்திலே, என்னிடம் தந்தனர்; நான், எங்கெங்கோ சென்றேன், அந்தக் கணம்.

மழையால் நனைந்து வந்த ஔவைப் பெருமாட்டிக்கு "எந்தையும் இழந்தோம், எம்குன்றும் பிறர்கொண்டார்'' என்று கூறிடவேண்டிய நிலைபெற்று நலிந்து நின்ற பாரி மகளிர், ஒரு நீலச் சிற்றாடை தந்தனராமே, அதுபோது, மூதாட்டி அம் மகளிரின் மாண்பு கண்டு நெஞ்சு நெக்குருகி,

பாரி பறித்த பறியும், பழயனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் - சேரமான்
வாராய் என்றழைத்த சொல்லும்இம் மூன்றும்,
நீலச்சிற் றாடைக்கு நேர்!

என்று பாடினதாகக் கூறுகிறார்களே, அந்த நிலைக்குத் தாவிற்று, என் உள்ளம்.

அந்த "நீலச் சிற்றாடை' தரும் நேர்மையாளர்கள், நிரம்ப இருக்கிறார்கள் நாட்டில், மிக நிரம்ப.

பெரியாரின் பெரும்படையின் பகைப் பேச்சினைக்கூட நான், "பாரி பறித்த பறியா'கவே கொள்கிறேன். ஆம்!

பரிசு தந்தான் பாரி. பெற்ற மூதாட்டியார், புறப்பட்டார், போக. பாரிக்கு, பிரிந்து நிற்க, மனமில்லை. மூதாட்டியைச் சொல்லால் தடுத்திட இயலாது என்று எண்ணினான். எனவே, தன் ஆட்கள் சிலரை அனுப்பினானாம், எதற்கு? தான் மனமுவந்து தந்து பரிசுகளை, வழியில், பறித்துக்கொண்டு வந்து விடுவதற்காக.

ஔவை அறியார், பாரியின் இந்தப் போர் முறையை.

வழிப்பறி கள்வர் செயல் இது, என்று எண்ணிக் கொண்டார், பொருள் பறிக்கப்பட்டபோது.

பொருள் பறிபோயிற்றே என்பதைவிட, பாரியின் ஆட்சி நடந்திடும் இக்காலையிலா, கள்வர் இத்துணைத் துணிவுடன் உள்ளனர்; அந்தோ! அஃது அவனது ஆட்சிக்கேயன்றோ இழுக்கு என்பதை எண்ணியே, மூதாட்டியார் பெரிதும் மனம் வாடினராம்.

நாட்டிலே இத்தகு கொடுஞ்செயல் நடைபெறுகின்றது என்பதை எடுத்துக்கூறச் சென்றார் - ஔவையார். வந்தார், தமிழுக்கு வாழ்வளிக்கும் பெருமாட்டி என்பதைக் கண்ட பாரி, களிப்புற்று, பிறகே, நடந்ததன் உட்பொருளை எடுத்துரைத்தானாம்.

"பாறி பறித்த பறி' இதுதான். பெரியார், இதுபோது, இதே முறையைத்தான் கையாள்கிறார் என்றெண்ணி, முன்னம் பாரி காலத்து முறைபற்றிய காதை, கருத்தளித்திருப்பதால், நான், மன அமைதி கொள்கிறேன். சில வேளைகளில், மகிழக்கூட முடிகிறது.

நாடெங்கணும், நமக்கு "நீலச் சிற்றாடை' தந்தேனும் மகிழ்விக்கவேண்டும் என்றெண்ணும் பாரி மகளிர் உளர்.

இந்தத் தூய துணை வீண்போகும் என்றெண்ணவும் கூசுகிறது.

இத்துணை ஆதரவு தந்திடும் நேர்மையாளர்களும், ஆற்றலுடன், அதனைத் திரட்டி உருவாக்கிடும் திறம் படைத்த, தம்பிகள் எண்ணற்றவர்களும் இருந்திடும்போது, காடுமலை குறுக்கிட்டாலென்ன, கடுஞ்சொற்கள் மழையெனப் பொழிந்தா லென்ன, வா, தம்பி! வா, வா, கடமை கட்டளையிடுகிறது, நாட்டவர் கனிவு நம் பக்கம் துணை நிற்கிறது, செல்வோம், புறப்படு; - என்று அழைத்திட என்னால் முடிகிறது. அழைக் கிறேன்! என் உள்ளம் உன்போன்றோருக்கெல்லாம் புரிகிறது, வருகிறீர்கள்; இனி, வாகையூர் போய்ச் சேரவேண்டும்! - வழி கொடிது, கொடிது! எனினும், மேற்கொண்டுள்ள பணியின் மேம்பாட்டினை அவ்வப்போது நினைவிற்குக் கொண்டுவந்தால் போதும். பாலையில் நடந்திடும்போதும் இன்பம் காணக் கிடைக்கும்.

பாய்களைப் புயற்காற்றுப் பிய்த்தெறிந்துவிடுமே என்று அஞ்சி, கலம் செலுத்தாமல், கரையில் படுத்துறங்கிக் கிடந்தானோ, தமிழன்?

கொல்லும் புலி உண்டு காட்டினிலே என்று தெரிந்தும், உள்ளே சென்று, சந்தனம் கொண்டுவராமலா இருந்தான், நமது முன்னவன்?

மூச்சை அடக்கி ஆழ்கடலுக்குள் மூழ்கி, ஒரு கரத்தால் சுறாவைத் தள்ளிவிட்டு, மறு கரத்தால் சிப்பியைப் பற்றி எடுத்து வந்தல்லவா, தமிழன் முத்து தந்தான் முத்தம் பெற்றான்!!

வழி வழி வந்த நாம், பாதையின் வளைவு கண்டா பயணத்தை விட்டுவிடுவோம்?

அதோ, உன் அன்பினைப்பெற்றதால், அன்னமென நடந்து, மின்னலிடை துவள, உனக்கென, கன்னல் சுவைகொண்ட கனி களைத் தட்டினில் வைத்துக்கொண்டுவரும், தாமரையாளைக் கேட்டுப்பார், வழி நெடிது, கொடிது என்பதன் பொருட்டு, வாழ்விலே நாம் நமக்கு என்று ஏற்றுக்கொண்டுவிட்டஒரு குறிக்கோளை மறந்திடப்போமா? என்று. பதில் கிடைக்காது - ஆனால், அப்பாவையின் கண்களிலே ஓர் பயங்கரம் தோன்றும்! இங்ஙனம் பேசிட எப்படி இவரால் முடிகிறது? இவர் அழைத் தால், நான் பாம்பு புரளும் காடாயினும் பாய்ந்தோடிச் செல்வேனே, கொடுவழி கண்டு குறிக்கோளை இவர் மறக்கும் இயல்பினரானால், அம்மவோ! பிறகு கொண்டவளின் அன்பினைப் பெறுதற்காக, குறுநடை நடந்தாலும், குதி வலிக்கும் என்றும் எண்ணி, துறப்பரோ, என்று அந்தப் பார்வை பேசுகிறது!

பயணத்திலே, வெற்றிபெற, நாம் பெறவேண்டிய ஆற்றலை, எவ்வெவ்வழிகளால் பெறல்வேண்டும் என்பதை எண்ணித் திட்டமிட்டுப் பணியாற்றி வரும் உன்னிடம், நானேன், தயக்க மடைவோர், தளர்நடைக்காரர், துவண்டு விழுவோர் ஆகிய இன்ன பிறர் பற்றிய பேச்சினைக் கிளப்பிடவேண்டும். தம்பி, உன் தகுதி நானறிவேன், உன் ஆற்றல் நான் கண்டிருக்கிறேன். நாடு அதனைத் தக்க விதத்தில், மெச்சத்தக்க முறையில், உருவான பலன் கிடைக்கத்தக்க அளவில், காணவேண்டும். பிறகென்ன, வெற்றிதான்! மலையளவுள்ள மதகரியை அடக்குபவன், அதனினும் பெரிய உடல் அளவா கொண்டுள்ளான்? மார்பிலே தைத்ததும் குருதியை வெளியே கொண்டுவருகிறதே, அம்பு, அதன் முனையில் உள்ள கூர்மை பொருந்திய இரும்பு, தம்பி, எத்துணை சிறியது அளவில். எனவே, அளவுபற்றி, எண்ணி, நாம் ஆயாசப் படப்போவதில்லை.

சிறிதளவு பால்தான் பெய்தாள் உன் அன்னை உண்ண உண்ண மகிழ்கிறாயே.

தேனை, தம்பி! குடம் குடமாகவா பருகிடவேண்டும் சில துளிகள், அதிலும், உன் சிந்தைக்கினியவள் கரம் பட்டதென்றால், தேன் மட்டுமா இனிக்கும்! தொட்ட அத்தனையுமன்றோ உனக்கு, மலைத்தேனாகும்!

அளவுபற்றி, அஃதொன்று மட்டுமே பெற்றுள்ளோர், பேசி மகிழட்டும், எண்ணி ஏமாற்றம் காணட்டும்.

நாம், எளியவர், மறந்தோமில்லை, நாம் எடுத்துக் கொண்டுள்ள செயல் சீரியது, மறவோம் இதனை.

அல்லலும் தொல்லையும் வறுமையும் நிரம்பிய வாழ்வின ராக, நம்மவரில் மிகப் பெரும்பாலோர் உளர். இந்நிலையிலேயே நம்மால் ஓர் திருநாள் கொண்டாடமுடிகிறது. அறுவடை விழா என்கிறோம், அறுப்பவன் ஒருவன், அனுபவிப்பவன் வேறொருவன் நிலை குலையாதிருக்கும்போதுகூட. ஆனால், நாம் விரும்பிடும் நாடு கிடைத்துவிட்டால்!

நமக்கென்று ஒரு கொற்றம் - நமது முயற்சிகளுக்குத் தங்கு தடை இல்லாததோர் துரைத்தன முறை - நம் நாடு வளம் பெறுவதற்கான வழிவகை காணும் உரிமையைப் பறித்திடும் ஆதிக்கம் எவரிடமும் இல்லாததோர் அரசுமுறை அமைந்துவிட்டால்?

அமைந்துவிட்டால், கூனன் நிமிர்ந்திடுவான், கரம் கூப்பிப் பிழைப்போன் மனிதனாவான், மங்கிய கண்களில் ஒளி பிறக்கும்; புதியதோர் தமிழர் சமுதாயம் அரசோச்சும்; நரம்பு புதுப்பிக்கப் பட்ட வீணை காண்போம்; கானம் எழும்; மாசு துடைக்கப்பட்ட மணியிலிருந்து ஒளி கிளம்பும்; விழாக் கோலம் நாடெங்கும்; என்றும்.

வழி நெடிதா, கொடிதா என்பது குறித்துக் கண்டறிந்த பிறகா பயணப்படவேண்டும்; இந்த வாகையூர் காண?

மாணிக்க விளக்கு ஒளி தருகிறது.

புலிச் சங்கிலியிட்டுச் செய்த இருக்கையில், படுத்திருக் கிறான் மன்னன்.

காவலாளிகள், சுற்றித் திரிந்தபடி உள்ளனர்; மாற்றா ரிடமோ, உற்றாரிடமோ, நடப்பனவற்றை உளறிக்கொட்ட முடியாத நிலையினர்; ஊமையர்.

விளக்குகள் அணையும்போது, பந்தத்தைக் கொளுத்தி விளக்குகளை எரியச்செய்கிறார்கள் கச்சையணிந்த மங்கையர்.

கச்சையணிந்த மங்கையர்தானே, என்று கெடுமதியாளர் எண்ணிடத் துணியமுடியாது - அம்மங்கையர் வாள் அணிந்துள்ளனர்.