அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பற்று - (1)
2

இஃதேயன்றி, தொழிற்பற்று, கலைப்பற்று, சமூகத் தொண்டில்பற்று என்று பல உள.

இனி, இந்த வகையான "பற்று', ஒன்றுக்கொன்று இணைந்துள்ளனவா மோதிக் கொள்கின்றனவா என்பது குறித்தும், இவைகளில் முதலிடம் முன்னிடம் எதற்கு, எங்ஙனம் வரிசைப்படுத்துதல் என்பது பற்றியும், இவைகளில் ஏதேனும் ஒரு "பற்று' அரசோச்ச மற்றப் "பற்று' அடிமையாகிவிடுவது அடுக்குமா என்பது குறித்தும் தெளிவு பெற்றிட வேண்டும்.

மார் தட்டிக் கூறிடலாம், "பற்று' எனக்கு இதிலேதான் என்று. ஆனால், மற்ற வகையான பற்றினைச் சுட்டிக்காட்டி, இதிலே பற்று இல்லையா என்று கேட்டிடுவரேல், பதில் கூறல் எளிதல்ல.

இத்தனை வகையான "பற்று' ஒன்றோடொன்று மோதிடாமல் இருந்திடவும் வேண்டும், ஒன்றினைப் பெற்றிடுவதால் மற்றொன்றைக் கட்டாயமாக இழந்திட வேண்டிய நிலையும் ஏற்பட்டுவிடக் கூடாது.

"உயிரின் மீது உனக்கு பற்று இருக்குமானால், உடைமையைக் கொடுத்துவிடு'' என்று மிரட்டல் பேச்சும்,

"உடைமை மீது உள்ள அடக்கமுடியாத பற்றுக் காரணமாக அவன் எதனையும் - மானத்தைக் கூட இழந்திடச் சம்மதித்தான்.'' என்ற பேச்சும் எழுவதனைக் கேட்டிருக்கிறாய்.

"மகன் மீது அவனுக்கு அத்தனை "பற்று'! அதனால்தான் அவன் "கொலை' செய்யக்கூடத் துணிந்தான்.'' என்று வழக்குகளின்போது வாதாடுவதாகக் கதைகளில் எழுதப்பட்டிருக்கக் காண்கிறோம்.

ஆகவே, "பற்று ஒன்றுக்காக வேறோர் "பற்று' இழந்திட வேண்டும் என்ற நிலையும், ஒரு "பற்று' நீக்கிக் கொண்டால்தான் மற்றோர் வகையான "பற்று'க் கொண்டிட முடியும் என்ற நிலையும் உண்டு.

"தன் சுகம், நன்னலம் என்பதிலே உள்ள "பற்று' போக்கிக் கொண்டல்லவா, தாய் தன் மகவு வளர்ந்திட வழி செய்கிறாள்! மகவிடம் தாய்க்கு உள்ள "பற்று' தனது நலனிலே உள்ள "பற்று' விட்டுக் கொடுத்துவிடத் தக்கது என்று உணர்த்துகிறது.

படக் கதைகளிலே பார்த்திருப்பாயே, தம்பி! கெடுமதி யாளன், கருவிழியாளைப் பெற எண்ணி, பிடித்திழுத்து வந்து அவள் கற்பினைச் சூறையாட முனையும் வேளை, அவள் அவனைக் குத்திக் கொல்ல முயன்று தோற்று, துடி துடித்து, பிறகு அந்தக் கத்தியாலே தன்னைத்தானே குத்திக் கொண்டு இறந்துபடத் துணிகிறாள்; தூய கற்பின் மீது உள்ள "பற்று' சாகும் துணிவையும் கொள்ளச் செய்கிறது. ஆனால், அதேபோது காமவெறியன், தொட்டிலில் கிடந்திடும் அவள் மகவைத் தூக்கி வைத்துக் கொண்டு, எனக்கு இணங்கிவிடு! இன்பம் தந்திடு! இல்லையெனில், நீ பெற்ற இம்மகவை, உன் இன்பப் பெருக்கை, உன் குல விளக்கை, இதோ, இந்தச் சுவரினிலே வீசிக் கொன்றிடுவேன், கண்டிடச் சம்மதமா! என்று கேட்டு இடி இடியெனச் சிரித்திடுகிறான்.

ஒரு "பற்று'க்கும் மற்றோர் "பற்று'க்கும் கடும் போர்! காரிகை தனக்குள்ள பற்றுகளிலே, எது காப்பாற்றித் தீர வேண்டிய பற்று என்பதனைத் தீர்மானித்தாக வேண்டும்.

படக் காட்சிகளிலே, கெடுமதியாளனின் மிரட்டலால் இத்தகைய இன்னல் வந்திடும்; வாழ்க்கையிலேயோ நித்தம் நித்தம் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற "மனப் போராட்டம் நிகழ்ந்தபடி இருக்கிறது! எது விடப்படுகிறது எது கொள்ளப் படுகிறது என்பதனைப் பொறுத்து, அவன் எதனை விட்டுக் கொடுக்கவே முடியாத "பற்று' என்று கருதுகிறான். எதனைப் பரவாயில்லை விட்டுக் கொடுத்துவிடக் கூடியதே' என்று கருதுகிறான் என்பது விளக்கமாகிறது.

மனப் போராட்டத்தில் ஈடுபடுவோரின், தரம், இயல்பு சூழ்நிலை ஆகியவைக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படுகிறது.

ஆகவே, "பற்று' பலவகைப்பட்டன என்பதுடன், பல விதமான "தரம்' உள்ளன என்பதும், அவரவரின் நோக்கம் இயல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, "பற்று'களை அவர்கள் தரம் பிரித்துக் கொள்கிறார்கள் என்பதும் புரிகிறது.

இன்ன "பற்று'த்தான் எல்லாவற்றினுக்கும் மேலானது, உயர்வானது, தரம்மிக்கது என்று பண்டங்களுக்குத் தரம் பிரித்து "முத்திரை' பொறித்து விடுகின்றோமே, அதுபோல "பற்று'களைத் தரம் பிரித்து முதலாவது, அடுத்தது அதற்கு அடுத்தது என்று அறுதியிட்டுக் கூறிட எளிதில் முடியாது. தரம் பிரித்து முத்திரை பொறித்துள்ள நிலையிலேயே கூட, பண்டங்களின் உண்மையான தரம் கெட்டிருப்பதனையும் கெடுத்துவிடப்பட்டிருப்பதனையும் முத்திரைக்கும் பொருளின் தரத்துக்கும் உண்மையான பொருத்தம் இல்லாதிருப்பதையும் காண்கின்றோம், இந்நிலையில், "பற்று' பற்றித் தரம் பிரிப்பது எளிதானதல்ல. ஆனால் பலகாலமாக நிலைத்து நிற்பது, அறிவாளர்களின் ஒப்புதலைப் பெற்றது, மிகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது என்ற காரணங்களைக் கொண்டு "பற்று'களுக்குத் "தரம்' கிடைத்திடும், அவ்விதமான தரமுள்ள பற்று என்றுதான்,

நாட்டுப்பற்று
இனப்பற்று
மொழிப்பற்று
மதப்பற்று

என்பனவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள், இவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாதிருக்கும் நிலை வேண்டும்! மோதிக் கொள்ளுமானால் மனத்திற்கு உளைச்சல், சமூகத்திலே கிலேசம், கலகம், புரட்சி ஆகியவைகூட ஏற்பட்டுவிடக்கூடும். ஏனெனில், இந்தப் "பற்று' மற்றவைகளைக் காட்டிலும் ஆழமாகப் பதிந்திருப்பவை. அழுத்தமாகிவிட்டிருப்பவை; எவரும் எளிதிலே விட்டுவிட ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எதையும் விட்டுக் கொடுத்துவிடுவேன்; பொன்னும், பொருளும் இழந்திடத் தயார்! ஆனால், பிறந்த நாட்டை மட்டும் இழந்திட மாட்டேன். பெற்ற தாயினும் பிறந்த நன்னாடு நனி சிறந்தது என்று எழுச்சியுடன் பேசிடுவர். எவரும், பேசுவது மட்டுமல்ல, நாட்டுப்பற்று காரணமாக உயிரையும் துச்சமென்றெண்ணி, நெருப்பாற்றில் நீந்திடுவது போன்ற இன்னலை ஏற்றுக் கொண்டவர்கள் கோடிக்கணக்கில். நாடு காத்திட, நாடு மீட்டிட, நாட்டைத் தாக்கிடும் பகைவனை ஓட்டிட, கொட்டப்பட்ட குருதி கொஞ்சமல்ல. வீடிழந்து வாழ்விழந்து, காடுமேடு சுற்றி, குகைகளில் பதுங்கி, மிருகங்களைப் போல வேட்டையாடப் படுவதையும் சகித்துக் கொண்டு, நாடு மீட்டிடப் பாடுபட்டோரின் தொகை ஏராளம். நாட்டுப்பற்று மற்ற எல்லா ஆசாபாசங்களையும் விரட்டிடும் வல்லமை கொண்டது; வீரத்தை ஊட்டிடும் வல்லமை கொண்டது; விழியிலே ஓர் ஒளி, நடையிலே ஓர் முறுக்கு, பேச்சிலே ஒர் எழுச்சி கொண்டிட வைப்பது கவிஞர்களின் இதயத்தில் நல்லிடம் பெற்றிடுவது. காரணம் கேட்டிட மாட்டார், பலாபலன் பார்த்திட மாட்டார், விளைவு குறித்து எண்ணிட மாட்டார், நாட்டுப் பற்றுக் கொண்டு விடுதலைப் போர் தொடுத்திடுவோர்.

மற்ற பலவிதமான "பற்று'களைவிட, மிக எளிதாக மனத்தை வயப்படுத்தக் கூடியதும் மிகப் பெரும்பாலானவர்களை ஆட்கொள்வதும், பன்னெடுங்காலமாக நிலைத்திருப்பதுமான "பற்று' நாட்டுப்பற்று!

பேரறிவாளர் சிலர் இந்த நாட்டுப்பற்று மட்டும் போதாது, உலகப்பற்றும் வேண்டும் என்றும், நாட்டுப் பற்று எனும் உணர்ச்சி காரணமாக, ஒரு நாடு மற்றோர் நாட்டுடன் மோதிக் கொண்டிடும் நிலை, உலக அமைதியைக் கெடுத்து, மனிதகுல வளர்ச்சியை நாசமாக்குகிறது என்றும், ஆகவே, "நாட்டுப்பற்று' எனும் குறுகிய பிடியினின்றும் விடுபட்டு, சர்வதேச நோக்கு - உலகப் பொது நோக்கு - எனும் உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

"ஒரே உலகம்' என்பதனைத் தத்துவமாக்கி, வெண்டல் வில்க்கி எனும் அமெரிக்கத் தலைவரொருவர், ஏடுகூட எழுதினார்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் - என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் நெறி அறிவித்திருந்தனர்.

நாட்டுப்பற்று முற்றிட முற்றிட, தனது நாட்டுப் புகழ்க்கொடி எங்கும் பறந்திட வேண்டும், எந்த நாடும் தனது சொந்த நாட்டின் ஆதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, சொந்தநாடு செழித்திட, அங்குச் செல்வம் கொழித்திட, பிற நாடுகளை அடிமை கொள்வதும், சுரண்டுவதுமான கொடுமைகளையும் கூசாது செய்திடும் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

என் நாடு - என் நாட்டரசு - பல நாடு என் நாட்டிற்குப் பணிந்துள்ள - என் நாட்டரசு பேரரசு ஆகிவிட்டது - வல்லரசு ஆகிவிட்டது - ஆதிபத்திய அரசு ஆகிவிட்டது - சாம்ராஜ்ய மாகிவிட்டது - இதே போக்கிலே முனைந்து சென்றால் அண்டத்தையே கட்டி ஆண்டிடத்தக்க வல்லமை எனது நாட்டுக்கு உண்டு என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிடும் என்று வேகமான உணர்ச்சி மனத்திலே புகுந்து குடைந்திடும்.

நாட்டுப்பற்று காரணமாக, நாட்டின் வளத்தைப் பெருக்கி, எழிலைக் கூட்டிடத் தலைமுறை தலைமுறையாக உழைத் துள்ளனர் மக்கள்.

இயற்கையாக அமைந்திருக்கும் ஒரு பூபாகத்தை, நாடு என்ற அமைப்பு ஆக்குவதற்காகச் செலவிடப்பட்ட நேரம், வெறும் ஆண்டுக் கணக்கிலே அடங்குவதல்ல; நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன; அறிவாற்றலைக் காட்டியவர்கள் உழைப்பினைக் கொட்டியவர்கள் சில ஆயிரவர் அல்ல; பல தலைமுறையினர்!

இயற்கை தந்த செல்வமே பூபாகம் - அதிலே காணக்கிடக்கும் மற்றவை. ஆனால், மனிதனின் அறிவாற்றலால் தான் அந்த இயற்கைச் செல்வம் பயன் மிகுந்திடத்தக்க விதமான அமைப்பினை, வடிவத்தினைப் பெறுகிறது. நாடு என்ற பெயர் பொருத்தமாகிறது.

முழுவதும் காடாக இருந்த நிலை மாற்றப்பட்டு, காடு, கழனி, ஊர், நீர்நிலை எனும் பிரிவு கொண்டதாக அமைப்பு ஏற்பட்டிட மட்டும் எத்தனையோ நூற்றாண்டுகள் திறமையுடன் திட்டமிட்டு உழைத்திருக்க வேண்டும்.

கட்டுக்கடங்காத காட்டாறுகள் பூபாகத்தை வெள்ளக் காடுகளாக்கி வந்த நிலையினை மாற்றி, கட்டுக்குக் கொண்டுவந்து, ஆறுகள் பாசனத்துக்கும், போக்குவரத்துச் சாதனத்துக்கும் பயன்படத்தக்கதாக மாற்றி அமைக்கப்படுவதற்கு மட்டும் நுண்ணறிவு மிக்கோரும், தோல்விகண்டு அஞ்சாதோரும், உழைத்திடத் தயங்காதோருமான பல்லாயிரவர் பற்பல ஆண்டுகள் பணியாற்றியிருந்திருக்க வேண்டும்!

கடலும் ஆறும், காடும் மேடும், தருக்களும் உயிரினங்களும் இயற்கை அளித்த செல்வங்கள். ஆனால், இந்தச் செல்வங்களை அதன் போக்கிலே விட்டு விட்டிருந்தால், ஒன்றை ஒன்று அழித்துக் கொள்ளும் நிலையோ, ஒன்றுக்கொன்று வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாத நிலையோதான் ஏற்பட்டு விட்டிருந்திருக்கும். நாடு ஒரு வாழ்விடம் என்ற நிலை கிடைத்திருக்காது.

பழுது பார்க்கப்படாத வீடு இடிபாடு ஆகிவிடுவதையும், பதப்படுத்தப்படாத வயல் காடாகி விடுவதையும், ஒழுங்குப் படுத்தப்படாத நீர்நிலைகள் அழிவிடங்களாக மாறிவிடு வதனையும் காண்கின்றோம். வீடு, வயல், ஆறு, குளம் என்று வடிவங்கள் பெற்ற பிறகே, வசதியாகப் பூபாகம் மாறிற்று. இந்த "வசதி' கிடைத்திட உழைத்தவர்கள், அவர்தம் வழி வழி வந்தவர்கள், தாம் வாழ்ந்திடும் நாடு தமது உழைப்பின் உருவம் என்பதனை உணரும்போது, ஓர் "பற்று' இயல்பாகவே ஏற்பட்டுத் தானே தீரும்?

இயற்கை, கடலின் அமைப்பையும், மலை, குன்றுகள் கணவாய்கள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றினையும் ஆறுகளின் போக்கையும், விளைவனவற்றினையும், புதை பொருளாக உள்ள கனி வகைகளையும் தந்திட்டது. ஆனால், மனிதன் தன் வசதிக்காக, எடுத்துக் கொண்ட ஓயாத உழைப்பின் காரணமாகவே கடலோரத்தில் துறைமுகங்களையும் ஆற்றை ஒட்டி வாய்க்கால்களையும் துறைகளையும், போக்குவரத்துக்கான பாதைகளையும், மலைகளைக் குடைந்துகூட வழிகளையும், தன்னாலே விளைந்திடுவனவற்றை வகைப்படுத்தியும், மிகுதியாக்கியும், புதைந்துள்ளனவற்றை வெட்டி எடுத்து விதவிதமாகப் பயன்படுத்திப் புதுப்பொருள்களை உண்டாக்கியும், நாடுகள் கண்டான். இயற்கை, வண்ணக்குழம்பு தந்ததென்றால், மனிதன் அதனைக் கொண்டு வனப்பான ஓவியம் தீட்டினான்.

எனவேதான், தமது திறனாலும் உழைப்பாலும் அமைந்த நாடுகளிடம் அந்தந்த நாடுகளில் உள்ளவர்களுக்குப் "பற்று' ஏற்படுகிறது.

இதற்கிடையில், இயற்கை சீறுவதாலோ, வேறு மக்கள் பாய்வதனாலோ அழிவு மிரட்டிக் கொண்டு கிளம்பும்போது, தடுத்திட, நாட்டைப் பாதுகாத்திட, பலவிதமான இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் எண்ணிக்கையிலடங்கார்.

இதுபற்றிய குறிப்புகள், பேச்சளவிலிருந்து பாட்டளவாகி, வரலாற்று உருப்பெற்று, வழிவழி வந்திடுவோருக்கு உணர்வூட்டி, இது என் நாடு! இந்த எனது நாட்டிடம் எனக்குள்ள "பற்று' இம்மியும் குறைந்திடுமேல், நான் நல்லோன் ஆகேன், நாடும் காடாகிடும் என்ற எண்ணம் பிறக்கிறது, உறுதி ஏற்படுகிறது; நாட்டுப்பற்று எனும் நல்லுணர்ச்சி வலிவுமிக்கதாகிறது; அந்த உணர்ச்சிக்கு அடுத்ததாகவே மற்ற உணர்ச்சிகள் இருந்திட வேண்டும் என்பது தத்துவம் ஆகிறது.

தத்துவமாக மட்டும் இது நின்றுவிடுவதில்லை. எழுச்சியூட்டத்தக்க படைப்புகள் மூலம் கற்றறிவாளர் நாட்டுப் பற்று ஊட்டுகின்றனர் - மக்கள் சொக்கிப் போகும்விதமான சுவை கூட்டி.

மலை, காடு, ஆறு, நகர், விளைநிலம், தொழில் ஆகியவை குறித்து, ஒவ்வோர் நாட்டிலும், எழுச்சியூட்டத்தக்க கவிதைகள் இயற்றப்படுகின்றன. காவியங்களிலேயும் இவை பற்றிய ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களே கூடத் தீட்டப் படுகின்றன. இவற்றின் மூலம் அவரவர்க்கும் தத்தமது நாட்டின் எழில்பற்றியும் ஏற்றம் பற்றியும் ஒரு பெருமித உணர்ச்சி ஊட்டப்படுகிறது.

எமது மலைமுகடும் மேகமும் கொஞ்சிடும் அழகே அழகு என்றும், எமது ஆறு புரண்டோடி வரும்போது எழும்பிடும் ஓசை, வெற்றி முரசொலி போன்றுளது என்றும், எமது வயல்களின் செழுமைபோல வையகத்தில் வேறெங்கும் கண்டிட முடியாது என்றும் கூறிக் கூறிக் களித்திடுகின்றனர் - தலைமுறை தலைமுறையாக இந்தப் பெருமித உணர்ச்சி மூலம் நாட்டுப்பற்று வளர்ந்திட மேலும் வழி கிடைக்கிறது.

இந்தக் குன்றின் சரிவிலே நடைபெற்ற பயங்கரப் போரின் போது என் முன்னோரில் ஒருவர் வீரதீரம் காட்டிப் போராடி, எதிரிகளை விரட்டி விரட்டி அடித்தார்; ஆனால், பகைவர்கள் பின்புறமாகப் பாய்ந்து வந்து அவரைக் குத்திக் கொன்று விட்டனர். நமது கொடிமரத்துக்குப் பக்கத்திலேயே வீழ்ந்து இறந்தார். அங்கு ஒரு நினைவுச் சின்னம் இருக்கிறது என்பன போன்ற நிகழ்ச்சிகளை, நினைவுகளைக் குறித்துப் பேசிக் கொள்ளும் இல்லங்கள் எண்ணற்றன!

அந்த ஆற்றங்கரை ஓரம்! இந்தத் தோப்பின் பக்கம்! அந்தக் கோயிலுக்கு அருகே - என்று வீரம் பூத்திட்ட இடங்களைக் காட்டிக் காட்டிப் பெருமிதம் கொண்டிடுவோர் ஆயிரமாயிரம்.

கட்டப்பட்ட கோட்டைகள், அமைக்கப்பட்ட அரண்கள், வெட்டப்பட்ட அகழ்கள் பற்றியெல்லாம் பேசிடுவர். பெற்ற விருதுகள், மானியங்கள் பற்றிப் பேசுவோரும், பட்ட இன்னல்கள், ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசுவோரும் நிரம்ப.

காவியம் - ஓவியம் - கவிதை - வரலாறு - சின்னங்கள் - ஒரு நாட்டின் பெருமையைப் பெற்றிட மக்களாற்றிய அரும் திறன் மிக்க பணி பற்றிய உரையாடல் நாட்டுப் பற்றினை வலுப்பெறச் செய்கிறது; வலுப் பெறுவதுடன் அந்தப் "பற்று' வழி வழி வருகிறவர்களுக்குக் கிடைத்துக் கிடைத்து "நெறி'யாகிவிடுகிறது; இயல்பான உணர்ச்சியுமாகிவிடுகிறது.

என் நாடு, என் மூதாதையர் உருவாக்கிய நாடு, என் உழைப்பால் வளப்படுத்திய நாடு. ஆகவே, எனக்கு என் நாட்டிடம் பற்று இருக்கிறது, இது இயற்கை - கடமை - பிறப்புரிமை - என்ற உணர்ச்சி, நாட்டு ஆட்சி முறை எவ்விதமானதாக இருப்பினும் ஏற்படக் கூடியதுதான். ஆனால், இந்த நாட்டுப் பற்று அழுத்தமானதாகவும், எத்தகைய இழப்புகளையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளும் துணிவினைத் தரத் தக்கதாகவும், இருந்திடுவது, எந்த நிலையில் என்றால், நாட்டு நிலையினை உயர்த்திடவும், பாதுகாத்திடவும் பாடுபடவும், கருத்துரைக்கவும், அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் முயற்சிகளில் பங்கு பெறவும், தவறானவைகளைக் கண்டிக்கவும் உரிமை தரப்பட்டுள்ளபோதுதான்.

இது என் நாடுதான், என் முன்னோர்களின் இரத்தமும் என் வியர்வையும் இங்குக் கொட்டப்பட்டிருக்கிறது. என் உயிரினும் மேலாக நாட்டை நேசிக்கிறேன். ஆனால், என்னை நடைபிணமாக்கி, உரிமைகளை அழித்து உலுத்தர்களைக் கொழுத்திடச் செய்திடும் விதமாக ஆட்சி நடத்துகிறார்கள், யாரோ சிலர் - அவர்களின் சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் நாட்டுச் செல்வம் ப-யிடப்படுகிறது; மக்களுக்கு உணவளிக்கத் தேவைப்படும் வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன. ஆனால், பாசனத்துக்குப் பயன்படுத்தப் பட வேண்டிய ஆற்று நீரை மடக்கி அரச குடும்பத்தினர் விளையாட அழகுக் குளம் அமைத்திருக்கிறார்கள்! நாட்டு மக்கள் கந்தலாய் உடுத்து கிறார்கள், நாடாள்வோரும் அவர்தம் அடிவருடிகளும் பட்டு பீதாம்பரம் உடுத்திக் கொண்டு பவனி வருகிறார்கள்! நாட்டு மக்கள் மூச்சினை அடக்கி மூழ்கிச் சென்று கடலிலிருந்து முத்து எடுக்கிறார்கள். அந்த முத்து மாலைகள் காமவல்லிகளின் கழுத்திலே புரளுகின்றன, அவர்கள் நாடாள்வோரின் மஞ்சத்திலே புரள்கிறார்கள் - இந்த நாடு என் நாடு - ஆனால், இது எனக்கும் சொந்தந்தான் என்று ஒப்புக்கொள்ள மறுத்திடும் மமதையாளரின் பிடியிலே சிக்கிக் கிடக்கிறது, சீரழிக்கப்படுகிறது - என்று குமுறிடும் நிலையில் ஒரு நாட்டு மக்கள் வைத்திருக்கப் படுவார்களானால், அந்த மக்களிடம் "நாட்டுப் பற்றுத் ததும்பிடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை; தலை அசைவு மட்டும்தான் கிடைக்கும்.

கொடுங்கோலர்கள் - எதேச்சாதிகாரிகள் - ஆட்டிப் படைக்கும் நாடுகளில், எவரும் விரும்பி மதித்திடும், இயல்பாகப் பெற்றிடும் நாட்டுப் பற்று மிக மிக மங்கிக் கிடந்திடும்.

ஆனால், மக்களாட்சி முறை உள்ள நாடுகளில் "நாட்டுப் பற்று' மிகுந்து காணப்படும். ஏனெனில், நாட்டு நிலையை உருவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற கடமை உணர்ச்சியும், நாட்டிலே கிடைத்திடும் வசதிகளில் நமக்கு உரிய பங்கு உண்டு என்ற உரிமை உணர்ச்சியும் அந்த மக்களுக்கு நிரம்ப ஏற்படுகிறது.

"யாரோ! ஆட்சி நடத்தும் இடம் அல்ல இது; "நாம்' ஆட்சியை அமைத்துள்ள நாடு இது; நம் நாடு - என்ற உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

அமைந்திடும் ஆட்சி நல்லதாக இருக்கிறதா அல்லவா என்பதற்கு நாமே பொறுப்பு என்ற எண்ணமும்,

ஆட்சி சரியான முறையில் நடத்தப்பட்டு வருகிறதா என்று கவனித்துக் கொள்ள வேண்டியவர்கள் "நாமே' என்ற உணர்வும்,

ஆட்சியை மாற்றி அமைத்திடும் உரிமை பெற்றவர்கள் "நாமே' என்ற உணர்வும் மேலோங்கி நிற்பது ஜனநாயக முறையிலேதான்.

ஆகவே "என் நாடு' என்ற சொற்றொடருக்கு எதேச்சாதிகாரிகளிடம் உள்ள நாடுகளிலே கிடைத்திடக் கூடிய பொருளைவிட, வலிவை விட, பொருத்தமான பொருளும், தளராத வலிவும், தன்னிகரற்ற துணிவும், ஜனநாயக நாடுகளிலே ஏற்படுகிறது.

ஒரே குடும்பத்து மக்களிலேயே ஆர்ப்பரிக்கவும் அடக்கி ஆளவும், அகப்பட்டதைச் சுருட்டவும் ஒரு அண்ணனும், அடங்கிக் கிடக்கவும், தரப்பட்டதைப் பெறவும் தம்பிகளும் இருந்திடின், அந்தத் தாழ்நிலை பெற்றவர்கள், "என் குடும்பம்' என்று பெருமிதத்துடன் பேசிட முடிவதில்லை. நாடு, ஒரு பெரிய குடும்பம்; சம உரிமை கொண்ட நிலையில் மக்கள் வாழ்ந்திடும் இடம். எனவே "நாட்டுப்பற்று' என்பது ஜனநாயக நாட்டினில், சுவையுடன் பயனும் மிகுதியாகப் பெறத்தக்க வலிவுமிக்க உணர்ச்சியாகிட வழி இருக்கிறது.

எந்த நாடு நான் பிறந்த நாடோ, எந்த நாட்டு வளத்திலே எனக்கு உரியன பெறும் உரிமை இருக்கிறதோ, எந்த நாட்டின் வடிவத்தை, அரசு முறையை, தொழில் அமைப்பை, சமூக நெறியை, மாற்றி அமைத்திடும் முயற்சியில் ஈடுபடும் உரிமை எனக்கு இருக்கிறதோ, அந்த என் நாட்டுக்கு வேறோர் நாட்டினால் ஆபத்து என்றால், நான் துடித்தெழாமல் இருந்திட முடியுமா! - இத்தகைய எண்ணம் கொழுந்துவிட்டெழுகிறது மக்கள் மனத்தில், ஜனநாயக நாட்டினில்.

ஜனநாயக நாட்டினில் ஆட்சி மக்களால், அமைக்கப்படுகிறது;

எதேச்சாதிகார முறையுள்ள நாடுகளில் யாரோ சிலரால் ஆட்சி அமைக்கப்படுகிறது.

அமைந்துவிடுகிற ஆட்சியிலே நல்லன கிடைக்கா விட்டால், மக்கள் அடிமை மனப்போக்கினர் ஆகிவிடக் கூடும். குமுறிக்கிடந்திடக்கூடும், அல்லது புரட்சி செய்திடக்கூடும்.

அமைக்கும் ஆட்சி நல்லது செய்திடாவிட்டால், அந்த ஆட்சியை அமைத்த மக்கள், தங்கள் தவற்றுக்காக, திறமைக் குறைவுக்காகத் தாமே வருந்திட வேண்டும்; மீண்டும் ஒரு முறை அவ்விதத் தவறு செய்திடக் கூடாது என்ற உறுதி மேற்கொள்ள வேண்டும்; வாய்ப்புக் கிடைக்கிறபோது புதியதோர் நல்லாட்சி அமைத்திட வேண்டும்.

ஆகவே, ஜனநாயக நாட்டில், நாட்டில் பிறந்தோம் நாட்டில் உழைக்கிறோம், நாட்டில் வாழுகிறோம் என்பதுடன் நாட்டில் ஆட்சியை நல்ல முறையில் அமைப்பவர்களும் நாமே என்ற பெருமித உணர்ச்சி கிடைக்கிறது; அஃது ஓர் புதிய வலிவினை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தருகிறது, அத்தகைய மக்களிடம் எழுந்திடும் "நாட்டுப்பற்று', நாடே பாசறையாகிட இல்லங்களெல்லாம் வீரக்கோட்டங்களாகிடச் செய்கிறது.

"பற்று'ப் பற்றி மேலும் சில கூற விழைகிறேன் - அடுத்த கிழமை.

அண்ணன்,

3-10-65