அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பேசட்டும், தம்பி, பேசட்டும்
2

அமைச்சர் அதிகாரம் இவருக்கு அளிக்கப்பட்டிருப்பதே இப்படி மறுப்புரைகள் பேசத்தான் என்பதும் நமக்குப் புரிகிறது.

ஆனால், மக்கள் அறிய விரும்புவது, இவருக்கு உள்ள அதிகாரம் எத்தகையது என்பது அல்ல; அவர்கள் இன்று நினைவுப் பரணையிலே, பல மாஜி அமைச்சர்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள் - வர்க்கியும் மாதவமேனனும், குருபாதமும் ஜோதியும், அவினாசியாரும் வேங்கடசாமியாரும், ராஜா ராமரும் பிறரும், அதிகாரம் பெற்றிருந்தவர்கள் - இன்று, . . . பார்மோசாக்களிலே வாசம்! கனம் சுப்பிரமணியம் அவர்கள் மட்டும் என்ன! கனமாவதற்கு முன்பு அவரை நாடு அறியாது; கனம் குறைந்ததும் நாடு நாடாது! எனவே, அவர் நமது குற்றச்சாட்டுகளை "அதிகாரபூர்வமாக' மறுக்க முனைய வேண்டாம். நமக்கு நல்லறிவு கொளுத்தவாவது புள்ளி விவரம் காட்டி மறுக்க முன்வரட்டும்! வக்கு ஏது அதற்கு? திருச்சிக் கூட்டத்துச் சுப்பிரமணியனாரை, பெரியநாயக்கன்பாளையத்தில் பேசிய சுப்பிரமணியனார், இழித்தும் பழித்தும், என்னே இச்சிறுமதி! ஏனோ இந்தக் கெடுமதி! இங்கொன்று அங்கொன்றா? உள்ளொன்று புறமொன்றா?- என்று இடித்து இடித்துக் கேட்பாரே!

ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை என்று திருச்சியில் பேசிய திருவாய், ஏன் பெரியநாயக்கன்பாளையத்திலே, வேறு விதமாக மென்றது என்று அறிய நாட்டார் விரும்புகிறார்கள். அங்கு அவர்,

வடநாடு சென்றறியாதவர்கள்தான், இப்படிப் பேசுகிறார்கள் என்ற பேசி, நம்மை நிந்திப்பதாக எண்ணிக் கொண்ட இவரை ஒத்த நிலையிலுள்ள பலரைப் பழித்துப் பேசுகிறார்.

வடநாடு செல்கிறர், இவர்; அறிவோம்: காவடி தூக்கிடும் கனம் செல்லவேண்டும் அடிக்கடி, அறிந்திருக்கிறோம். வடநாடு நாம் சென்றறியோம் என்று பேசி, தமது ஞான சூன்யத்தைக் காட்டிக் கொள்ளட்டும், குறுக்கிடவில்லை: ஆனால் நாம் போனதில்லை என்றே வைத்துக்கொள்வோம், அம்புஜம் அம்மையாரென்ன, அனுமந்தையா என்ன, கேசவமேனன், அன்னா மஸ்கரினீஸ், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனுவாசனென்ன, இவர்களெல்லாம் கண்டித்திருக்கிறார்களே வடநாட்டு ஆதிக்கத்தை - அமைச்சர் அப்போதெல்லாம், ஏன் வாயடைத்துக் கிடந்தார்!!

"தொழில் முறையில் சென்னை மாகாணம் பின்தங்கிய நிலையிலிருக்கிறது. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தின் கவனத்தைத் தென்பகுதி பெறவேண்டுமோ அந்த அளவுக்குப் பெறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை'' என்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது தமிழ் நாடு 24-6-55-இல்!!

அமைச்சர் என்ன பதிலளிக்கிறார் இதற்கு!! அடுக் கடுக்காக ஆதாரங்களைக் கொட்டிக் குவித்துக் காட்டி வருகிறோம். எதை மறுத்தார் - எதை மறுத்திட முடியும்? நாள் தவறாமல் வந்த வண்ணமிருக்கிறதே, நன்றாகப் படித்தவர் களையும் கவரும் வகையில்! எப்படி இதனைத் தடுத்திடப் போகிறார் வாய்ப்பறை கொண்டு ஊர்ப்பகை தேடிக்கொள்ளும் இந்த உத்தமர்!

காரமான ஒரு சிறு துண்டு தருகிறேன் - இப்போதுதான் பறித்தெடுத்தது அமைச்சர் பதவியைச் சுவைத்திடும் வாயால் இதையும் சிறிதளவு சுவைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இங்கு, மிளகாய் உற்பத்தி அதிகமாகிச் சரக்குத் தேங்கிக் கிடக்கிறது.

இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் அனுமதி டில்லிதான் தரவேண்டும்! ஆதிக்கம் அவ்விதம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மிளகாய்க்கு மட்டுமல்ல, எதற்கும் இதேதான் நிலைமை கிடக்கிறது, வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவு டில்லி நிர்ணயித்திருப்பது போதுமானதாக இல்லாததால்.

எனவே, டில்லி பாதுஷாக்களே! அருள் கூர்ந்து, மிளகாய் ஏற்றுமதியின் அளவைச் சற்றே அதிகப்படுத்தித் தருவீராக - என்று சென்னை வர்த்தக சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்ற செய்தி, அமைச்சர் தீப்பொறி பறக்கத் திருச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிவருகிறது ஜூன் 21ஆம் தேதிய பத்திரிகைகளைப் பார்க்கலாம் - தேசய இதழ்களையே!!

தென்னாட்டின்மீது வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது சான்று அல்லவா!

வடநாட்டு ஆதிக்கம் இருப்பது மட்டுமல்ல, இந்தச் செய்தி மூலம் தெரிவது.

வர்த்தக சபை கூறுகிறது. இங்கிருந்து மிளகாய் வெளிராஜ்யங்களுக்கு (வடக்கே உள்ள ராஜ்யங்கள் சென்று அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.)

தம்பி, தெரிகிறதா இதிலே காணப்படும் அக்ரமம்!

வெளிநாட்டுக்கு, மிளகாய் நாம் நேராக அனுப்ப முடியாது; டில்லி அனுமதிக்க வேண்டும்.

டில்லியோ, மிகக் குறைந்த அளவுதான் ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கிறது.

இங்கே சரக்குத் தேங்கிவிடுகிறது.

தேங்கிக் கிடக்கும் சரக்கை, வடநாட்டு ராஜ்யங்கள் இங்கிருந்து தருவித்துக் கொள்கின்றன.

அங்ஙனம் தருவித்திடும் சரக்கை, அந்த ராஜ்யங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை அனுபவிக்கின்றன.

"அனுகூலம் இங்குள்ள உற்பத்தியாளருக்கோ வியாபாரிக் கோ கிடைப்பதில்லை.'' என்று வர்த்தக சபை தெரிவிக்கிறது, நாசுக்காக. பச்சையாகக் கூறுவதானால், இங்குள்ள விவசாயி வயிற்றிலும், வியாபாரியின் வாயிலும் அடித்து, வடநாடு மிளகாய் ஏற்றுமதி மூலம் இலாபம் பெறுகிறது, என்பதுதான்!

இதற்கு என்ன பெயரிடுவது - பாரத்வர்ஷத்தின் விரிந்த பரந்த மனப்பான்மை என்றா? - நேரு சர்க்காரின் நேர்மை என்றா? - அல்லது அமைச்சர் பதவியை சுப்பிரமணியனார்கள் ஆண்டு அனுபவிப்பதற்காக, நாட்டு மக்கள் தரும் "முறிப்பணம்' என்பதா - என்ன பெயரிடச் சொல்கிறார் அமைச்சர் - எப்படி இந்த அக்ரமத்தைச் சகித்துக்கொள்ள முடியுமென்கிறார். வடநாடு தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தாமலிருந்தால், இந்த அநீதிக்கு இடம் ஏது?

மிளகாய் பற்றிய சம்பவம் காரம் அதிகம் கொடுத்திடும்; "கனம்' தாங்கமாட்டார். எனவே, தம்பி, அவருக்குச் சிறிது ருசியும் பசையும் உள்ள பண்டம் குறித்த சம்பவத்தைத் தருவோம்.

பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து, இங்கு, பருப்பு நவதானியம் தருவிக்கப்பட்டு வருகிறது. தம்பி! இதற்கு இரயில்வே வாகன்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஏன்? வாகன்களின் அளவு குறித்து அனுமதி அளித்திடும் அதிகாரம் அங்கே இருக்கிறது - டில்லியில்! இதனால் போதுமான அளவு வாகன்கள் கிடைக்காமல், திகைப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு வாங்கி வைக்கப் பட்டுள்ள சரக்கு, வாகன்கள் கிடைக்காததால், பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும் கிடைக்கின்றன - வெயிலும் மழையும், எலியும் பிறவும் பண்டத்தைப் பாழாக்குகின்றன - இங்கு மார்க்கட்டில் விலை சூடு பிடிக்கிறது, அங்கே வாங்கிய சரக்கு, முடமாகிக் கிடக்கிறது, ஏன் தம்பி! இந்த நிலை வரவேண்டும்? வடநாடு பார்த்து வைப்பதுதான் சட்டம், திட்டம் என்று இருப்பதால் தானே, வாகன் கிடைக்குமா என்று இங்குள்ளவர்கள் தவம் கிடக்கவேண்டி வருகிறது, வரம் தாருமய்யே என்று தென்னிந்திய வர்த்தக சங்கம் அறிக்கை மூலம் இறைஞ்சுகிறது டில்லியை! ஜுன் 21-ஆம் நாள் இதழில் இதையும் காணலாம்.

அக்ரமம், இன்னும் வெளிப்படையாகவே தெரிகிறது தம்பி, அந்த அறிக்கையில்.

பம்பாய் - கல்கத்தாவுக்கு மட்டும் வாகன்கள் தேவையான அளவு ஒதுக்கப்பட்டு சென்னை புறக் கணிக்கப்படுகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பதவியைச் சுவைத்திடும் மகிழ்ச்சியில், "கனம்' இங்கு நம்மீது காய்கிறார். பாய்கிறார்!

தம்பி! "கனம்' சைவரோ, சுவையும் சத்தும் தேவை என்பதற்காக "அன்னிய பதார்த்தம்' சாப்பிடுகிறவரோ, எனக்குத் தெரியாது - சைவராக இருந்தால் சிறிது நெடியாக இருக்கும்; இல்லையானால் நாவில் நீர் ஊறும், இப்போது தரப்போகும் சம்பவத்தைக் கவனித்தால்.

ராட்டு என்கிறார்கள் - இறா என்பார்கள் - அந்தக் கடற்கனி ஏராளமாகப் பர்மாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, திருவிதாங்கூர் கொச்சிப் பகுதியிலிருந்து, பெரும் அளவில். இதை நம்பி வாழும் மீனவர்கள் ஏராளம் - வியாபாரிகளும் உளர். இப்போது பர்மா சர்க்கார், இதற்கான அனுமதி வழங்கும் முறையிலே நட்டுத் திட்டம் கடுமையாக ஏற்பத்திவிட்டி ருக்கிறது; இந்த ஏற்றுமதி சிதைந்துவிட்டது. இதன் பயனாக இலட்சக்கணக்கான சிறியதல்ல குடும்பங்கள் அல்லற் படுகின்றன. பிரச்சினை சிறியதல்ல தம்பி! பண்டம் வேண்டுமானால், சாதாரணம் என்பர். எட்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்று கோடி ரூபாய் பெருமானமுள்ள பண்டம் தேங்கிக் கிடக்கிறது. அஜீத் பிரசாத் ஜெயின் எனும் வடநாட்டு மந்திரியிடம்தான் முறையிட்டுக்கொள்ள வேண்டிஇருக்கிறது. பர்மா போன்ற வெளிநாட்டுச் சர்க்காரிடம் பேசவும், வசதி வாய்ப்பு, சலுகை உரிமை இவைகளைப் பெறவும் இங்கே உள்ள அமைச்சர் அவைக்கு அதிகாரம் ஏது? எல்லாம் டில்லியப்பன்தானே! எதற்கும் டில்லியப்பன் துணையும் தயவும் இருந்தால்தான் நடக்கும். எனவே, அஜீத் பிரசாரத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறது, "ஐயனே! மீனவரைப் பாரீர்! அவர் குறை தீர்த்திட வாரீர்! பட்டினியால் வாடுகிறோம், பண்டம் பாழாகிறது, பிழைப்பிலே மண் விழுகிறது'' என்று கெஞ்சுகிறார்கள். "அப்படியா, உமக்குற்ற குறை பற்றி நாம் இனி எண்ணிப் பார்த்திடுவோம். எமது அண்டை நாடாம் பர்மாவின் இந்தப் போக்குக்க உள்ள காரணம் யாவை என ஆராய்ந்த பின், யாது செய்திடல் முறை என்பது பற்றி எண்ணித் துணிவோம்!'' என்று பேசுகிறார் அஜீத்! அவரா பேசுகிறார், வடநாட்டு ஆதிக்கம் பேசுகிறது!! திருச்சியில்பாருங்கள், திரிலோகமும் புகழும் சுந்தரன்! வீரன்! சூரன்! யானே.'' என்று கனம் பாடுகிறார்.

ராஜா சிதம்பரனார்,

"ஆமாம! இதை அறியேன் முன்னாலே.

"ஆகவே என் பிழை பொறுத்து ஆதரிக்க வருவீர், ஐயே!'' என்று "ட்யூட்' பாடுகிறார்!

செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லிச் சொல்லி, பெரும் பலன் கண்டனர் காங்கிரசார். "கப்பலோட்டிய தமிழன்'' வாழ்க்கைக் கலம் சுக்கு நூறாயிற்று. அந்தச் சோகக் காதையைக் கூறிக்கூறி, இன்று அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர்! இதோ கேள், தம்பி, ஒரு கப்பலின் கதை கூறுகிறேன்.

சென்னை-ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர்.

முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்திவந்த தொழில், சுதேசி இயக்க தத்துவம் காரணமாக, சிந்தியாவுக்குக் கிடைத்தது.

சிந்தியா கப்பல்விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக்கொண்டது.

இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும்.

இதிலே இங்கிருந்து, ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர் - கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது.

பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும்.

பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்குவரும்

மொத்தத்தில், தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து.

நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு பழுதாகிவிட்டது. புதுப்பிக்கப் பெரும் பொருள் செலவாகும், என்று கூறியும், சிந்தியா இப்போது இந்தக் கப்பலை நிறுத்திவிட்டது.

ஏழைக்கு இடி! சென்னை-ரங்கூன் வியாபாரத் தொடர்புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பி இருக்கிறது.

இனி, சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று, அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும்.

அந்தக் கப்பலில், ஏழைகளுக்கான "மேல் தட்டு' பிரயாணவசதி மலிவான கட்டண வசதி - அதிகம் கிடையாது.

இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும்.

பண்டங்களை அனுப்புவதிலும், பாரம் ஏறும்.

பாரம் ஏறினால், வடக்கே வங்கம், வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும் சரக்குடன், தென்னகத்துச் சரக்கு போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது.

இவ்வளவு இன்னல் இருக்கிறது! ஏன் என்று கேட்கவோ, சிந்தியா போனால் என்ன, இதோ ஒரு விந்தியா என்று கூறிக் காரியமாற்றவோ, சென்னையால் முடியாது! டில்லி கண் திறக்க வேண்டும்!

நஷ்டஈடு தந்து சிந்தியாவைத் தொடர்ந்து கப்பலை நடத்தச் சொல்லலாம்.

புதிதாகக் கப்பல் உதவலாம், அல்லது பழுது பார்க்க வசதி செய்து தரலாம்.

எதையாவது இந்திய சர்க்கார் செய்ய வேண்டும்.

தினமணியின் அழுகுரல் கேட்கிறது இதுபோல ஜுன் 23இல். ஏன் சிதம்பரனாரின் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் புனித புரியாக்கப்பட்டுள்ள தென்னகத்துக்கு, அந்த அவல நிலை, என்று நாம் கேட்கிறோம்? வடநாடு தென்னாட்டை அடிமைப் படுத்திற்றா? யார் சொன்னது? இதோ என்னைப் பாருங்கள், என்று கேட்கிறார். அமைச்சர் சுப்பிரமணியனார், "பார்க்கிறேன்! பெருமூச்சு எறிகிறேன்! பாவியேன் இந்தப் "பரிசு' கிடைக்குமா கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறேன்! கனமாகும் காலத்தை, கடவுளே! சீக்கிரம் தாருமே'' என்று மலைபோன்ற உடலை வில்போல வளைத்தபடி, வரம் கேட்கிறார். வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் "இன்சால்வென்ட்' போட்டிடும் போக்கில், தேர்தலின்போது மக்களிடம் அளித்திட்ட வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, சேற்றை வாரியும் நம்மீது வீசிட முற்பட்டிருக்கும் ராஜா சிதம்பரனார்! அந்தச் சிதம்பரனார் பிறந்த அதே நாட்டில் இப்படியும் ஒரு சிதம்பரனார்!

தம்பி! நமது கழகத்துக்கு நாட்டிலே வளர்ந்து வரும் செல்வாக்குக் கண்டு, ரோஷம் பொங்கி இப்படிப் பேசுகிறார் போலிருக்கிறது இந்த "கனம்' - ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் - துவக்கத்திலேயேதான் சொல்லிவிட்டாயே, காரணம் எனக்கும் தெரிந்ததுதானே - ரோஷக்காரராக இருந்திருந்தால் இவர் ஆச்சாரியாருடைய தொண்டரடிப்பொடி ஆழ்வாராக இருந்தபோது புகுத்திப் போற்றிப் பாராட்டிய குலதர்மக் கல்வித் திட்டத்தை, காமராஜர் கட்டளையிட்டதும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுச் சுடலைக் காசுபோலப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பாரா? "என் திட்டம் இல்லையா. அப்படியானால் நான் பதவியில் இரேன். நான் ரோஷக்காரன், கொங்கு வேளாளர் குடிப்பிறந்த எவரும், இப்படிக் குட்டக் குட்டக் குனிந்து கொடுத்து, எட்டுக் குட்டுக்கு ஆறணா எடு, ஆறுôறு முப்பத்தாறு இரண்டேகால், ரூபா. என்று கேட்கும் போக்கில் இருக்க மாட்டார்கள். அதற்கு வேறு ஆளைப் பாருமய்யா. நான் இதோ பதவியை விட்டுப் போகிறேன். கோர்ட் அழைக்கிறது, கொங்கு நாடு அழைக்கிறது, மானம் கட்டளையிடுகிறது, ரோஷம் குத்திக் குடைகிறது'' - என்று கூறியல்லவா, வெளி ஏறியிருந்திருக்க வேண்டும். மந்திரியாகத்தானே இருக்கிறார்.

"அவர் கட்டிய தாலியை இதோ அறுத்தெரிந்துவிட்டேன், சுவரேறிக் குதித்து வந்த சுந்தரனே! கட்டுதாலி உன்கையாலே! அதற்கும் விருப்பம் இல்லையேல், அதுவும் வேண்டாம், வேளைக்குச் சோறு, சாயம் போகாச் சேலை, சாயந்திரத்தில் மல்லி, சாய்ந்துகொள்ள மெத்தை. . .'' என்று பட்டியல் கூறிடும் கண்வெட்டுக்காரி, மன்றம் ஏறிவாழும் வழி பற்றிப் பேசிடுவ தில்லை; அமைச்சரல்லவா, பேசுகிறார்! பேசட்டும் தம்பி! பேசட்டும்! பூர்ணகும்பம், அர்ச்சகர் சங்க வரவேற்பு, நிலப்பிரபுவின் விருந்துபசாரம். இது கூடவா, பேசக் கூடாது? பேசட்டும் தம்பி, பேசட்டும். நமது வேலையை இந்தப் பேச்சும் ஏச்சும், துளியும் பாதிக்காது.

அன்புள்ள,

3-7-1955