அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


சிறை அனுபவங்கள்

அபிதான சிந்தாமணி படித்தமை -
பெரியாரின் அன்பு -
குஞ்சிதம் குருசாமியின் பாசம்

தம்பி!

உச்சி முதல் உள்ளங்கால்வரை ஒரே புளகாங்கித மடையலாம் - வீரத் தமிழனின் பழைய வரலாறு மீண்டும் ஓர் முறைகாணும் வாய்ப்பு நேரிடும், கோட்டை கொத்தளங்கள் தூளாகும், கொடிமரங்கள் பெயர்த்தெறியப்படும், முரசு கொட்டுவர், சங்கம் ஊதுவர், பாவாணர் வெற்றிப் பண் இசைப்பர், திருமதிகள் "திருஷ்டி' கழிப்பர், மக்கள் தெந்தினம் பாடுவர், ஆகஸ்ட்டுப் போரின் அலாதியான அருமை கண்டு என்று எவ்வளவோ மனப்பால் குடித்தேன். இப்படி ஒரேயடியாக என்னையும் அவரை நம்பிக் கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வீரர்களையும் நட்டாற்றில் விட்டுவிடுவார் என்று துளியும் எண்ணவில்லை; எனினும், என்ன செய்வது, தோழர் ம, பொ சிவஞானம் அவர்கள் தமது ஆகஸ்ட்டுப் போராட்டத்தை நிறுத்தி விட்டார்.

என்னைக்கூடச் சேர்த்துக்கொள்வதாகச் சொன்னார் அழைப்பு வருமென்று எதிர்பார்க்க வேண்டாம், சேருக! சீர் பெறுக! என்றார் நானும் நீயும் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அவர் கூறிடும் எல்லைப்போர் நடைபெறட்டும், தமிழரின் தொல்லை ஒன்றுக்கு முடிவு தெரியட்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பிடிமண் அள்ளிப் போட்டு விட்டார், செங்கோலார்.

தக்க காரணம் உண்டு கேண்மினோ! என்றும் அறிக்கைவிடுகிறார்.

நேரு பண்டிதரிடமிருந்து அவருக்குக் கடிதம் வந்திருக் கிறதாம் - கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னைக் கேட்காதே தம்பி, அவரே கூறவில்லை. இரகசியம் இருக்கு மல்லவா! பாரதத்தின் தலைவரும் தமிழ்மாநிலத்தின் தலைவரும் நடத்திக்கொள்ளும் கடிதப் போக்குவரத்து என்ன சாதாரண மாகவா இருக்கும், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்குக் கூற! ஏதேதோ இருக்கும். நேரு பண்டிதர் கெஞ்சி இருக்கக் கூடும் - கொஞ்சி இருக்கக் கூடும் - எல்லைக்கு ஒரு போரா? ஏனய்யா தலைவரே! அதற்காக ஒரு குழு வேலை செய்ய இருக்கிறதே தெரியுமா? என்று கேட்டிருக்கலாம். என்ன இருக்கிறதோ கடிதத்தில், தெரியாது - கடிதம் பெரிய இடத்தது - எனவே விஷயம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணிக்கொள்வார்கள் என்று ம.பொ.சி. நம்புகிறார், மறுத்தீர் களோ, தமிழின்மீது ஆணையிட்டுவிடுவார்!

எப்படியோ ஒன்று, காண்போரும் கேட்போரும் மயிர்க் கூச்செறியும் நிலை பெற இருந்த மகத்தான வாய்ப்புப் போய் விட்டது - ஆகஸ்ட்டுப் போர் நிறுத்தப்பட்டுவிட்டது.

இவருடைய போர்ப் பிரகடனம், பிறகு அதை நிறத்தி விட்டதாகத் தரும் அறிவிப்பு இதைக் கவனிக்கும் போது, தஞ்சையில் மாணவத் தோழர்கள் நடத்திய கிளர்ச்சி என் நினைவிற்கு வருகிறது.

மாணவர்கள் அங்கு ஒரு தலைமை ஆசிரியர் சம்பந்தமாகக் கிளம்பிய பிரச்சினைக்காகக் கிளர்ச்சி செய்தனர்; இப்போது கிளர்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது - காரணம் மாணவர்களின் கோரிக்கையைக் கவனித்து குறையினைக் களைந்துவிடுவதாக ஊர்ப்பெரியவர்கள், பல கட்சிகளிலும் உள்ள பிரமுகர்கள் - கடிதம் கொடுத்து அல்ல - பொதுக்கூட்டம் போட்டு வாக்களித்தனர் தங்கள் கிளர்ச்சி பலன் தந்தது என்று மாணவர்கள் கிளர்ச்சியை நிறத்தி விட்டனர்.

ஆகஸ்ட்டுப் போராட்டத்தை அன்பர் சிவஞானம் நிறுத்தி விட்டாரே, அத்துடன், மாணவர்கள் தமது முயற்சியில் வெற்றிபெற்ற தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்படிப் பட்ட போர் அறிவிப்பாளர்களுடன் கூட இருப்பதைக் காட்டிலும், மாணவனாக இருப்பது எவ்வளவோ மேலானது என்று உனக்குத் தோன்றுகிறதல்லவா - எனக்கு அவ்விதம்தான் தோன்றுகிறது, தம்பி.

தம்பி, இதைவிட மகத்தான முறையிலே அகாலிகள் கிளர்ச்சி நடத்தி வெற்றிபெற்றுள்ளனர் - பதினாயிரம்பேர் சிறை புகுந்தனர் - நாலைந்து M.P. க்கள் பத்துப்பன்னிரண்டு M.L.A. க்கள் - இவர்களை நடத்திச் செல்ல தாராசிங் எனும் முதுபெரும் கிழவர். தடை உத்தரவை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தப்பட்டது - தடை உத்தரவை சர்க்கார் "வாபஸ்' பெற்றனர். கிளர்ச்சி நிறுத்தப்பட்டது - தாராசிங்கோ இன்னும் சிறையிலேதான் இருக்கிறார். அகாலிகள் நடாத்திய இந்த அரும்பெரும் போராட்டம்பற்றி அதிகம் தெரிந்திருக்காது நமது மக்களுக்கு - தாராசிங் பாஞ்சாலத்தில் இருக்கிறார் - அவருடைய போர் குறித்து இங்கு முழக்கம் செய்ய எந்த இதழும் இல்லை!

நமது நினைவெல்லாம் ஈர்த்திடக் தக்க வகையிலே, இரு கிழமைகளாக இங்கு புயலென வீசி வருவது, பெரியாரின் ஆகஸ்ட்டுக் கிளர்ச்சிதான்.

இந்தக் கிளர்ச்சி எந்த வகையில் உருவெடுக்கும் என்று கூறிடும் நிலை, மெல்லிய கோடுகளே தெரிவதால், இப்போதைக்கு, (அதாவது நான் உனக்குக் கடிதம் தீட்டும் போது) இல்லை. உன் கருத்து இக்கடிதத்தில் பதியும் நேரத்தில், பெரியாரின் கிளர்ச்சி, எந்தக் கட்டத்தை அடைகிறது என்பது தெரிந்து விடக்கூடும்.

தம்பி, இப்படி, போர்! போர்! என்ற முழக்கமும், போர் எப்படி எப்படி எல்லாம் இருக்கப் போகிறது தெரியுமா என்ற ஆர்வமூட்டும் அறிவிப்புகளும் கிளம்பி, என் உள்ளத்தை ஒரேயடியாகக் கிளர்ச்சி வயத்ததாக்கிவிட்டன.

பெரியாரின் ஆகஸ்ட்டுப் போரில் நாம் கலக்கவில்லை என்றாலும், போர் பற்றிய முழக்கம் கிளம்பியுள்ள இந்த வேளையில், என் மனமும் உன் மனமும்கூடத்தான், போராட்டங் களில் ஈடுபடும் வாய்ப்புகள் நமக்கெல்லாம் கிடைத்தபோது கண்ட அனுபவங்களைப் பற்றித்தானே எண்ணிடும்! இயற்கை அல்லவா!! நாம் திராவிடர் கழகமாக இருந்தபோதும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். முன்னேற்றக் கழகமாகி வெளிவந்தபோதும் போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். எனவே, எங்கும் போர்! போர்! என்று பரணி பாடப்படும் நேரத்தில், பழைய நாட் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக் மனத்திரையிலே பளிச்சுப் பளிச்செனத் தோன்றத்தான் செய்கிறது.

எனவே என் சிறை அனுபவங்களிலே சில உனக்குக் கூறுகிறேன் - உன் சிறை அனுபவத்தை எனக்குக் கூறிடுவாய், என்ற நம்பிக்கையுடன்.

அபிதான சிந்தாமணி
"நாலுமாதம்' என்றார் மாஜிஸ்டிரேட்! நாலு மாதம் என்று லேடி டாக்டர் கூறிடுவது கேட்டு மகிழும் ஆரணங்கு போலானேன். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி 1938-ஆச்சாரியார் ஆட்சிக் காலம் - என்மீது, குற்றம் புரியும்படி தூண்டிவிடுதல். உடந்தையாக இருத்தல் எனும் குற்றங்கள் - வழக்கு நடைபெற்று, அன்று சென்னை எழும்பூர் கோர்டில், நாலுமாதம் என்று தீர்ப்பளிக்கப்பட்டதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் உள்ளம் இவனுக்கு உண்டு என்று இயக்கமும் இயக்கத்தின் போக்கைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்களும் நல்ல தீர்ப்பு அளித்துவிட்டனர் - பரீட்சையில் தேறிவிட்டோம் என்றெண்ணினேன். விவரிக்க முடியாததோர் மகிழ்ச்சி - வெற்றி பெறுகிறோம் என்ற நம்பிக்கை.

சென்னைச் சிறையில், பெரியாருடன் ஒரே வரிசைக் கட்டிடத்திலே தங்கியிருக்க நேரிட்டதை ஒரு வாய்ப்பாகவே கொண்டேன்.

குற்றாலத்துக்கோ, கொடைக்கானலுக்கோ செல்பவர்கள், உள்ளே நுழைந்ததும், தனக்கு வேண்டியவர்கள் - இருப்பது கண்டால், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் - எனக்கு, உள்ளே நுழைந்ததும், வந்துவிட்டாயா? வா! வா( ஆறா, எட்டா? நாலா, மூன்றா?'' என்று கேட்டபடி நண்பர்கள் என்னிடம் அன்புடன் வந்தபோது, அதுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

மகிழ்ச்சியைத் தொடர்ந்து அனுபவிக்க முடியவில்லை. காரணம் வீட்டைவிட்டு இந்தக் கூட்டுக்குள்ளே வந்து விட்டோமே என்ற கவலையல்ல; போட்டுக்கொள்ளப் பொடியில்லை! என்ன செய்வேன்? உனக்குத் தெரியுமே, தம்பி! நான் அந்தக்கெட்டபழக்கத்துக்கு ஆட்பட்டு அல்லற்படுவது; கடை வீதியா, சண்முகம் கொண்டுவா, அம்பாய் வாங்கிவா என்று சொல்ல? சிறை!!

என் சங்கடத்தை அறிந்துகொண்ட அடிகள் "இது தானே வேண்டியது! இதோ'' என்று கூறி ஒரு சிறு காகிதப் பொட்டலம் கொடுத்தார் - பொடி'' நெடி குறைந்து போன நிலை! பக்குவமாகத்தான் மடித்து வைத்திருந்தார்; ஆனால், காகிதத்தில் இருந்ததால் பொடிபதம் கெட்டுக் கிடந்தது - எனினும் எனக்கிருந்த பசி, அசல் சண்முகம் இதனிடம் என்ன செய்யும் என்று களிப்புடன் கூறச் செய்தது. இந்தப் பொடிப் பொட்டலத்தை நான் என்றுமே மறப்பதற்கில்லை. முதல் சிறை அனுபவம் - மூக்குப் பொடிக்கே அலைய நேரிட்டது முதல் அனுபவமல்ல!

நாலு மாதமும் நாங்கள் அங்கு, தமிழ்! தமிழ்! தமிழ்! என்ற உணர்ச்சி வயமாகி இருந்துவந்தோம், பெரியாருடன் பன்னிரண்டு மணி நேரம் (இரவில்தான் தனித்தனியாகப் போட்டுப் பூட்டிவிட்டார்களே) ஒன்றாக இருக்க, பேச, கேட்க பழக அருமையான வாய்ப்பு. இரசமான விருந்து. சுவையுள்ள காலமாக அந்த நாலு மாதங்கள் இருந்தன.

சிறை செல்கிறேன் என்பதறிந்த என் கெழுதகை நண்பர் புலவர் அருணகிரிநாதர், அங்கு நிரம்ப நேரம் கிடைக்கும், பல்வேறு விஷயங்களைப் படிக்க இது தூண்டுகோலாக இருக்கும் என்று கூறி, என்னிடம் அபிதான சிந்தாமணி எனும் புத்தகம் கொடுத்திருந்தார். அவர் உனக்கு அவ்வளதாகத் தெரிந்திருக்கக் காரணமில்லை, தம்பி, பொதுவாழ்வுத் துறையிலே துவக்கக் கட்டத்தில் எனக்குற்ற தோழராக இருந்தவர் - அவரே ஒரு அபிதான சிந்தாமணி - மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருப்போம், பலபல விஷயங்களைக் குறித்து. எல்லா விஷயங்களைப் பற்றியும் ஏதேனும் ஓரளவுக்குக் கூறும் வகையான கல்வியும் கேள்வியும் படைத்தவர் - எனவே அவர், சிறையில் என்னோடு இருப்பது போலவே எனக்குத் தோன்றிற்று அபிதான சிந்தாமணியைப் படிக்கும் போதெல்லாம். அந்த "அபிதான சிந்தாமணி'யை நான் மறப்பதற்கில்லை. இப்போதும் "அபிதான சிந்தாமணி'யைக் காணும்போதெல்லாம், எனக்கு அந்த நாலு மாதக் கடுங்காவல் நினைவிற்கு வரும்; நினைவிலே அந்தச் சம்பவம் தோன்றியதும், எனக்குள்ளாகவே ஓர் மகிழ்ச்சி, கொள்கை! கொள்கை! என்று கொக்கரித்துக்கொண்டிருந்து விட்டு, அடக்குமுறை கிளம்பியதும் ஓடிவிடும் "கோழை உள்ளம்' இல்லை அழைத்தார்கள் அறப்போரில் ஈடுபட்டான், சிறைத்தண்டனை பெற்றான், என்று எவ்வளவு குரோத எண்ணம் கொண்டவர்களும் ஒரு சமயமில்லாவிட்டாலும் மற்றோர் சமயம் சொல்லிக் கொள்வார்களல்லவா! முதல்சிறை அனுபவத்தின்மீது அபிதான சிந்தாமணி, இரண்டாவது முறை என்ன தெரியுமோ? கேளேன் அதையும்.

ஆலாபனம்
ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலாகிவிட்டார்; சென்னை வருகிறார் பவனிக்காக; கூண்டோடு பிடிபட்டுச் சென்னைச் சிறையில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தோம் - 1948 இல்! நிர்வாகக் கமிட்டியினர் அவ்வளவு பேரும் - அதிகநாட்களில்லை - ஒரு வாரம்தான்! அதற்குள் ஆச்சாரியார் வந்தார், பவனி நடத்தினார், கருப்புக்கொடியை வெண்புறா பறக்கவிட்டுக் கொண்டு வானத்திலே வட்டமிடக் கண்டார், கட்டுக் காவல் பலமாக இருந்தும், அத்தனையையும் துளைத்துக் கொண்டு சென்று சிலர் கருப்புக்கொடி வீசிடக் கண்டார். நாங்கள் உள்ளே இருந்தோம். பெரியார் இருக்கிறார்; சம்பத்து அதுபோதுதான் ஆபத்தான டைபாய்டிலிருந்து விடுபட்டு அவன் துணைவி கண்டு பரிதாபப்படத்தக்க (இப்போது பயப்படுவதாகக் கேள்வி! உருவம் கண்டு!) நிலையில் எலும்புக்கூடாக இருக்கிறான். மற்றும் பலர் எல்லோரும்; குடும்பம் முழுவதும்; இருமி இளைத்து ஈளைகட்டிய நிலையில் இருந்த நமது மனதுக்குகந்த அழகிரிசாமி அண்ணன் உட்பட.

நானும் அழகிரி அவர்களும் அப்போது பக்கத்துப் பக்கத்து அறை.

இரவு நேரத்தில், எனக்கு விருந்து கிடைக்கும் - பக்கத்து அறையிலிருந்து,

"காணக் கண் கோடி வேண்டும்'' - என்று ஆரம்பிப்பார் ஓரடி பாட ! பலே! பலே! ஒன்ஸ்மோர்! என்று நான் இந்தப் பக்கத்து அறையிலிருந்து கூவுவேன்.

"தூங்கவில்லையா இன்னும் - அடே அப்பா! நீ தூங்கினால்தான் நான் பாட முடியும்; நான் பாடுவதைக் கேட்டு விட்டுக் காலையில் கேலி செய்ய நினைக்கிறாய் - இடங்கொடேன்'' என்பார். "அண்ணேன்! உண்மையாக நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் ஆலாபனையும் நடக்கட்டும்'' என்பேன் - அழகிரி அவர்களின் ஆலாபனமும் அருணசலக் கவிராயர் இயற்றிய கீர்த்தனையும் கிடைக்கும். இரண்டாம் முறையாகக் கண்ட சிறை அனுபவத்திலே எனக்குக்கிடைத்த இந்த ஆலாபனத்தையும், நான் எப்போதும் மறந்திட முடியாது. எப்படி முடியும்? எவ்வளவு சுவை என்கிறீர்கள் - நித்த நித்தம்!

அலாதியானதோர் வகையான சுவை கிடைத்தது மூன்றாம் முறை சென்றபோது - இதுவும் சில நாட்கள்தான் - இந்தச் சுவை, ஆறு பிஸ்கட்டுகளால், கிடைத்தது, அதைக் கேட்கிறாயா தம்பி, கூறுகிறேன்.

ஆறு பிஸ்கட்டுகள்
"ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்'' என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி, பெரியாரும் அதே நாளில், அதேவிதமான தண்டனை பெற்று, அதே சிறைக்கு வந்தார், இருவரையும் ஒரே போலீஸ் வானில்தான் ஏற்றிச் சென்றார்கள்.

திராவிடர் கழகமாக இருந்தபோது இப்படித்தானே நடந்திருக்கும், இதிலே என்ன ஆச்சரியம் என்று சொல்லுவாய், தம்பி! இது திராவிட முன்னேற்றக் கழகமாக நீயும் நானும் மாறின பிறகு, நடைபெற்ற நிகழ்ச்சி - 1949 இல்.

"ஆரிய மாயை' எனும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை.

"பொன் மொழிகள்'' தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.

திருச்சி கோட்டாருக்கு இப்படி ஒரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசைபோலும். இரண்டு தனித்தனி வழக்குகள்; தனித்தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் "தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது.

பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில், பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கைப் பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதை தொடர்ந்து, ஒரே வானில் ஏற்றிச் சென்றனர்; அதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டுவந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம்; எனக்கு உள்ளூரப் பயந்தான்!

கேள்விக்கணையுடன் நிறுத்திக்கொள்ளாமல், அன்புக் கணையையும் ஏவினால், என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். ஆனால் இடை யிடையே ஒரு தைரியம் எனக்கு; பெரியார் அவ்விதமெல்லாம் எண்ணமாட்டார் - அவர் மனதில் அந்த அளவுக்கு விரோதத்தைவடித்தெடுத்துப் பாய்ச்சிவிட்டிருக்கிறார், அந்த வித்தையிலே விற்பன்னர்; எனவே பயமில்லை என்றிருந்தேன்.

பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள், இங்கு சிறிது நேரம், அங்கு சிறிது நேரம். இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியேவர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்றுவிடுவேன்.

இப்படிப் பத்து நாட்கள்!!

நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் - முன் தினம் நடுப்பகலுக்கு மேல், ஒரு உருசிகரமான சம்பவம் நடைபெற்றது.

பெரியாருக்கு வேலைகள் செய்துவந்த கைதி என் அறைக்குள் நுழைந்து, "ஐயா! தரச்சொன்னார்'' என்று சொல்லி என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும், என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்த போது கண்ட காட்சிகளின்மீது சென்றது.

மறுநாளே திடீரென்று "விடுதலை' கிடைத்தது.

அந்த வேடிக்கையையும் கேள் தம்பி.

எங்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்ற செய்தி, உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே, வெளியே தெரிந்துவிட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச்செல்ல நண்பர்கள் வெளியே "முஸ்தீபுகள்' செய்யத் தொடங்கிவிட் டிருந்தனர். நமது கழகத்தார் முஸ்தீபுகளிலே மும்முரமாக ஈடுபட்டு, நேரத்தை மறந்துவிட்டனர்; எனவே, சிறைக்கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும், வாசற்படி அருகே, பெரியாரை அழைக்க வந்தவர்கள் கொண்டுவந்த "மோட்டார்' தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர்; இது போதாதென்று, "போட்டோ' எடுப்பவர் ஒருவர் ஓடிவந்தார் - இருவரும் அப்படியே, நெருக்கமாக நில்லுங்கள் என்று, போட்டோ எடுப்பவர்களுக்கே உரித்தான சாமர்த்தியத்துடன்கூறி, போட்டோவும் எடுத்துவிட்டார், அது வெளியிடப்படவில்லை; வெளியிடாதிருந்தது நல்லதுதான் என்றே சொல்லுவேன், அவ்வளவு திகைப்பு என் முகத்தில் இருந்தது, அவர் எப்படி இருந்தாரோ, எனக்குத் தெரியாது. வேதாசலம் அவர்கள் வீடுவரையில் சென்று, அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்.

கவனித்தாயா, தம்பி, எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தை.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு தனி அமைப்புக்குப் பெரியதோர் ஆபத்து, இந்தப் பத்து நாட்கள் என்று நண்பரொருவர் கூறினார். உண்மைதான். நான் அவ்வளவு சுலபத்திலே மனதைக் கரையவிட்டு விடுபவன்தான். ஆனால் பத்து நாட்கள் அவருடன் பேசி, மீண்டும் பழைய நேசத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு என்னைத் தட்டித்தட்டி அழைத்த போதும், நான் அந்தச் சபலத்துக்கு இடம் கொடுக்காமலிருந்தேன். காரணம் கிராதகன் என்பதல்ல, நான் ஒரு அமைப்புக்குப் பொறுப்பாளியாக்கப்பட்டு விட்டதால், நான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும், அந்த அமைப்பை உருக்குலைக்கக் கூடியதாக இருக்கக் கூடாது என்ற நேர்மையான எண்ணத்தினால்தான்.

நாலு சாக்லெட்!
மும்முனைப் போராட்டத்திலே ஒரு நாள், எனக்கு நண்பர் குருசாமியுடன் சேர்ந்து சிறையில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் சிறையில் கீழ்வரிசை அறையிலே தங்கியிருந்தார் - நான் தம்பிகளுடன் மேல் அறையில், மாடியில்! பார்! பார், இதிலே கூடக் கீழ்மேல் பேசுகிறான் என்று கூறிவிடப் போகிறார்கள். தம்பி, குருசாமிக்கு அப்போது உடல் நலம் இல்லை, எனவே மாடி ஏறவில்லை. அந்த ஒரே நாளில் எனக்குச் சுவையானதோர் அனுபவம் - அதையும் நான் மறப்பது இயலாது.

என்னைக் காண நண்பர் சிலர் வந்தனர் – அதே சமயத்தில் தோழர் குருசாமி அவர்களைக்காண தோழியர் குஞ்சிதமும், ரμயாவும் (விரைவில் டாக்டர்!) வந்திருந்தனர். சந்தித்தோம் - கம்பிகள் இடையில் ! கம்பிகள் மட்டுமா, அமைப்புகளே வேறு வேறு ஆகிவிட்ட நிலைமை. தோழியர் குஞ்சிதம் அவர்கள் நாலு சாக்லெட்டைத் தந்தார்கள்! அதைவிடச் சுவையுள்ள உணவு எனக்கு அவர்கள் இல்லத்தில் பலமுறை கிடைத்தது உண்டு. ஆனால், அந்த நாலு சாக்லெட்டுக்கு உள்ள சுவையே அலாதியானதல்லவா.

ஐயாயிரவர்
தம்பி! எனக்கு ஏற்பட்டது போன்ற பல்வேறு வகையான சுவையுள்ள சிறை நினைவுகளை இப்போது பெறக் கூடியவர்கள் ஐயாயிரம் தோழர்கள் உள்ளனர், நமது கழகத்தில்அவர்கள் இன்று ஒரு அமைப்பைக் கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தத்தமது தனி உணர்ச்சிகள், அமைப்பின் தரத்தையும் தன்மானத்தையும் உயர்த்துவதாக இருத்தல் வேண்டும் என்ற நேர்மையுணர்ச்சியுடன் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவம், சாதாரணமானதல்ல; நடாத்திய அறப்போரும் சாமான்யமானதல்ல.

நாம் அடக்குமுறைகண்டு அஞ்சுபவர்களா, அதனை எதிர்கொண்டு மார்பில் ஏற்றுக் கொண்டவர்களா என்பதை பெற்றுள்ள தியாகத் தழும்புகள் நமக்கெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன - பிறர் தரும் தீர்ப்புத் தேவையில்லை - நாம் பட்ட தடியடியும், சிறைவாசக் கொடுமையும், நினைவிலே எப்போதும் இருக்கிறது.

ஒரு பெரும் போராட்டத்தை நடத்திடத் தக்க அமைப்பு முறையும் ஆற்றலும் நமக்கு உண்டா? நாம் இப்போதுதானே பிரிந்து வந்து புதுப்பாசறை அமைத்திருக்கிறோம், என்ற அச்சமும் சந்தேகமும் எனக்கு இருந்தது - அதிலும் எங்கள் ஐவரை முதலிலேயே கூண்டுக்குள்ளே தள்ளி மூடிவிட்ட பிறகு, என் சந்தேகம் அதிகமாகிவிட்டது.

"சம்பத்து! சரியாக நடக்குமா. . . ?'' என்று கேட்பேன் ஆயாசத்துடன்.

"நீங்கள் உள்ளே வந்துவிட்ட பிறகு, கிளர்ச்சி நடப்பதற்குத் தங்கு தடை ஏது, ஜோராக நடக்கும்'' என்பான் குறும்புடன்.

"ஒரு ஐந்நூறு பேர் சிறைப்படுவார்களா?-'' என்று கேட்பேன் தைரியத்தோடல்ல. "ஐந்து நூறா. . . இருக்கும். . . ஆயிரம்கூட இருக்கலாம்'' என்று உற்சாகத்தை மெள்ளமெள்ள வரவழைத்துக் கொண்டு பேசுவார் நெடுஞ்செழியன்.

பத்திரிகைகளைப் பிரித்தோம், ஏ! அப்பா! நாம் சம்பந்தப் பட்ட இயக்கமா இது - என்று நான் ஆச்சரியப்பட்டேன் - பத்திபத்தியாக - பக்கம் பக்கமாக - கிளர்ச்சிச் செய்திகள் - நூறு, ஐந்நூறு, ஆயிரம், இரண்டு, மூன்று என்று வளருகிறது ஐயாயிரம் என்று சொல்லத் தக்க அளவிலே வளர்ந்தது. தடியடி பட்டோர், துப்பாக்கிக் குண்டடிபட்டோர், என்ற வகையில் செய்திகள் உருவெடுத்தன. தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய பூபாகம் முழுவதிலுமே, இந்தக் கிளர்ச்சி பற்றிய பரபரப்பான செய்தியைத்தான் கவனித்தன. அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் "செய்தி' வெளிவந்தது என்றால், பார்த்துக்கொள் தம்பி, கிளர்ச்சி எந்த அளவு வலுத்து இருந்தது என்று.

தம்பி! எந்தப் போராட்டத்தையுமே தங்கள் போராட்டத் துக்குச் சமமாகாது என்று எண்ணி, ஏளனம் பேசுவதும், தாங்கள் துவக்கும் போராட்டத்திலேதான் மற்றவர்கள் வலிய வலிய வந்து சேரவேண்டுமே தவிர, பிறர் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதோ, அது முடியாது என்றால் இன்முகம் காட்டுவதோகூடத் தேவையில்லை, என்றும் பேசுபவர்களல்லவா, கம்யூனிஸ்டுகள். அந்த அதி தீவிரக் கட்சியின் தலைவர்களிலே இருவர், ங.க.ஆ-க்கள். மணலி கந்தசாமியும், ஈரோடு கே. டி. ராஜு அவர்களும் சிறையில் என்னைச் சந்தித்து, வெளியே நடைபெறும் நமது போராட்டம் பற்றித் தங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை, பாராட்டுதல் ஆகியவைகளைத் தெரிவித்துச் சென்றனர் என்றால், கிளர்ச்சியின் தன்மை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அன்புள்ள,

31-7-1955.