அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


படமாம் படம்!
1

காங்கிரசு எடுக்கப்போகும் படம் கழகத்துக்கும் சேர்த்துத்தான்!
புகழ்ந்தவர்களே புதைக்கவும் செய்வர்!
ஏழையர் இதயத்தில் என் சொல் பதிகிறது!
உணவு உண்டு வாழ்ந்திடலாம்! புகழ் புசித்து வாழ்ந்திட முடியுமா?

தம்பி!

படம் எடுக்கப் போகிறார்களாம் - ஒன்று அல்ல, மூன்று! "உண்டானபோது கோடான கோடி'' என்று பழமொழி சொல்லுவார்களல்லவா, அதுபோலச் செல்வமும் செல்வ வான்களின் ஆதரவும் இருக்கும்போது மூன்றா, முப்பது படம்கூட எடுக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! பட முதலாளிகளின் பார்வை குளிர்ச்சியாக இருக்கும்போதே, படங்களை "மளமள'வென்று எடுத்துவிடவேண்டியதுதானே!! செய்யப் போகிறார்கள்! அறிவித்து விட்டார்கள். சென்னையில் உள்ள மூன்று படப்பிடிப்புத் துறை முதலாளிகள், காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் பிரசாரப் படம் தயாரித்துத் தர முன் வந்துள்ளார்கள்!

சினிமாக் கட்சி, சினிமாக் கட்சி என்று நமக்குப் பெயர் தம்பி! - பெயரா? - ஏளனப் பேச்சு வீச்சு - ஆனால், நாமல்ல, காங்கிரசுதான் சினிமாப் படங்களைத் துணையாகப் பெறப் போகிறது - நடிக நடிகையர் - படப்பிடிப்புத் துறைத் தொழில் நிபுணர்கள் தயாரிக்கப் போகும் படங்கள் அல்ல - மூன்று வளமான படப் பிடிப்பு அமைப்புகள் தயாரிக்கப்போகும் படங்கள்!

முதலாளிகள் தயாரிக்கும் படங்களா? என்று முகத்தைச் சுளித்துக்கொள்ளாதே! தம்பி! சோஷியலிசத்துக்கு ஆதரவான படமாகத்தான் எடுக்கப் போகிறார்கள்!

முதலாளிகளை ஒழிப்போம்! தொழிலாளிகளை வாழ வைப்போம்! - என்ற ஊர்வலக் காட்சியைக்கூடக் காணக்கூடும். படம், தம்பி! படம்!

பணம்! அண்ணா! பணம்!! - என்று நீ கூறுவது என் காதிலே விழத்தான் செய்கிறது. ஆனால், எனக்கு இதிலே உள்ள மகிழ்ச்சிக்குக் காரணம் தெரியுமா? சினிமாவைக் கேவலமாகவும், சினிமாத் துறையினருடன் தோழமைத் தொடர்பு கொள்வதை இழிவானதாகவும், தரக்குறைவான அரசியல் கட்சிகளே அப்படிப்பட்ட தொடர்பு கொள்ளும் எனக் கூறிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது கலை உலகின் தயவைப் பெற முனைவது இருக்கிறதே, அது கலை உலகின் வெற்றி! கலைஞர்களின் வெற்றி! என் பாராட்டுதல் அந்தக் கலைஞர்களுக்கு. என்னையும் கழகத்தையும் எதிர்க்கும் கலைஞர்களுக்குக்கூட! "இருமல் தும்மல்' எல்லாம் என்னை ஏசும்போது, கலை உலகினர் நாலு வார்த்தை என்னையும் கழகத்தையும் ஏசிப் பேசுவதாலா எனக்கு எரிச்சல் வரப்போகிறது? இராகம் - தாளம் - பாவம் குறையாத பேச்சாகவாவது இருக்குமல்லவா!

சினிமாக் கட்சி, சினிமாக் கட்சி என்று நமது கழகத்தை, ஏ! அப்பா! அங்கு இடம் கிடைக்காத எரிச்சல் கொண்டது களெல்லாம் முன்பு பேசுவார்களே! அவர்களுடைய முழக்கத்தில் சரிபாதி இதுபற்றித்தானே! இப்போது எப்படிப் பேச முடியும்? ஆகவே, தம்பி! நன்றாக ஆராய்ந்து பார்த்திடின், காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துள்ள கலைஞர்கள் நம்மீது அந்தக் கட்சி பூசி வைத்த கறையைத் துடைத்திடும் தொண்டாற்றி, கழகத்துக்குத்தான் நல்லது செய்கிறார்கள்! அதனால்தான், நான் எங்கிருந்தாலும் வாழ்க! - என்று உளமாரக் கூறி வருவது.

சினிமாப் படங்களைக் காங்கிரசின் தேர்தல் பிரசாரத் துக்குப் பயன்படுத்த முனைவது, ஒரு வகையில், கலை உலகின் வெற்றி, கலைஞரின் வெற்றி. நமக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திட வில்லையே என்பதால், அதனைக் குறைத்து மதிப்பிட, நாம் யாரும் ஏமாளிகள் அல்ல.

கலைஞர்களின் தோழமையையும் தொடர்பையும், குறைத்து மதிப்பிட்டவர்கள், கேவலமாகப் பேசியவர்கள் அவர்கள், நாம் அல்ல! இன்று அந்த தொடர்பு தக்க பலன் தரும் என்ற பூரிப்புடன் உள்ளவர்கள் அவர்கள்!! கலைஞர்களின் தொடர்புபற்றி மிகக் கேவலமாகக் காங்கிரஸ் தலைவர்கள் - பேச்சாளர்கள் மட்டுமல்ல - பெருந் தலைவர்கள் தாக்கியபோது தம்பி! நாம் நினைவுபடுத்தினோம், காங்கிரஸ் தூய்மையான விடுதலை இயக்கமாக இருந்தபோது நாடகத்துறை வித்தகர் விசுவநாததாசும், கொடுமுடி சுந்தராம்பாள் அவர்களும், வேறு பல கலைஞர்களும் காங்கிரசுக்காகப் பாடுபட்ட பான்மையை! அப்போதும் காங்கிரசின் பெருந் தலைவர்கள் கலைஞர்களை மதிக்க மறுத்தனர்; "கூத்தாடிகள்' என்று கேவலமாகப் பேசினர்! இன்று? கலையின் வலிவை உணருகிறார்கள்! கலைஞர்களின் தொடர்பைப் போற்றுகிறார்கள்! வரவேற்கத்தக்க வெற்றி - கலை உலகுக்கு. படம் காட்டப்போகும் பாடம் இதுவே.

காங்கிரசின் சாதனைகளை இந்தப் படங்கள் எடுத்துக் காட்டுமாம். காட்டட்டும்; ஆனால், சர்க்காரைக் காங்கிரஸ் கட்சி நடத்திக்கொண்டு வருவதால், சர்க்கார் செய்திடும் சாதனைகள் பற்றி அணைக்கட்டுகளிலிருந்து ஆரம்பப் பள்ளிகள் வரையில் செய்தித்துறை தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகின்றனவே - அவை போதாமலா, புதிதாகத் தேவைப் படுகிறது? விந்தைதான்! தரமாகவே அமைந்திருக்கிறது செய்தித்துறைப் படம்!

உருக்கமான குரலொ- கேட்கிறது, வறண்ட பூமி! வெடித்துக் கிடக்கும் வயல்கள்! துடித்திடும் மக்கள்! வானத்தை அண்ணாந்து பார்க்கிறார்கள்! கண்ணீர் வடிக்கிறார்கள்!!

உடனே ஒரு அணைக்கட்டுக் காட்சி! தண்ணீர் குபுகுபு வெனப் பாய்ந்தோடி வருகிறது!! பூமி குளிர்கிறது! பயிர் வளர்கிறது! இப்படி ஒரு இன்பக் காட்சி!

இவைகளைப் பார்க்கவில்லையா மக்கள்? நிரம்ப! பார்த்து, படத்திலே உள்ள பசுமை வாழ்க்கையிலே இல்லையே என்று ஏக்கம் கொள்கின்றனர்.

புதிதாக இதுபோன்ற படங்களை வெளியிட்டு, மக்களின் ஏக்கத்தைத் துடைத்திடவா முடியும்?

தம்பி! நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் "50 - 60' என்று ஒரு காட்சியைத் தமது படம் ஒன்றில் இணைத்துக் காட்டினார். பலர் பார்த்திருக்கக்கூடும்!

சுதந்திரம் வந்ததென்று சொல்லாதீங்க,
சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க

என்று திருமதி டி. ஏ. மதுரம் பாட, நகைச்சுவை மன்னர் பத்தே வருடங்களில் சுதந்திரத்தின் பலனாக நாடு எத்தகைய பூந்தோட்ட மாக மாறப் போகிறது பார் என்று பெருமிதத்துடன் கூறி, எதிர்கால வளம்பற்றிய எழில்மிக்க காட்சிகளைக் காட்டுவார். பார்த்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், நல்லவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் நாசமாகிவிட்ட நிலையில், காங்கிரசின் சாதனைகளை விளக்கிட மூன்று புதிய படங்களை எடுத்துப் போட்டுக் காட்டிவிடுவதால், மக்கள் குதூகலமடைந்து காங்கிரசுக்கே எமது ஓட்டு என்றா கூறிவிடுவர்?

படம் பார்த்துவிட்டு வந்ததும், படி அரிசி எட்டணா என்ற அளவுக்காவது விலை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையும் கண்டால் மகிழ்ச்சி அடைவார்கள்!

புதிய புதிய அணைக்கட்டுகளைக் காண்க! அமோகமான விளைச்சல் காண்க! என்ற பேச்சும் காட்சியுமா, காய்ந்த வயிறுக்குத் திருப்தி தந்துவிடும்? பார்த்தால் பசி தீருமா?

இது காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். பட முதலாளிகளுக்கும் தெரியும். ஆகவே, அந்தப் படங்கள், காங்கிரசின் சாதனைகளை எடுத்துக் காட்டுவதாக மட்டும் இருந்திடப்போவதில்லை; எதிர்க் கட்சிகளை - குறிப்பாகக் கழகத்தை - வெகு சிறப்பாக என்னைக் கேவலப்படுத்திடும் கேசெய் திடும் காட்சிகள் கொண்டதாக இருக்கும்.

சென்ற பொதுத் தேர்தலின்போதும் இதுபோன்ற "படம்' காட்டினார்கள்! முறை, பழையதுதான்! பலனும் முன்பு போலத்தான் இருக்கும். ஆனால், இம் முறை, நம்மைத் தாக்குவதில் சற்று வேகம் - காரம் - சூடு - அதிகம் இருக்கும். அதாவது நம்மைத் தாக்குவதற்காக அவர்கள் தமது படைக்கலன்களை மேலும் கூர்மையுள்ளதாக்கிக் கொள்ள வேண்டி வருகிறது!! இந்நிலை, படைக்கலன்களுக்கு அல்ல, நமக்குக் கிடைத்துள்ள "தாங்கும் சக்தி'க்குத்தான் பெருமை தருவதாகும்.

அண்ணா! அவர்கள் படம் எடுக்கப் போகிறார்களாமே, நாம்? - என்று ஆவலோடு கேட்டார் ஒரு தம்பி!

நமக்கும் சேர்த்துத்தானே அந்தப் படங்கள்? என்றேன் நான்.

என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள் - என்று கவலை ததும்பக் கேட்டார், தம்பி.

தம்பி! படம் பார்த்தவர்கள், பகலில், கடைவீதி போவார்கள் அல்லவா? விலை ஏற்றம் கொட்டுமல்லவா? அப்போது அவர்கள் என்ன எண்ணிக்கொள்வார்கள்? படம் காட்டினார்கள் படம்! பாலும் தேனும் ஓடுகிறது! நாங்கள் சாதிக்கவேண்டியவை களைச் சாதித்துவிட்டோம் என்று பாடிக் காட்டினார்கள். இங்கேயோ. . .! - என்று பேசி பெருமூச்சு விடுவார்கள் அல்லவா? - என்றேன். ஆமாம் என்றார் தம்பி. அந்தப் பெருமூச்சு, காங்கிரசுக்கு ஓட்டா வாங்கித் தரும்? என்று கேட்டேன். தம்பி புன்னகை புரிந்தார். அதனால்தான் தம்பி! நான் கூறினேன், படம் நமக்கும் சேர்த்துத்தான் என்று - சரிதானே?

தம்பி! ஒரு கட்சி, ஆட்சியை நடத்திய நிலையில், தன் சாதனைகளை எடுத்துச் சொல்ல முனைவது ஒன்றே மக்கள் அந்தச் சாதனைகளைச் சாதனைகள் என்று ஒப்புக்கொள்ள வில்லை அல்லது உணரவில்லை என்பதற்குச் சான்றுதானே?

போகட்டும் தம்பி! காங்கிரசின் சாதனைகளைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, காங்கிரசாட்சியிலே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டினால், "கத்தரிக்கோல்' சும்மா இருக்குமா?

மூன்று படம் எடுக்கப் போகிறார்களே முதலாளிகள், அவர்களுக்கே தெரியும்! மிக நன்றாகத் தெரியும்!!

ஒருபுறம் நான்! எதிர்ப்புறம் கனம் சுப்பிரமணியம்! அவர் ஆத்திரத்துடன்! நான் அச்சத்துடன்! அவர் கேட்கிறார், "ஏ! அண்ணாத்துரை, என்னைக் கசாப்புக் கடையா வைக்கச் சொல்லுகிறாய் என்று' - உடனே ஒரு காங்கிரஸ் படை, இடி இடியெனச் சிரிக்கிறது - கையொ- எழுப்புகிறது. ஒரு காட்சி! அதை அடுத்து "இதோ பாரீர்!'' என்று ஒரு குரல்! மலர்ந்த முகத்துடன் ஒரு காங்கிரஸ் தலைவர் - ஆவல் ததும்பும் கண்களுடன் மக்கள் - என்ன? என்ன? என்ற கேள்வி ஒலி! "எமது சாதனை! நாலாவது திட்டத்தில்!!'' என்று பெருந் தலைவரின் பெருமிதப் பேச்சு! எதிரே பார்த்தால், குட்டிகள் பலவற்றுடன் பன்றிகள்!! என்ன இது? என்று ஒருவரின் கேள்வி - தயக்கத்துடன்! பன்றிப் பண்ணை! பன்றி இறைச்சிக்கு நிரம்பக் கிராக்கி. ஆகவே பன்றிப் பண்ணை! இரு துறையிலும்! தனியார் துறையிலும்! பொதுத் துறையிலும்!! - என்ற விளக்கம். காட்சி, படமாக்குவது எளிது! பொய் அல்ல; புனைசுருட்டு அல்ல! நாலாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பல இடங்களில் பன்றிப் பண்ணைகள் வைக்கப்போவதாக, பல திங்களுக்கு முன்பே இதழ்களில் செய்தி வெளிவந்தது. உண்மையைத்தான் படமாக்குகிறோம். ஆனால் கத்தரிக்கோல்? சும்மா இருக்குமா? கலை உலகினர் அனைவரும் அறிவர்!

ஆகவே அவர்கள் படங்கள் மூலம் எதிர்க் கட்சிகளைக் கேவலப்படுத்த முயலுவது, கட்டுடல் படைத்த காளையை இரும்புத் தூணிலே இறுகக் கட்டி வைத்துவிட்டு, வலிவும் துணிவுமற்ற பேர்வழி, "அடி அடி'யென்று அடிப்பதற்கு ஒப்பானது. கலைஞர்கள் அறிவார்கள்!!

பாலோ பால்! என்று அழும் தாயைக் காட்டலாம்; பால் கிடைக்காது அலைந்து அலுத்துப்போன தகப்பனைக் காட்டலாம்! ஒரு காங்கிரஸ் தலைவர் படத்தைக் காட்டலாம். பாலும் தேனும் கலந்து ஓடும்! - என்று அவர் முன்பு முழக்க மிட்டது அந்த ஏழையின் காதில் விழுவதுபோன்ற நிலையைக் காட்டலாம். எங்கிருந்தோ ஒரு கழுதைக் குரல் கிளம்புவதைக் காட்டலாம். அன்றைய இதழில், கொட்டை எழுத்தில் கழுதைப் பாலைச் சாப்பிடலாம் - ருசியானது - வலிவு தரவல்லது என்று அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது வெளிவந்திருப்பதைக் காட்டலாம். ஏழை, தன் வேதனையையும் மறந்து, கழுதைப் பால்! கழுதைப் பால்! காங்கிரஸ் நமக்குத் தருவது கழுதைப் பால்!! - என்று கூவிச் சிரிப்பதைக் காட்டலாம். எளிதான காரியம்! எடுக்க விடுவார்களா? கத்தரிக்கோல் சும்மாவா இருக்கும்?

அதிகமாகக்கூட நாம் கஷ்டப்பட்டு கற்பனை செய்து கொண்டிருக்கத் தேவையில்லையே, தம்பி! கொடி பிடித்த வீரர்கள், நாலாவது ஐந்தாண்டுத் திட்டம்! நாட்டுக்கு சுபிட்சம் தரும் திட்டம்! என்று முழக்கமிட்டபடி ஊர்வலம் செல்லுவதைக் காட்டிவிட்டு, ஒரே ஒரு எ-, பயத்துடன் வளைக்குள்ளே நுழைவதையும், அதை ஆவலோடு ஒரு காங்கிரஸ்காரரும், ஒரு பூனையும் பார்த்திடும் காட்சியையும் காட்டி, அன்றைய இதழில், காங்கிரஸ் அமைச்சர் கெண்டா சிங் என்பவர், "எ- சத்துள்ள உணவு', சாப்பிடலாம்! என்று உபதேசம் செய்தாரே அந்தச் செய்தி வெளி வந்திருப்பதையும் காட்டினால் போதுமே! கொட்டகை அதிருமே!! ஆனால் எடுத்திடவிடுவார்களா?

ஆக, நமது கரங்களைக் கட்டிப் போட்டுவிட்டு, அவர்கள் தமது சாதனைகளை விளக்கிடும் படம் காட்டப் போகிறார்கள். காட்டட்டும்! பாவம்! அந்த ஆசையும் தீர்ந்து போகட்டும்!

நாம் படம் எடுத்துக் காட்டாமலேயே, நாட்டிலே உள்ள வேதனைக் காட்சிகளைக் கண்டு கண்டு வெதும்பிப் போயுள்ள மக்கள் இதயத்தில் அந்தக் காட்சிகள், துளியும் கலையாமல் இருக்கத்தான் செய்கின்றன!!

ஏதோ ஒரு பத்திரிகையில் - தமிழ்நாட்டு இதழிலேதான் - பார்த்தேன் - என்னையும் ராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோரையும் ஒரு கழுதைமீது உட்காரவைத்திருப்பதுபோல, ஒரு கேலிச் சித்திரம். என்னோடு தோழமைத் தொடர்பு கொண்டதற்காக, மதிப்பிற்குரிய அந்த இரு பெரியவர்களுக்கும் ஒரு இதழ் இத்தகைய கேவலத்தை ஏற்படுத்திக் காட்டி இருக்கிறதே என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன்.

இதழிலே இது என்றால், படத்திலே இதனைவிடக் கேவலமான காட்சிகளையெல்லாம்கூட இணைத்துக் காட்ட லாம் - காட்டட்டும்! எடுத்துக்கொண்டுள்ள காரியத்துக்குத் தரவேண்டிய "விலை' இவை என்றுதான் கருதிக்கொள்வோம். ஆனால், மக்கள்? காங்கிரசின் காவலர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய செயலை, கண்ணியமானது என்றா கருதுவார்கள்? மக்கள் அவ்வளவு இழிதன்மை கொண்டவர்கள் அல்ல!

தம்பி! நான் மக்களுடைய அந்தப் பண்பிலேதான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; மிகுந்த நம்பிக்கை; அவர்களிடந்தான் முறையிடுகிறேன். மக்களிடம், அவர்கள் உணரும்படியான அளவிலும் முறையிலும் இந்த முறையீடு போய்ச் சேருமானால், அவர்கள் நீதியின் பக்கம் திரண்டெழுந்து வந்து நிற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன். வரலாற்று ஏடுகள் எனக்குள்ள அந்த நம்பிக்கையை மேலும் வலிவுள்ள தாக்குகின்றன. ஆகவேதான், இந்தத் தொண்டு வெற்றி பெற, தம்பி! நீ உன்னை முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சாதனைகள்! தம்பி! சாதனைகளை மதிப்பிடவேண்டு மானால், ஒரு கட்சி நடத்திக் காட்டிய சாதனைகளுடன் வேறோர் கட்சி நடத்திக் காட்டிய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்; அந்த இரு கட்சிகளும் ஆட்சி நடத்திய நிலை இருந்திட வேண்டும்.

திறமை - வலிவு - செல்வாக்கு - அறிவு - பண்பு எனும் எவை பற்றிய மதிப்பீடு போடுவதென்றாலும் குறைந்தது இருவர்களின் நிலையையாவது கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒப்பிட்டுப் பார்த்து, இவரைவிட அவர் திறமைசாலி, ஆனால், வலிவு இவருக்குத்தான் அதிகம் என்ற இந்த முறையில்தான் மதிப்பீடு தர முடியும்; அதுதான் பொருள் உள்ளதாகவும் - பொருத்தமானதாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டு வேண்டுமெனின் இதனைக் கூறலாம். இங்கிலாந்து நாட்டில் இன்று அரசாளும் தொழிற் கட்சியின் சாதனைகளை, முன்பு அரசாண்ட கன்சர்வேடிவ் கட்சியின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து எந்தக் கட்சியின் சாதனைகள் சிலாக்கியமானவை என்று கண்டறிந்து கூறுவது?

இந்த வாய்ப்பு, பிற நாடுகளிலே உள்ளதுபோல் இங்கு இல்லை.

இங்கு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. ஆகவே மக்களுக்கு நலன் தரத்தக்க சாதனைகள் செய்தளிப்பதில் எந்தக் கட்சி தரமானது, எந்தக் கட்சி அவ்வளவு தரம் இல்லாதது என்று கூறிட இயலாது; ஒப்பிட்டுப் பார்த்திடும் வாய்ப்பு இல்லாததால்.

ஆகவே காங்கிரசாரும் அவர்தம் ஆதரவாளரும், சாதனைகள் - சாதனைகள் - என்று பேசும்போது, ஓட்டப் பந்தயத்தில கலந்துகொண்டவர்கள் - ஒன்பது பேர், அதிலே முதலாவதாக வந்தவன் முத்துச்சாமி, இரண்டாவதாக வந்தவன் இருதயசாமி என்று கண்டறிந்து கூறுவதுபோலக் கூறவில்லை; கூறிடும் வாய்ப்பு இல்லை.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை - என்பார்கள்! அதுபோல, வேறு எந்தக் கட்சியும் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றிடாத நிலையில், ஆட்சி நடத்திடும் ஒரே கட்சியான காங்கிரஸ், சாதனை! சாதனை! என்று கூறி வருகிறது.

உண்மையான மதிப்பீடு தெரியவேண்டுமானால், இன்று காங்கிரஸ் நடத்திடும் ஆட்சி, வேறோர் கட்சியிடம் கிடைத்து, அந்தக் கட்சி என்னென்ன சாதனைகளைப் பெற்றுத் தருகிறது என்று பார்த்து, இரண்டையும் ஒப்பிட்டு, எது தரமுள்ளது என்று தீர்மானிக்க வேண்டும். அதற்கு இந்த இருபதாண்டுகளாக வழி இல்லை. இன்னும் இருபது ஆண்டுகளுக்கும் வழி இல்லை என்கிறார் காமராஜப் பெரியவர்.

அதாவது வேறோர் கட்சியின் திறமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்று விரும்புகிறார். அந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்.

மக்கள் அளித்திடும் தீர்ப்பைப் பொறுத்து இருக்கிறது அவர் திட்டம். ஆனால், "போட்டி' கூடாது!! - என்கிறார்.

குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடு கிறான் என்பார்கள்; வேறு எந்தக் கட்சியும் ஆட்சி நடத்தவிடக் கூடாது என்று திட்டமிடுவது, அத்தகைய விளையாட்டிலே உள்ள விருப்பம் காரணமாகப் போலும்!

அது எப்படியோ போகட்டும்; ஆனால், வேறு ஒரு கட்சியின் ஆட்சி ஏற்பட்டு, அப்போது கிடைத்திடும் சாதனை களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலொழிய காங்கிரசின் சாதனை களைப்பற்றிப் பெருமிதத்துடன் பேசுவதிலே பொருள் இல்லை! ஆனால் பேசுகிறார்கள்!

"பயலே! என்னைப்போல மீசையை முறுக்கிவிட உன்னால் முடியுமா?'' என்று கேட்டான் பக்கிரி, வயது நாற்பது, பனிரெண்டு வயது சிறுவனைப் பார்த்து.

"சித்தப்பா! எனக்கு இப்போதுதான் மீசை கருக்குவிடுகிறது! இதற்குள்ளே வம்பு பேசுகிறாயே! காலம் வரட்டும்! மீசை கொத்து கொத்தாக வளரும். அப்போது நான் முறுக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும், மீசையை முறுக்கிவிடுவதில், நம் இருவரில் யார் வல்லவர்கள் என்பது. இப்போது பேசி என்ன பயன்? ஆனால் சித்தப்பா! இதையும் தெரிந்துகொள் எனக்கு, முறுக்கிவிடும் அளவு மீசை வளரும் காலத்தில், உனக்கு உள்ளது உதிர்ந்து போய்விடும்'' என்றான் சிறுவன் கதையில்!

நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள், நாட்டு மக்களை விவரம் அறியாதவர்கள் என்ற நினைப்பில் - "இதோ பார், காங்கிரசின் சாதனைகளை! காட்டு உன் சாதனைகளை!!' - என்று!