அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கல்லணை

காவிரியும் கரிகாலன் கல்லணையும் -
நங்கவரம் பண்ணைப் பிரச்சினை

தம்பி!

கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது.

தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான "அணை' கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது அந்தக் கல்லோவியம்!

வீரப் போரிட்டு வாகை சூடி, வேற்று நாட்டவர் வியந்திட, சொந்த நாட்டவர் போற்றிட, திறை பலர் தரப்பெற்று, திருவோலக்கத்தில் அமர்ந்து, எமக்கு இணை எவர் உளர்? என்று கேட்பது மட்டுமல்ல, தமிழ்நெறி; வீரம் காட்டினோம் வெற்றி பெற்றோம்; மாற்றார் தோற்றனர் மாப்புகழ் கண்டோம்; ஆயின் என்னை! மக்களின் நல்வாழ்வு, மன்னன் மார்பகத்திலே புரளும் வெற்றி மாலைகளின் ஒளியில் மட்டுமோ உளது; இல்லம்தோறும் ஒளியும் இதயமெல்லாம் இன்பமும் மலர்ந்திடத்தக்க விதத்திலே, வாழ்வு செம்மைப்படுத்திட வேண்டாமோ? எமது மன்னன் பிடித்த கோட்டைகள் ஆயிரம்; இடித்த அரண்கள் பலப்பல; தரைமட்டமாக்கிய நகர்கள் நூறுநூறு; கொன்று குவித்த மாற்றார் - பல குவியல்! கரியும் பரியும் கழுகுக்கு இரையாயின! காடு, காடாயிற்று! போரிட்டுத் தோற்றவர் வெண் பொடி பூசி உருமாறி ஓடிப் பிழைத்தனர்! - என்று மக்கள் மகிழ்ந்து பேசுவது மட்டும், மன்னனின் மாண்பினை விளக்கிடுவதாக அமைந்திடாது! கொல்லும் புலியும், பேசிட இயலுமேல், வீரக்காப்பியம் கூறுமே! எனவே, வீரச் செயல் பல ஆற்றியதுடன், மன்னன், மக்களுக்கு ஆற்ற வேண்டிய அரும்பணி முடிவு பெற்றுவிடவில்லை! மக்கள், உறுபசிக்கு ஆளாகாதபடி தடுத்திட, அவர்தம் உழவுத் தொழில் சிறந்திட வழிவகை கண்டறிந்து அளித்திடவேண்டும்! நீர் உயர, நெல் உயரும்! எனவே, உழவரின் உள்ளத்தில் உவகை பொங்கவேண்டுமானால், வறண்ட இடங்களுக்கு, பொங்கிப் பெருகி, தங்கி நிற்க இடமில்லாததால் காட்டுப் போக்கிலே புரண்டு வீணாகி, வீணாகும் வெள்ளமும் வீழ் நீரும், தடுத்துத் தேக்கி வைக்கப்படவேண்டும் - உழவுக்குப் பயன்படவேண்டும் என்ற உன்னதமான நோக்கம் கொண்டு, தமிழகத்துத் தன்னிகரில்லா மன்னன், கட்டி முடித்த கருவூலம்!

இக்காலக் கட்டட விற்பன்னரும், கண்டு வியந்திடுகின்றனர்!

உழவுக்கு உறுதுணை இத்தகைய அணைகள் என்ற உண்மைதனைக் கண்டறிய, ஏடு பல கற்றிடுவோரெல்லாம், கல்லணை காட்டிடும் "பாடம்', கல்லூரிகள் பலவற்றினும் கிடைத்திடுவதைவிட, பொருளும் சுவையும் மிக்கது என்று கூறிப் போற்றுகின்றனர்.

பொன்னி - அழகி! மக்களுக்கு நலன் அளிக்கும் நோக்குடன், நடைபோட்டு வருகிறாள்! குழவியை எடுத்து முத்தமிட்டுக் களிப்பிக்கும் அன்னைபோல, பொன்னி தன் அன்புக் கரத்தால் தொட்டு, பாலையையும் சோலையாக்கிப் பூரிக்க வைக்கிறாள்! வீரம் காட்ட தமிழ் மன்னர்கள் நாடு பல சென்றனர்; களம் பல புகுந்தனர்; நானோ, என் இதயத்திலே ஊற்றெடுக்கும் ஈரம் தன்னை, வறண்ட இடங்களெல்லாம் தந்துதவ, வளைந்தும் நெளிந்தும், வழி கொண்டும் செல்கிறேன்; என் கண்முன் தெரியும் கரம்புகளைக் கரும்புத் தோட்டங்களாக்கிக் களிப்படைகிறேன்; என்னுடன் வாளையும் வராலும், கெண்டையும் ஆராவும், துள்ளித் துள்ளி விளையாடுகின்றன! என் வருகையால் வளம் காண்கின்றனர், மக்கள். நான் உள்ளம் பூரிக்கின்றேன்!'' - என்றெல்லாம் கூறிடும் பான்மை போல, சலசலவெனும் ஒலியுடன், சதங்கை அணிந்த மாது சதுராடுதல் போல் வரும் பொன்னி, பெற்றெடுத்த மக்கள் சிறுவீடு கட்டி விளையாடி மகிழ்வதைச் சற்றுத் தொலைவிலிருந்து கண்டு, பெருமிதத்துடன் வீற்றிருக்கும் நரை கண்டு திரை காணா நடுத்தர வயதினள் அமைதியாக அமர்ந்திருக்கும் காட்சி - கல்லணை. ஆடிப் பாடி ஓடியதும், அல்லி மலரினைக் கொய்ததும், ஐயோ! போ! போ! என்று அலறியதும், அன்னை! அங்கே! என்று அச்சம் காட்டியதும், அந்த நாளில்; இன்று அடலேறு என் ஆண் மகன், மின்னலிடையாள் என் செல்வி, அவள் மாலை தொடுக்கிறாள், அவன் கலம் விடுகிறான் என்று பெருமையுடன் பேசிடும் பெருமாட்டிப் பருவம் இன்று! கல்லணை - காவிரிப் பெண்ணாள் பெருமாட்டியானாள் என்பதனைக் காட்டி நிற்கிறது.

தமிழகம், அதுபோலெல்லாம் இருந்தது! தமிழகத்தில் வீரமும் அறிவும், திறனும், திருவும், செழித்து இருந்தன! எந்தத் துறையிலும் பயன் காணும் வகையிலே செயல்பட்டனர்! எந்தச் செயலும் சீரியதாக இருக்கும் வண்ணம், சிந்தனை துணை நின்றது!

கல்லணையைக் கட்டிடும் முன்னம், மன்னன், எத்தனை எத்தனை நாட்கள், நினைவிலே திட்டமிட்டிருந்தானோ - கூற வல்லார் யார்? கல்லணை அந்த மாமன்னனின் செயல்படு திறன் பற்றி மட்டும்தான், கவிபாடி நிற்கிறது - கருவில் உருவாகிய கருத்து, எப்படியெப்படி வளர்ந்தது என்பது தெரியவில்லை. "என்னைப் பெற்றெடுக்க என் அன்னை பட்ட கஷ்டம், சொல்லுந் தரத்ததன்று'' - என்று கூறிடக் குழந்தையால் இயலுமா? கல்லணையும், அதனால்தான், அது குறித்து ஏதும் கூறாமலிருக்கிறது!

கல்லணையைக் கண்டு மன்னனை நம்மாலே காண முடிகிறது!

இங்கு, வீணாகும் பெருவெள்ளம் கட்டுப்படுத்தப்பட்டால், கழனிகளில் வாளை துள்ளும், கதிரொரு முழமே காணும், கமலத்தில் அன்னம் துஞ்சும், கமுகும் தெங்கும் ஓங்கி வளரும், எங்கும் மணம் கமழும் - ஆனால்...! என்று மன்னன் எண்ணிப் பல நாள் ஏங்கி இருந்திருத்தல் வேண்டும்!

ஆறு ஒன்றுக்குக் கரையும் அணையும் அமைந்திடும் செயல், "அந்தரத்துச் சுந்தரி' போல, திடீரென்றா தோன்ற முடியும்!

நீரைத் தேக்கி வைக்கும் முறை, கரை உடையாதபடி பாதுகாத்திடும் வகை, இதற்காகும் உழைப்பு, அதனை நல்கிடத் தேவைப்படும் பெருந்திரளான மக்கள் - என்பன போன்ற பிரச்னைகள், மன்னன் மனதைப் பல காலமாக வாட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

வீரப்போர் புரிந்த காலத்திலும் சரி, நிலா முற்றத்தில் உலவிய நேரங்களிலும் சரி, மன்னன் மனதிலே இந்த எண்ணம் குடைந்தபடி இருந்திருத்தல் வேண்டும்; எனவேதான், சிங்களவர் போரிலே பிடிபட்டபோது, நமது எண்ணம் ஈடேற, இவர்களைப் பயன்படுத்துவோம்; களத்திலே பெற்ற வெற்றி, இனிக் கழனிகளுக்கு வளமளிக்கட்டும் என்று முடிவு செய்து, திட்டமிட்டு வெற்றி கண்டிருக்கிறான், அக்கொற்றவன். எனவே கல்லணை, வெற்றியை விளக்கிடும் கோட்டமாக நிற்கிறது.

தமிழகத்தின் வீரமும் வளமும் விளக்கிக் காட்டிடும் கல்லணையில் இன்று உலவும்போது, அற்றை நாளில் இருந்து வந்த சிறப்புடன் இதுபோது வந்துற்ற அல்லலளிக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்து உள்ளம் நொந்திடாது இருத்தல் முடியாது.

ஒரு சமயம், முடியுடைய மன்னர் கட்டிய கல்லணையிலே, இன்று, அரசோச்சும் அமைச்சராக விளங்கிடும் "நாம்' உலவுகிறோம்! - என்று அமைச்சர் பெருமகனார் பெருமையை அணைத்துக்கொண்டிருக்கக் கூடும் - ஆனால் அவரேகூட, அந்த அணை அமைக்கப்பட்ட காலத்துத் தமிழகத்தை நினைவிற்குக் கொண்டுவந்தால், ஓரளவு வருத்தமே கொள்வார்.

வளம் குன்றி, வருவாய் குறைந்து, வாழ்க்கை வசதியற்று, வேற்று நாடுகளுக்குக் கூலிகளாகச் சென்று, இழிநிலையில் இடர்ப்படும் இன்றையத் தமிழரின் முன்னையோர், களத்தில் வாகை சூடினர், கல்லணை அமைத்து நாட்டை வளப்படுத்தினர். உள்ளத்தில், பெருமித உணர்ச்சியும் வேதனையும் பின்னிக் கொண்டல்லவா குத்துகிறது.

கல்லணை - கரிகாலச் சோழனுடைய கருத்தில் உருவாகி, தமிழகத்துக் கட்டட அமைப்புத் திறனின் அரண் பெற்று, சிங்கள நாட்டு உழைப்புத் துணையுடன் உருவாயிற்று - 1080 அடி நீளமும், 40 - 60 அடி அகலமும், 15 - 18 அடி ஆழமும் கொண்டதாக அமைந்துள்ளது.

இதனைவிட அளவிற் பெரிய, அதிசயமிக்க, விஞ்ஞான நுணுக்கத் திறமைகள் தெரியத்தக்க அணைகளும் தேக்கங்களும், இன்று பல உள - எனினும் கல்லணை, கட்டப்பட்ட காலத்தைக் கருத்திலே வைத்துப் பார்க்கும் போதுதான், அதன் சிறப்பு நன்கு விளங்குகிறது - எவரும் பாராட்டுகின்றனர்.

விஞ்ஞான அறிவு மிகவும் பரவியுள்ள இந்நாளிலேயும், இந்தத் துறை விற்பன்னர்கள், கல்லணையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர்.

தமிழன் பெற்றிருந்த தனிச் சிறப்பு தெரிகிறது - காண்போர் பாராட்டுகின்றனர்.

கரிகாற் சோழன் உருவச் சிலையொன்றும் அங்கு அமைத்துள்ளனர் - இக்காலத்தவர்.

அன்று அம்மன்னன் அமைத்த "கல்லணை' தந்த வளம்தான் இன்று, தஞ்சைத் தரணியை கிளி கொஞ்சும் சோலையாக்கி இருக்கிறது.

புதுப் புது அணைகளையும் தேக்கங்களையும் பொறுக்கு விதைப் பண்ணைகளையும், இரசாயன எருக்களையும், கால்நடைச் செல்வத்தையும், அவைகட்காகச் செயற்கை முறை உற்பத்தியையும், பெருமளவுக்குச் செய்ததுடன், சூல் கொண்ட மேகத்தை மழை முத்துக்களை ஈன்றளிக்கச் செய்வதற்கான குளிர்காற்றை அளித்திட எங்கும் "வனமகோத்சவம்' நடத்தியும், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்ற அறிவுரை அளித்தும், வளம்பெருகி வாழ்வு சிறப்படைய வேண்டும் என்ற நோக்குப்பற்றி நேர்த்தியாகப் பேசிவரும், அமைச்சர் பெருமான் சென்ற கிழமை "கல்லணை'யில் தங்கி இருந்திருக்கிறார் - அதுபோது, உணவு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காததால் அக விலையும், அதனைச் சமாளிக்க வெளியிலிருந்து உணவுப் பொருள் தருவிக்க வேண்டுமென்ற நிலையும், மீண்டும் உணவுக் கட்டுப்பாடு புகுத்தப்படுமோ என்ற பீதியும் நாட்டிலே ஏற்பட்டு இருப்பதுபற்றி, எண்ணிப் பார்த்திராமல் இருந்திருக்க முடியாது!

வந்த இடத்திலே காட்சி கண்டு களித்திடலாம், ஆட்சியிலே இருப்பதாலே ஏற்படும் பெருமை குறித்து மகிழலாம் என்று அமைச்சர் உள்ளூற எண்ணியிருந்தாலும் கூட, தம்பி கருணாநிதி அதையும் "அனுபவிக்க' விடவில்லை. உழுது பயிரிட்டு உழலும் மக்களை, நில முதலைகள் படுத்துகிற பாடுபற்றிய, வேதனை தரும் செய்திகளை எடுத்துக் கொண்டு சென்று, "கனமே! கனமே! கல்லணையின் கவர்ச்சியிலும், அது காட்டும் தமிழரின் முன்னாள் மாட்சியிலும் ஈடுபட்டுள்ள கனமே! உழைக்கின்ற மக்களை உருவில்லாமல் செய்துவிட, பிறர் உழைப்பால் கொழுத்திடும் போக்கினர் செய்திடும் கேடுகளைக் கேளீர்! ஏரடிக்கும் சிறுகோலின் துணையின்றி, மன்னன் கரம் தங்கும் செங்கோல் பயன் தராது என்பதனை, ஆன்றோர் கூறினர் - ஆனால் இன்றோ, மாளிகைவாசிகளின் பேச்சுத்தான் மந்திரிகள் செவி புகும்! மாடோட்டும் ஏழையரின் பேச்சு அம்பலம் ஏறாது! சட்டம் நமக்காக என்று எண்ணிக் களித்திடும் ஏரடிப்போர், ஏதறிவார்! சந்து பொந்து கண்டறிவோம், சர்க்காரின் சட்டங்களில்! என்று இறுமாந்து கூறிவரும் இன்னின்னார் செயல் பாரீர் - என்று அடுக்கடுக்காகச் சேதிகளைக் கொண்டுபோய்க் கொடுத் திருக்கிறார். கல்லணையில் காட்சி காண வந்தோம் - "முள்ளணை'யல்லவா காண்கிறார் அமைச்சர் என்று அவர்தம் நண்பர் சிலர் எண்ணியிருந்து இருக்கக்கூடும்.

கல்லணையில் "கனம்' அமைச்சர்! கல்லணையில் கருணாநிதி - தம்பி! பார்த்தனையா, தமிழக - அரசியலில் ஏற்பட்டு வரும் புதுப்புது நிலைமைகளை.

கருணாநிதி கல்லணையும் செல்வார் மலரணைக்கும் செல்வார் - எதற்கு? - ஏதாவது கதை எழுதுவார்! வேறெதற்கு என்று பேசிடுவோர் பலர் உண்டு. நீ அறிவாய். அவர்களே கூட, "இதேது! பயல்கள், உண்மையிலேயே, தொண்டாற்றுகிறார்கள் என்பது உலகுக்குத் தெரிந்துவிடும் போலிருக்கிறதே!'' என்று கவலையுடன் பேசிக் கொள்வர், கை பிசைந்து கொள்வர்.

"நாடு பாதி நங்கவரம் பாதி!'' என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே ஒரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில், "சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்'' - என்று சீறிக்கூறி, பண்ணை யின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர்.

வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்!

உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்!

இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி, அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்!

அமைச்சரை, வேறு எந்த இடத்திலாவது கருணாநிதி சந்தித்துப் பேசியிருந்தால்கூட, கல்லணையில் பெற்றிருக்கக் கூடிய எழுச்சியைப் பெற்றிருக்க முடியாதென்று நான் எண்ணு கிறேன் - கல்லணையே, தமிழ் ஆட்சி முறையின் மாண்பு விளக்கமாக அல்லவா இருக்கிறது! கல்லானாலும், அது தரக்கூடிய கருத்து, மதிப்பு மிக்கதாக அல்லவா இருந்திருக்கும்!

உழவர் உழைத்துவிட்டு புழுபோலத் துடிப்பர்; பண்ணை முதலாளிகள் பாடுபடுவோரை உருட்டி மிரட்டி வேலை வாங்கி, அவர்கள் வயிற்றிலடித்துக் கொழுத்து நிற்பார்கள் - என்று அன்று கல்லணை கட்டிய காவலன் எண்ணியிருந்திருக்க முடியுமா? அவன் கண்ட தமிழகத்தில், உழைப்பவன் உயர்ந்தான், உலுத்தன் ஊராளவில்லை!! அந்த மன்னன் கண்ட தமிழகம், உணவுக்காகப் பிற நாடுகளிடம் கையேந்தி நின்றிருக்கவில்லை. திறமை அத்தனையும் திட்டம் தீட்டுவதில், விளைவு அத்தனையும் வறுமைதான் என்று உள்ள இன்றைய நிலைமையா அன்று? அல்ல! அல்ல! தம்பி! இயற்கை இன்ப வாழ்வுக்கான வழி காட்டிற்று! உழைப்பு அதனை உருவாக்கித் தந்தது. ஊராள்வோர், அந்த உருவு குலையாமல் பார்த்துக்கொண்டனர்.

முறை தவறி மன்னன் நடந்தாலும், வரி அதிகம் கரந்தாலும், கவிபாடிக் களித்திடும் புலவர்களும் கடுமொழி கூறிடவும், காவலனைத் திருத்திடவும், தயங்காத காலம் அது.

இன்று உள்ள நிலையோ, உள்ள கேடுபாடுகளை நீக்கிட வழி அறியாததை மூடி மறைத்துக் கொண்டு, கேடுபாடு நீங்க வேண்டும் என்ற நோக்குடன் எவரேனும் உண்மையை எடுத்துக் கூறினால் மெத்தக் கோபம்கொண்டு, "ஏதறிவான் இச் சிறுவன்! எமதன்றோ இன்று அரசு?'' என்று எக்களிப்புடன் பேசுகின்ற காலம்!

இருப்பினும், தம்பி, உன் சார்பிலே சட்டசபையிலே நாங்கள், நாட்டிலே காணப்படும் குறைபாடுகளை எடுத்துக் காட்டி வருகிறோம்; ஆட்சிப் பொறுப்பிலே உள்ள அமைச்சர் களுக்குக்கூட அத்துணை கசப்பாக இல்லை, இடையில் நின்று இனிப்புப் பெறுவோருக்குத்தான் ஒரே எரிச்சல்!! ஏதேதோ பேசுகின்றனர்.

"உங்கள் தீனா மூனா கழகத்துக்காரர்கள், சட்டசபையிலே வந்து என்ன சாதித்துவிட்டார்கள்? திணறுகிறார்கள்! சட்ட சபையிலே எங்கள் மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல், திண்டாடித் தவிக்கிறார்கள்'' என்று, ஒரு திருவாளர் பேசியதாகக்கூடப் பத்திரிகையில் பார்த்தேன்.

தம்பி! அந்தத் திருவாளரை நீயோ நானோ சந்திக்க முடியாது - ஆனால் அவருடைய நண்பர்கள் எவரேனும் எடுத்துக் கூறட்டும் என்ற எண்ணத்தால், இதைக் கூறுகிறேன்.

சட்டசபையில், மந்திரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாமல், நாங்கள் திண்டாடிப் போகிறோம் என்றெல்லவா கூறுகிறார், அந்தத் திருவாளர் - அவர் எத்துணை தெளிவில்லாதவர் என்பதைக் கவனி.

சட்டசபையில் மந்திரிகள், உறுப்பினர்களைப் பார்த்து கேள்வி கேட்பதில்லை - முறை அது அல்ல!

மந்திரிகளைப் பார்த்து உறுப்பினர்கள் கேள்வி கேட்பார்கள் - அதுதான் அங்கு உள்ள முறை!

இதனைக் கேட்டாகிலும் தெரிந்துகொண்டு பேசாமல், அந்தப் பேச்சாளி, மந்திரிகள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பதாகவும், நாங்கள் என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திணறுகிறோம் என்றும் "உளறுகிறார்' என்று கூறத் தோன்றுகிறது - பாபம், போகட்டும் - பேசுகிறார் என்றே கூறுகிறேன்.

கேள்வி - பதில் என்ற பிரச்சினையை நான் இதுபோது இங்கு எழுப்பியது, சட்டசபை நடவடிக்கை குறித்துக் கூற அல்ல.

கல்லணை எழுப்பும் கேள்வியும் "கனம்' அமைச்சர் அளிக்கக் கூடிய பதிலும், எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணியே அந்தப் பிரச்சினையை எடுத்தேன்.

"மன்னர் மன்னவா! பிடிபட்ட சிங்களவர்கள் பல ஆயிரம் இருக்கும். அவர்களை என்ன செய்வது?'' என்று அமைச்சர் கேட்டிட, "ஆயிரம் அடி நீளம், அறுபது அடி அகலம், இருபது அடி ஆழம் கொண்டதாக ஒரு அணை கட்டுவதற்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படும்?'' - என்று கரிகாற் சோழன் அமைச்சரின் கேள்விக்கு மற்றோர் கேள்வி வடிவிலேயே பதிலளித்திருப்பான். அமைச்சரும், பொருளை அறிந்து கொண்டு, "அரசே! அறிந்தேன்! சிங்களப் போரிலே நம்மிடம் சிக்கினோரைக் கொண்டே அணை கட்டி முடிக்க ஏற்பாடுகளைத் துவக்குகிறேன்'' என்று கூறி இருந்திருப்பார்.

இன்று அமைச்சர்களை நாடு கேட்கும் கேள்விகள், தம்பி உனக்கும் எனக்கும்தான் நன்றாகத் தெரியுமே!

ஜாதி பேதத்தையும் அதனை நிலைத்திருக்கச் செய்திடும் முறைகளையும் ஏற்பாடுகளையும் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது - என்று பெரியார் கேட்கிறார் - அதற்காக ஆகஸ்ட்டுக்கு ஆகஸ்ட்டு ஒரு அறப்போரும் தொடுக்கிறார்.

"வேலை கொடு! அல்லது சோறு போடு!
சமதர்மம் மலரச் செய்திடு!
தமிழ் நாடு என்ற பெயரிடு!

இவைகளைக்கூடச் செய்யாது, மக்கள் ஆட்சி என்று பெயர் மட்டும் சுமந்து கொண்டிருக்கலாமா?'

என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்தபடி, சோμயலிஸ்டு களும், ஆகஸ்ட் கிளர்ச்சி நடத்துகிறார்கள்.

"நாட்டின் நாடி நரம்பு நாங்கள்!
நாங்கள் பலமற்று இருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல;
எங்கள் ஊதியத்தை உயர்த்துங்கள்
துயர் தீர்க்க வழி காணலாகாதா?'

என்று கேட்டு, தபால் - தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துவிட்டனர்.

இவைகளுக்கெல்லாம் துரைத்தனம், ஒரு கேள்வி மூலமாகவே பதில் அளிக்கின்றது.

"எங்களுக்குத்தானே ஓட்டு, போட்டீர்கள்?''

என்பதுதான் காங்கிரஸ் துரைத்தனம், கேள்வி வடிவிலே தரும் பதில்!

கல்லணையில் கேட்கும் கலகலவெனும் ஒலி, இன்றைய ஆட்சியின் போக்கு கண்டு, காவிரிப் பெண்ணாள் எழுப்பிடும் நகையொலியோ! இருக்கலாம்!!

தம்பி! இதோ வேறோர் ஒலி, என் செவிக்கு.

"மணி ஐந்து! சென்னையில் கூட்டம்'' என்கிறார் நண்பர்.

கிளம்புகிறேன்! அடுத்த கிழமை, பிறவற்றினைக் குறித்துப் பேசுவோம்; அதற்குள் முதலமைச்சர் காமராஜர் அவர்கள் என் தொகுதியின் நிலைமைகளைக் காண்பார். இங்கு கல்லணையும் இல்லை, மலரணையும் கிடையாது; கள்ளியும் காளானும் அதிகம்! இப்போது, முதலமைச்சர் வருவதற்கே, வழி அமைக்கிறார்களாம்! அப்படிப்பட்ட "கிராமம்' மிகுந்த தொகுதி. அங்கு, உள்ள நிலைமைகளை முதலமைச்சர் காண இருக்கிறார். கண்டதன் விளைவு என்ன என்பதனையும் அடுத்த கிழமை கூறுகிறேன்.

ஒன்று, இப்போதே விளங்கும் - விளக்கம் காண அஞ்சாதாருக்கு - என்று நம்புகிறேன்.

கல்லணையில் கருணாநிதி அமைச்சர் பக்தவத்சலத்தைக் கண்டு பேசுவதும்,

சத்தியவாணிமுத்து, அமைச்சர் லூர்து அம்மையாரை, தமது தொகுதியின் அலங்கோலத்தை வந்து பார்த்திடச் செய்ததும்,

நான் எங்கள் தொகுதி நிலைமையை முதலமைச்சர் காண ஏற்பாடு செய்வதும்,

இவைகள் யாவும், நமது கழகம், மக்கள் சார்பில், ஏழை எளியோர் சார்பில் நின்று பாடுபட முனைந்துள்ள ஒரு புதிய ஜனநாயக சக்தி என்பதை எடுத்துக்காட்டும், நிகழ்ச்சிகள்.

கல்லணை கட்டித் தமிழரின் கீர்த்தியை நிலை நாட்டினான் மன்னன்! இன்றோ மக்கள், உழைத்து உருக்குலைந்து கிடக்கிறார்கள்; ஊராள்வோருக்கு இந்த உண்மையினை எடுத்துக் கூறி, இயன்ற அளவு இதம் தேடித்தரும் கடமை நமக்கு உண்டு அல்லவா? அந்தக் கடமையில் களிப்புடன், தம்பி! நாம் அனைவரும் ஈடுபட்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த இனம் கீர்த்திமிக்கது என்பதனை எடுத்துக்காட்டக் கல்லணையும் இருக்கிறது, நாம் தாழ்ந்து கிடக்கிறோம் என்பதனை எடுத்துக் காட்ட, "கண்காணாச் சீமையிலே தமிழர் கசிந்துருகிக் கிடக்கும் காட்சியும்'' இருக்கிறது. ஆனால், எத்துணைதான் தாழ்ந்து கிடப்பினும், ஓரளவு ஒற்றுமையும் எழுச்சியும் பெற்றால், குறிப்பிடத்தக்க வெற்றியும் தமிழருக்கு கிட்டுகிறது என்பதனை, இதுபோது இலங்கைவாழ் தமிழர்கள் பெற்றுள்ள வெற்றி நமக்கு நினைவூட்டுகிறது.

"ஆகஸ்ட்டு' இல்லாமலே நமதரும் தோழர்கள் அங்கு வெற்றி பெற்றனர் - தம்பி!

நாமும் ஒன்றுபட்டுப் பணியாற்றினால், பலன் கிடைக்காமலா போகும்!

தமிழன் திட்டமிட்டால் காரியத்தை முடிக்கவல்லவன் என்பதைக் காட்டி நிற்கிறதே "கல்லணை' - கண்டிருக்கிறாயா, தம்பி! இன்னும் இல்லையென்றால், காணத் தவறாதே - கல்லணை தமிழரின் ஆற்றலை விளக்கிடும் அரிய சின்னம்!!

அண்ணன்,

4-8-57