அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கனியும் மலரும் நீயே!

"கிழமை தவறாமல் "தம்பி!' என்று அழைத்த உன் அண்ணன் இன்று முதலமைச்சர்!'
"தேவையற்றதென்றோ தேனென இனிக்கிறதென்றோ கூறமாட்டேன்!'
"ஊர்திபோலப் பணியாற்றியபடி இருக்கிறேன்.'
"தம்பியுடன் அளவளாவுதலை இழந்திருப்பதிலே ஓர் ஏக்கம்! ஒரு தவிப்பு!'
"நம்மால் முடிந்த அளவு செய்வோம்!'
"என் பணி மக்கள் தேவைகளைத் தீர்த்து வைத்திட முயல்வதே!'
"அண்ணன் பொறுமையாளன் என்பது பெருமளவு உண்மைதான்!'
"காலமல்லவா, கடமைகளை மேற்கொண்டுள்ளவர் களைக் கடுமையாக வேலை வாங்குகிறது!'
"என் நிலைபற்றி ஒரு துளி!'
"என் பணி வெற்றிபெற உன்னைத்தான் நம்பியிருக் கிறேன், தம்பி!'
"என் ஆற்றல் என்பது தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டு!'
"நான் கூட்டுச் சக்தியின் உரிமையாளன்!'
"என் ஆற்றலின் வளர்ச்சி, உன் ஆற்றலின் வளர்ச்சியிலே இருக்கிறது!'

தம்பி! தித்திக்கும் அந்தச் சொல்லைக் கிழமை தவறாமல் "காஞ்சி' இதழ் மூலம் சொல்லிச் சொல்லி மகிழ்ச்சி பெற்றுக்கொண்டு வந்த உன் அண்ணன், இன்று. . . .!

ஆமாம்! என் அண்ணன் இன்று முதல் அமைச்சர் என்று பெருமிதத்துடன் கூறுகிறாய், அறிகிறேன்; ஆனால் நான். . . !

ஒவ்வொரு கிழமையும் நாட்டு நடப்புகள்பற்றி, பிரச்சினைகள் குறித்து எனக்குத் தோன்றிடும் எண்ணங்களை உன்னுடன் பங்கிட்டுக்கொண்டு, உன் மூலம் மற்றவருக்கு அந்த எண்ணங்களை அளித்துக்கொண்டு வந்த அந்த நாட்களை எண்ணிக்கொண்டால். . . . !

சொல்லவேண்டுவனவற்றை சொல்லியாகிவிட்டது என்ற நிலையும் இல்லை. ஏதேதோ நிரம்ப, தொடர்ந்து, சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. நாட்டிலும் வெளியிலும் நமது கவனத்தை ஈர்க்கத்தக்க நமது வாழ்வுடன் தொடர்புகொண்டுள்ள எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் சுழன்றபடி உள்ளன; அவை பற்றி உன்னுடன் உரையாட வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் ததும்பியபடி இருக்கிறது; ஆனால். . . . !

ஒரு நிலைக்கு ஆட்பட்டுவிட்டிருக்கிறேன் - உன் ஆணை காரணமாக நான் மேற்கொண்டுவிட்டுள்ள ஒரு கடமையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறேன்; தேவையற்றது என்றும் கூறமாட்டேன், தேனென இனிக்கிறது என்றும் கூறமாட்டேன்; ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பினைச் செம்மையாக நிறைவேற்றித் தீருவார் என் அண்ணன், பாரீர்! பாரீர்! - என்று ஊரெல்லாம், தம்பி! நீ கூறியபடி இருந்திடுவது தெரிகிறதே; நான் அந்த உன் உணர்வுக்கு ஏற்றபடி பொறுப்பினை நிறைவேற்றியாக வேண்டுமே, இல்லை என்றால் "என்னடா வீரனே! ஏதேதோ பேசிக் கொண்டாயே உன் அண்ணனைப் பற்றி! அவன் இலட்சணம் இவ்வளவுதானா!'' என்று எங்கேனும் எவரேனும் ஒரு சுடுசொல் கூறிடின், துடிதுடித்துப் போவாயே; அதனை உணர்ந்திருப் பவனல்லவா உன் அண்ணன். ஆகவே சாலையில் தங்காமல் சோலை கண்டு மயங்காமல் ஓடையில் நீந்திட நினைக்காமல், ஓய்வினை நாடிடாமல், கடமை! கடமை! கடமை! என்று ஓடியபடி உள்ளதே நீராவியால் உந்தப்படும் ஊர்தி, அதுபோல, ஒவ்வொரு நிமிடமும், பணியாற்றியபடியே இருக்கிறேன்; கடினம் இல்லை என்று கூறுவதற்கு இல்லை; வெற்றி இல்லை என்று கூறுவாரும் இல்லை; ஆனாலும், உன்னுடன் கிழமை தவறாமல், "காஞ்சி' இதழ் மூலம் அளவளாவிவிடுவேனே, அதனை இழந்திருப்பதனை எண்ணிக் கொள்ளும்போது, ஒரு ஏக்கம், ஒரு பெருமூச்சு, ஒரு தவிப்பு ஏற்படத்தான் செய்கிறது. என் செய்வது!

"ஆண்டு மலருக்காகிலும். . . .'' என்று முடிவு பெறாத வாக்கியத்தை வீசினான், இளங்கோவன்; "ஆகட்டும்'' என்று பதிலளிக்க ஆரம்பித்து, அடடா! அது "அவருடைய' பணியல்லவா என்ற நினைவு எழவே சிரித்தேன்; "என்ன அப்பா! ஏன் சிரிப்பு, ஏன்?'' - என்றான் இளங்கோவன் முன்பு - சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து வைத்திருந்த குறிப்பு ஒன்றினைக் கண்டெடுத்து காட்சிக் கதையாக்கி, "காஞ்சி' - ஆண்டு மலருக்கெனத் தந்தேன்; எப்போதும்போல, மலரில் என் இதழும் இருக்கும் என்பதிலே ஒரு மகிழ்ச்சி. ஆனால் இந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு கிழமையும் பெற முடிந்தால். . . . பெற முயன்றால் என்ன. . . . முயலலாம் என்ற எண்ணம் வலுவடைந்து வருகிறது. . . . முயல்கிறேன். . . . ஆயினும் இதுபோது நான் மேற்கொண்டுள்ள கடமை. . . . ! எவ்வளவு நேரம் கிடைப்பினும் அவ்வளவையும் விழுங்கி விட்டு. . . . மேலும் வேண்டும் வேண்டும் என்று கேட்டபடி இருக்கிறது.

கவலை அதிகமா அண்ணா! - என்று கேட்கத் தோன்றும்; நாமாக ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்து முடித்திட முனையும்போது, கவலை எங்ஙனம் நம்மை கப்பிக்கொள்ள முடியும்? கவலை அல்ல தம்பி! கவலை அல்ல!! செய்து முடித்திட எண்ணிடும் பணிகளைக் கணக்கெடுக்கும்போது, அவ்வளவுக்கும் தேவையான ஆற்றலைப் பெற்றிருக்கிறோமா என்ற ஐயப்பாடு எழத்தான் செய்கிறது.

இது என்ன பிரமாதம்!
இது எனக்கு எம்மாத்திரம்!
இதுவா! பூ! மிகச் சாதாரணம்!

என்று நான் எப்போதும் சொல்லிப் பழக்கப்படாதவன்; சொல்லாததற்குக் காரணம், அத்தகைய ஒரு எண்ணம் என்றுமே எனக்கு ஏற்படாததுதான். ஆயினும்,

வேறு எவர்மீதாவது சுமையைப் போட்டுவிடுவோம் என்ற போக்கிலேயும், நான் என்றும் இருந்தது இல்லை.

நம்மால் முடிந்த அளவு செய்வோம்.

நம்மைவிட வல்லவர்கள் கிடைக்கிறவரையில் நாம் இதனைச் செய்து வருவோம் என்ற எண்ணம் எனக்குப் பல காலமாகத் துணை இருந்து வருகிறது.

செய்யப்பட வேண்டியவைகளை எண்ணிக்கொள்ளும் போது. . . .!

குப்பை கூளங்களை அப்புறப்படுத்த ஒரு தாய் பெருக்கிக் கொண்டிருக்கும்போது, தத்தித் தத்தி நடந்துவரும் குழந்தை பொருளை எடுத்து இங்குமங்கும் வீசிடக் கண்டு, வேலை மேலும் வளருகிறதே என்ற கவலை பிறந்திடினும், குழந்தையை முத்தமிட்டு - (பரிசு தருகிறாள்! வேலையைக் கெடுத்ததற்கு!!) - மகிழ்கின்றாளே, அந்தத் தாயின் உள்ளத்திலே குழந்தையின் எதிர்காலம் எழிலுடன் விளங்கிட என்னென்ன செய்திட வேண்டும் என்று எண்ணிடுகிறாள் - அறிந்திட முயன்றதுண்டா? கேட்டுப் பார்த்ததுண்டா?

கேட்டால் மட்டும் என்ன, அந்தத் தாய், விவரமாக எடுத்துக் கூறவா செய்வாள்? ஒரு புன்னகை மலரும், அதிலே ஓராயிரம் ஆவல்கள் ஒளிவிடும்! என் மகனை. . . என் மகனை. . . என்று ஒரு இசை பிறக்கும், மற்றவற்றை எல்லாம் முத்தங்களாக்கிக் குழந்தையின் கன்னத்தில் பதித்துவைப்பாள். அந்தக் கன்னம், தான் பெற்ற செய்தியினை எடுத்து இயம்பவா செய்யும்! கலகலவெனச் சிரிப்பான் குழந்தை! பொருள் என்ன. . . .? முயன்றவர் பலர். அந்தப் பொருளை அறிந்திட! வென்றவர் எவரும் இல்லை!

புள்ளினமும் பேசிடக் கேட்கிறோம்; பூங்காற்றும் ஏதோ பேசத்தான் செய்கிறது; புனலிடைத் துள்ளிடும் மீனினமாகட்டும், கானிடை ஓடிடும் மானினமாகட்டும், பேசாமலா உள்ளன? அருவியே ஏதோ ஒலி மூலம் எதையோ சொல்லியபடிதானே இருந்திடக் காண்கிறோம்! பொருள் மட்டுந்தானே விளங்க வில்லை. அந்தப் பொருள் மட்டும் விளங்கிவிட்டால். . . . ! எண்ணிடும்போதே, இந்த உலகிற்குள் உறங்கிக்கிடக்கும் ஒரு உலகம் நிழலளவுக்குத் தெரிவதுபோல் தோன்றுகிறது.

எனக்கு உள்ள வேலை, இந்த இயற்கையின் புதிர் தரும் பொருளைக் கண்டறிந்திடுவது அல்ல. அது என்னால் முடியக் கூடியது என்று எண்ணுவதுகூட பேதமை.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணி, பொருள் விளங்க நன்கு புரியும்படி, மக்கள் தமது தேவைகளை எடுத்து இயம்புகிறார்களே, அவைகளைக் கேட்டு, தீர்த்து வைத்திட முயற்சி எடுத்திடுவதாகும்.

எளிதானது என்பாயா, தம்பி! கூறிடமாட்டாய்! அறிவுத் தெளிவுள்ளவனல்லவா, நீ! நீ அறிவாய், தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைத்திடுவது எளிதல்ல என்பதனை.

சரியான முறையிலே அறிந்துகொள்வதற்கே ஒரு தனித் திறமை வேண்டும். தொடர் தொடராகத் தேவைகள் வளருகின்றனவே என்று எண்ணி, சலிப்பு அடையாதிருக்க வேண்டும்.

ஒரு தேவையை நிறைவேற்றியவுடனே மற்றோர் தேவையினை எடுத்துக் காட்டுகின்றனரே என்று எரிச்சல் அடையாதிருக்க வேண்டும்.

இதற்கே பலருக்கு முடிவதில்லை. ஆனால், அண்ணனுக்கு இதிலே அதிகமான கஷ்டம் கிடையாது - பொறுமையுடன் இருந்து பழகிவிட்டிருக்கிறான் - என்பாய். உண்மைதான் ஓரளவுக்கு! ஓரளவுக்கென்ன, பெருமளவு உண்மைதான்! ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், தேவைகளைக் கணக்கெடுப்பதுடன், வரிசைப் படுத்துவது, வகைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தேவைகளின் நியாயத்தைக் கண்டறிவது அதனினும் கடினம்.

அதனினும் கடினம், ஒருவனுடைய "தேவை'யை நிறைவேற்றி வைக்கும்போது அது வேறு ஒருவருடைய "தேவை'யையும், "உரிமை'யையும், "வசதி'யையும் கெடுத்துவிடுகிறதா என்று கண்டறிவது.

எல்லாவற்றையும்விடக் கடினம், நியாயமானது என்று அறிந்தான பிறகும் அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான "வலிவும் வாய்ப்பு'ம் பெற்றிடுவது.

காத்தான் ஒரு ஏழை! வீட்டு மனை வேண்டும் என்கிறான். தேவை, நியாயம்! இடம்கூடக் காட்டுகிறான், இலுப்பத் தோப்புக்குப் பக்கத்தில் ஒரு இடம்; கரம்பு; விலை அதிகம் தரத் தேவையில்லை என்கிறான். மறுப்பதற்கில்லை.

முத்தன் ஒரு உழவன்; பிறர் கையை எதிர்பார்த்துத் தீரவேண்டிய நிலை அல்ல; அதேபோது, "பிரமாதமான' பணக்காரனும் அல்ல. அவன் அந்தக் "கரம்பு'க்குச் சொந்தக்காரன். அதுதான் என் வயலுக்கு வழி! அது பறிக்கப்பட்டுவிட்டால், அடைக்கப்பட்டுவிட்டால், என் ஆறு ஏக்கர் அயன் நஞ்சையும் பாழாகிவிடும்; பிறகு நான் அதோகதிதான் என்கிறான். நியாயம்! இதுவும்!!

முத்தன் பக்கம் நிற்பதா? - காத்தானிடம் கனிவு காட்டுவதா. . . .?

தேவைகளின் தன்மைகளையும் ஒன்றோடொன்று அந்தத் தேவைகள் மோதிக்கொள்ளக்கூடிய வகையினையும் விளக்கிட, காத்தானையும் முத்தனையும், சான்று கூற அழைத்தேன்! அவர்கள் என் கற்பனையூர் வாசிகள்! அந்த இருவர். எங்கே உளர்? வடாற்காடா, தென் ஆற்காடா என்று தேடிடத் தேவையில்லை என்பதனைக் கூறிவை, தம்பி!!

கடினமும் சிக்கலும் இருந்திடினும், பிரச்சினைகளைத் தீர்க்காமல், காலத்தை ஓட்டிக்கொண்டிருக்க முடியுமா! காலமல்லவா, கடமையை மேற்கொண்டுள்ளவர்களைக் கடுமையாக வேலை வாங்குகிறது!

அந்த வேலை செய்ததுபோக "மிச்சம்' நேரம் கிடைத்து, முன்புபோல "காஞ்சி' மூலம் உன்னுடன் அளவளாவ விரும்புகிறேன்.

"அந்த வேலை' செய்வதற்குத் தேவைப்படும் "தெம்பு'கூட, உன்னுடன் அளவளாவுவதன் மூலம் பெற முடியுமே. . . பெற்றுக் கொண்டு பெருமிதம் கொண்டவன்தானே. . .

ஆகவே, தம்பி! இந்த மலரில், என் "நிலை'பற்றி ஒரு "துளி' எடுத்துக் கூறினேன்! இதிலேயே எத்தனையோ மகிழ்ச்சி பெறுகிறேன்! இதனைத் தொடர்ந்து. . . .!!

கதைகளாக, வரலாற்றுத் துணுக்குகளாக, உரையாடலாக. . . எத்தனை எத்தனையோ கூறிடத் துடித்தபடி இருக்கிறேன். . .

அண்ணா! கிழமை தவறாமல் மடல் பெற்று மகிழ்ந்தவனே நான்! இனியும் அந்தச் சுவை பெறத்தான் விழைகிறேன். ஆனால் உனக்குள்ள புதிய பொறுப்பினை உணர்ந்துகொள்ளாதவ னல்லவே! ஆகவே உன்னால் இயன்ற அளவு "காஞ்சி' இதழ் மூலம், கருத்தளித்து வந்திடின் போதும், கடிதமோ, கட்டுரையோ, கதையோ, வரலாறோ - வடிவம் எங்ஙனம் இருப்பினும், உன் எண்ணத்தை எனக்கு அறிவித்து வந்திடின்போதும் இயன்ற அளவு என்று கூறிடுவாய். உணர்கிறேன், முயல்கிறேன்.

நான் மேற்கொண்டுள்ள பணி வெற்றி பெற, உன்னைத்தான் நம்பியிருக்கிறேன், அறிவாய். உன் உள்ளத்தில் உலவிடும் எண்ணங்களை நான் கண்டறிந்தமட்டில், செயல்படுத்தி நாட்டினைச் சீர்படுத்தி, மக்களின் வாழ்வினைச் செம்மையான தாக்கிட, என்னால் இயன்ற அளவு பணியாற்றி வருகிறேன்; அந்தப் பணியாற்றிடும்போது, ஒவ்வொரு நிமிடமும், தம்பி உடையான் படைக்கு அஞ்சான்! என்ற பழமொழியை எண்ணிக் கொள்கிறேன். நான் செய்திட முனையும் ஒவ்வொரு நற்செயலின் போதும், நீ உடன் இருக்கிறாய் என்ற உணர்வுடனேயே இருந்து வருகிறேன்.

பிரச்சினைகளின் கடினம் என்னை மிரட்டும்போது, அவைகளை நிறைவேற்றி வைத்திடும் ஆற்றல் நம்மிடம் ஏது என்ற கவலை எழும்போது, உன்னைத்தான் எண்ணிக்கொள்கிறேன்; தம்பிகளின் தனித்தனி ஆற்ற-ன் மொத்தத்தின் தன்மையைக் கணக்கெடுக்கும்போது, பிரச்சினைகளைத் தீர்த்திடத் தேவைப் படும் ஆற்றல் போதுமான அளவு கிடைத்திடும் என்ற நம்பிக்கை எழத்தான் செய்கிறது. என் ஆற்றலை மட்டுமே நம்பிடின், ஏக்கமோ, ஏமாற்றமோதான் விளைவாகிட முடியும். என் ஆற்றல், என் ஆற்றல் மட்டுந்தானா? இல்லை, தம்பி! இல்லை! என் ஆற்றல் என்றது, என் தம்பிமார்களின் ஆற்ற-ன் கூட்டு - நான், இந்த கூட்டுச் சக்தியின் உரிமையாளன்!

ஆகவே, தம்பி! உன் விருப்பத்தை அறிந்து ஆணை கேட்டு, அரசாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனாலே ஏற்பட்டு விட்டுள்ள புதிய நிலையில் நாம் பொறுப்புடன் நடந்து, பொது மக்களின் நல் வாழ்வுக்கான வழியினில் நடந்து, வெற்றி கண்டோம் என்பதனை ஊரும் உலகமும் ஒப்புக்கொண்டு பாராட்டத்தக்க முறையில், நாம் நடந்துகொள்ள வேண்டும், தம்பி! நான், தம்பிமார்களின் தனித்தனி ஆற்றலின் ஒட்டு மொத்தம் என்று குறிப்பிட்டேன்.

ஆகவே என் ஆற்றல், உன் ஆற்றலிலே இருக்கிறது.

என் ஆற்றலின் வளர்ச்சி, உன் ஆற்றலின் வளர்ச்சியிலே இருக்கிறது.

கனி குலுங்கா மரமும், மலர் ஆடாச் செடியும், கதிர் குலுங்காப் பயிரும் எற்றுக்கு?

கழகம், உன் ஆற்றல் நிரம்பிய கழனி! கனியும் மலரும் நீயே! கதிர் மணியும் நீயே! கனி பெற்றதால் மரம் பெருமைகொள்வது போல, உன்னைக் கொண்டிருப்பதனால் கழகம் பெருமை பெற்றுளது. உன்னைத் தம்பியாகப் பெற்றுள்ள நானோ! சொல்லவா வேண்டும், களிப்பிலே மிதக்கிறேன், கனவு பல காணுகின்றேன். நமது நாட்டை எழிலுள்ளதாக்கிட! மக்களின் வாழ்வு செம்மையானதாக்கிட! உன் துணைகொண்டு அந்தத் தூய தொண்டிலே வெற்றி பெற்றிட முடியும் என்று நம்புகிறேன்! வா! தம்பி! வா! தூய தொண்டாற்றி வெற்றி கண்டிடலாம், வா! என்று அழைக்கின்றேன்; மறுகணம், மனக் கண்ணால் காண்கின்றேன், உன் குறும்புப் புன்னகையை! பொருளும் தெரிகிறது! வா! வா! என்று அழைக்கிறாயே, அண்ணா நான் எங்கே சென்றுவிட்டேன், உன்னுடன்தானே இருக்கின்றேன் என்று அந்தப் புன்னகை கூறுகிறது. ஆமாம்! தம்பி அறிந்து அகமகிழ்கின்றேன்! வாழ்க, வளர்க, வெல்க உன் ஆற்றல்!

அண்ணன்,

5-11-67