அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இல்லம் இன்பப் பூங்கா
2

இப்படியெல்லாம் செய்து, கோவலனை மயக்கினாள் - என்று கூறுவர், நுனிப்புல் மேய்வோர்.

எண்ணிப்பார்த்து வியப்படைய வேண்டியது அஃது அல்ல. இவ்வளவு இன்பமாகச் செல்வமாகக் கலை அழகு உணர்வுடன், காட்சிப் பொருளாக வளர்ந்த அந்த ஆடழலகி, கோவலன் தன்னைத் துறந்தான், பின்னர் வெட்டுண்டு இறந்தான் என்றவுடன், என்ன ஆனாள்? எல்லாம் துறந்தாள்!!

அவ்வளவு அழகூட்டும் முறைகளும், அவனுக்காக; அவனை மகிழ்விக்க! அவன் இல்லை! அவை இனி ஏன்? என்று துறந்தாள்.

ஆடலழகியரும் விறலியரும் அழகளிக்கப் பலமுறை தேடிக் கொள்வதிலே வியப்பென்ன? அது பொதுமுறையாமோ? என்று சிலர் ஐயப்படுவர்.

அலத்தகம் எனும் செம்பஞ்சுக் குழம்பை, கால், உள்ளங்கை, இதழ், நெற்றி, நகம் - இங்கெல்லாம் பூசி இலக்கணையார் மண அறைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டார் என்று சிந்தாமணியில் காண்கிறோம்.

கால வேறுபாட்டினைக் கவனித்துப் பெண்கள், மலர் சூடுவர் என்பதும், கூறப்பட்டிருக்கிறது.

மாதவியின் ஒப்பனை

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத் திருவகை யோமா லிகையானும்
ஊறின நன்னீர் வுரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி
- சிலப்: கடலாடு காதை: 76-81

(துவர் - பூசுவன, விரை -கலவைச் சாந்து; ஓமா-கை - மணம் உள்ள நீரில் இடும்பொருள்; மான்மதம் - கஸ்தூரிக் குழம்பு.)

அம்மலர் அடியுங் கையும் அணிகிளர் பவழவாயும்
செம்மலர் நுதலும் நாவும் திருந்தொளி
உகிரோ(டு) அங்கேழ்
விம்மிதப் பட்டு வீழ அலத்தகம் எழுதி இட்டாள்
அம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத்
தெரிவை தானே.
- இலக்கணையாரிலம்பகம்: 69

(நுதல் - நெற்றி; உகிர் - நகம்; அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.)

முன்பனிக் காலத்தில், மகளிர், தம் கூந்தலில் மல்லிகை யையும், அதன் அருகே வாகையையும் சூடிக்கொள்வாராம்.

இளவேனிற் காலத்திலோவெனில், கழுநீர் மாலையாம், குவளை மலராம்!!

தம்பி! இவ்விதமாகவெல்லாம், இல்லறத்திலே, வாழ்க்கைக் கலையழகுடன், வாழ்ந்துவந்தவர் தமிழர், முன்பு!!

தமிழரின் தனிச்சிறப்புடைத் திருநாளாம், பொங்கற் புது நாளன்று - ஓர் நாளாகிலும் - எழில் குலுங்க, இன்பம் துலங்க, மகிழ்ச்சி பொங்க இருக்கவேண்டாவா? அதை அறிந்தே, தமிழகம் விழா நடத்தி மகிழ்கிறது.

***

எதனையும் அளித்திட இயலாதவராக. உள்ள இன்றைய ஆட்சியாளர், தமிழர் வாழ்ந்த வகை அறிந்து அகமகிழ்ந்திடும் வாய்ப்பினைப் பெறுகிறார்களே, இன்று மக்கள் - ஓரளவுக்கு - நமது கழகம், தரணி மெச்சத் தமிழர் ஓர் காலத்தில் வாழ்ந்த சீரினை எடுத்துக்காட்டுவது கேட்டு; அந்த மகிழ்ச்சியையாவது அனுபவித்துத் தொலைக்கட்டும், என்று வாளா இருக்கிறார் களா? இல்லை, வேலாய்க் குத்துகிறார்கள்! அதென்ன, தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்ப்பண்பு! இதெல்லாம் சின்னப் புத்தி! பேதப்புத்தி! ஆகா வழி! என்று பேசுகின்றனர். பேசுவதுடன், இவ்விதமெல்லாம் தமிழ் இனம், தமிழ்நாடு, திராவிடம், தனி அரசு என்றெல்லாம் பேசுகிறார்களே, இந்தக் கழகத்தார்கள், ஏன் தெரியுமா? என்று கேட்டு விடையும் தருகிறார்கள்; எல்லாம், அமைச்சர் ஆகும் ஆசையினால்தான் என்று.

பாரேன், தம்பி! ஒவ்வொரு நாட்டு அறிவாளர், வித்தகர், வேலையற்றுப்போய், சந்திரமண்டலம் போகும் வழி, செவ்வாய் மண்டலத்தின் தன்மை, எனும் ஏதேதோ ஆராய்ச்சி நடத்து கிறார்கள் நமது - அமைச்சர்களைப் பார்! யாரும் நடத்தாத, எவராலும் நடத்த இயலாத, எவரும் வியந்து பாராட்டத்தக்க ஆராய்ச்சி நடத்திப் பேருண்மை ஒன்றைக் கண்டுபிடித்துக் கூறி விட்டனர் - தனிநாடு என்று நாம் பேசுவது மந்திரி வேலைக்காகத் தான்! என்று!!

இப்படி அமைச்சர்கள் பேசியது கேட்ட, நண்பரொருவர், சொன்னார், நூலை அறுத்திடுமோ என்று அஞ்சி, அங்குக் குதித்துக் கூத்தாடிய குரங்குகளை ஒருவன் விரட்டினானாம்! குரங்கு, ஓஹோ! என்போன்ற "வால்' இவனுக்கு இல்லாத பொறாமையால், இவ்விதம் செய்கின்றான்! எனக்குள்ள பெருமையே இந்த "வாலால்' வருவதன்றோ, இது அந்த மானிடனுக்குக் கிடைத்திடலாமா - கூடாது - என்று கூறிற்றாம், ஏதோ அப்படி ஒரு கதையாம்.

நான்தான், மெத்தவும் கேட்டுக்கொண்டேன், அந்த நண்பனை, இப்படி நாலு பேர் நடுவே பேசாதேயப்பா - சரியல்ல - நமக்கும் அவர்களுக்கும் பிறகு வித்தியாசம்தான் என்ன - அமைச்சர்கள் பேசட்டும் - தாங்கிக்கொள்வதிலே என்ன தலை இறக்கம் - அவர்களையே நாடு தாங்கிக் கொள்கிறபோது, அவர்களின் நாக்குத் தீண்டுவது கண்டு நாம் கோபப்படலாமா? என்றெல்லாம் சொல்லி வைத்தேன்.

தம்பி, தமிழகத்தின் பழங்காலச் சிறப்பினை மறந்து விட்டால், இன்று அமைந்துள்ள, வட அரசுக்கு இம்மியும் எதிர்ப்பு எழாது என்றெண்ணி, வரலாற்றையும் இலக்கியத்தையும் கூட, அழித்தொழிக்க முனைகின்றனர்.

தமிழ் உணர்வு, பொங்கற் புதுநாள் போன்ற பொன்னான விழாக்களின்போது, ஏற்றம் பெற்றுத் திகழ்கிறது.

இதை அறிந்து, பாழாக்க இனி, என்னென்ன செய்வாரோ, யாரறிவார்?

***

முன்பு நான், வாழு! வாழவிடு!! என்றெழுதியபோது, நமது இயற்கையும், உரிமையும் கொண்ட தமிழர், திராவிடர் என்ற உணர்ச்சியியையும் அழித்தொழித்து, பாரதம், ஏக இந்தியா எனும் உணர்ச்சி போலி என்ற காரணத்தால் அதைப் புகுத்தி வெற்றி காணவும் முடியாமல் ஒரு "சூன்ய' நிலைமையை, எங்கே இவர்கள் ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தை வெளி யிட்டேன். பலர், அவ்விதம் அஞ்சத் தேவையில்லை. நாம், நமது இன உணர்ச்சியை என்றும் இழந்துவிடப்போவதில்லை என்றெல்லாம் எழுதி எழுச்சியூட்டினார்கள். அவர்கட்கு என் நன்றி. பொங்கற் புதுநாள்போன்ற விழாக்காலம், தமிழ் இன உணர்வை, மங்கிடாதிருக்கச் செய்யும் மகத்தான நல்வாய்ப்பு. எனவே, மனைதோறும் பெற்றிடும் மகிழ்ச்சியுடன், மன்ற மெங்கும், தமிழர் மாண்புபற்றி எடுத்துரைத்திட இந்த நாட்களைப் பயன்படுத்துதல் ஏற்றம் அளிக்கும்; அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.

***

உருட்டி மிரட்டினாலும், உறுமிக் கிடந்தாலும், உண்மை யினை அடியோடு ஒழித்துவிடுதல் இயலாது.

வரலாறு தெளிவாக உணர்த்துவது, ஓர் பேருண்மை. நமது இடம், திரு இடம்; வடக்கே வேறு இடம்; இரண்டையும் பிணைக்கிறார்கள்; அது ஒவ்வாது என்பதை எடுத்துக் கூறாத, வரலாற்றுப் பேராசான்களும், உளநூல் வல்லோரும் - விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர - இல்லை என்று கூறலாம்.

தம்பி! இந்தியா என்பது இயற்கையானது அல்லதான் - பல்வேறு இனங்களின் இருப்பிடங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன என்பதும் உண்மைதான் - என்றாலும், இந்தியாவை ஒரு நாடு ஆக்கிவிட்டோம் - ஒரு பேரரசு அமைத்துவிட்டோம் - இனி இதை மாற்றப்போவதில்லை என்று பேசுகின்றனர் அரசினர்.

இது வேதனை நிரம்பிய பேச்சு - இன உணர்ச்சி உள்ள எவரையும், செய் அல்லது செத்துமடி என்று தூண்டிவிடக் கூடிய அறைகூவல்; அதுமட்டுமல்லாமல், ஒரு போலி அமைப்புத்தான் இந்தியா என்பதை வெட்கமின்றி ஒப்புக் கொள்வதுமாகும்.

கிடைத்ததை விடமாட்டோம் என்று பேசுவது அறம் அறிந்தோர் பேச்சு அல்ல - ஆதிக்கக்காரரின் ஆணவப் பேச்சு. ஆனால், வரலாறும், இலக்கியமும் அழிக்கமுடியாத விதத்தில் ஏற்படுத்தி வைத்துள்ள உணர்ச்சி, வழிவழி வளர்ந்து பண்பாடு ஆகி, இருக்கிறது; அந்த "உணர்ச்சி'யை அழித்து விடுவது, இயலாத காரியம் என்பதை, இன்று ஆதிக்கத்தை நம்பிக்கொண்டிருக்கும் அரசினர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

ஆனால், உரிமைக்காக எதனையும் இழந்திடும் வீர உணர்ச்சி, தியாக உள்ளம், கொழுந்துவிட்டு எரியும்போது ஆணவம் வெந்து கருகிச் சாம்பலாகும்.

இவ்வளவு பலமாக அமைத்துவிட்டிருக்கிறோம், ஆதிக்கத் துக்கு அரண்கள் உள்ளன; அரண் காக்கப் படைகள் உள்ளன; படைகள் அமைத்திடப் பணபலமும் உண்டு என்று இறுமாந்து கிடப்போர், இந்தியப் பேரரசு என்றென்றும் நிலைத்து இருக்கப் போகிறது என்று எண்ணுகிறார்கள்.

எனினும், அவர்களுக்கே சிற்சிலபோது, ஐயப்பாடும், அச்சமும், கவலையும் கலக்கமும் ஏற்பட்டுவிடுகின்றன; கை பிசைந்துகொள்கின்றனர்; இந்தியர் என்ற உணர்ச்சி இல்லையே, என் மொழி! என் பிரதேசம்! என்று பேசுகிறார்களே. அதற்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்று தெரிந்தால், பேயாட்டமாடு கிறார்களே! என்று பேசுகிறார்கள், மனம் மருண்டு.

பேரரசு அமைத்துவிடலாம் - பலர் அமைத்தனர் - அதனை உடைபடாமல் பாதுகாக்கவும் செய்யலாம் வெகு பாடுபட்டு - ஆனால், பிணைக்கப்பட்ட நாடுகளிலே, ஏற்பட்டுவிடும் மனக்கசப்பு, மாறாது. அது, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் நச்சரவம் போன்றது.

புயலில் வீழும் பெருமரங்கள், நாலைந்து நாட்களுக்கு முன்பே, நான் விழப்போகிறேன் - என் வேர்கள் நைந்து போயுள்ளன - பெரும் காற்றடித்தால் தாங்கி நிற்கும் வலிவு எனக்கு இல்லை - என்று அபாய அறிவிப்பா தருகிறது?

காரணமற்று, அடிப்படைக் கோளாறுடன், அமைக்கப்படும் எந்தப் பேரரசும், விடுதலை ஆர்வம் முற்றிப் புரட்சிப் புயலாக மாறும்போது, பொடிப்பொடியாகித்தான் போகும்.

உதுமானிய சாம்ராஜ்யத்தைவிடப் பேரரசு இருந்த தில்லை என்று கூறலாம், வீரமும் திருவும் விளங்கிடும் சாம்ராஜ்ய மாகத்தான் திகழ்ந்தது. உதுமானிய சாம்ராஜ்யத்தின் புகழ்பாடக் கவிவாணர்களும், வெற்றி தேடிக் கொடுக்க வீரர் குழாமும், அணி அணியாக இருந்தனர்.

படைபலம் மட்டுமல்ல, உதுமானிய சாம்ராஜ்யத்துக்குத் தேவபலமும் இருக்கிறது என்றுதான் செப்பிப் பெருமைப் பட்டனர்.

எவ்வளவு விரிந்து பரந்து இருந்தது! எத்துணை எத்துணை எழிலூர்கள், அந்தச் சாம்ராஜ்யத்தில்!

உதுமானிய சாம்ராஜ்யத்திலே, இருந்து, இதுபோது தனி நாடுகளாகிவிட்டவைகளின் பட்டியலைப் படித்தால் வியப்பாக இருக்கும்; அவ்வளவு "நாடுகளை' சாம்ராஜ்யம் தன் இரும்புக் கரங்களில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறது.

இன்றைய துருக்கி
கிரீஸ்
பல்கேரியா
ருமேனியா
செர்பினியா
போஸ்னியா
கிரீமியா
ஈஜிப்ட்
சிரீயா
துனீசியா
திரிபோலி
அல்ஜியர்ஸ்

இவை உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள்!

இந்தியப் பேரரசு, எப்படித் திராவிடம் போன்ற நாடுகளைப் "பிரதேசங்கள்' என்று பேசிவருகிறதோ, அதுபோல, இவைகளை உதுமானிய சாம்ராஜ்யமும், பகுதிகள் என்றுதான் குறிப்பிட்டது.

1907ஆம் ஆண்டுவரை உதுமானிய சாம்ராஜ்யம், பல இனம், பல நாடுகளைத் தன்னுடைய பிடியில் வைத்துக்கொண்டு, ஆண்டவனின் அருளும், படைபலமும், பாதுகாப்பு அளித்து வருவதாகவும், எதிர்த்து எவரும் ஏதும் செய்துவிட முடியாது என்றும் எக்காளமிட்டது.

இன்று, தம்பி! இத்தனை பெரிய உதுமானிய சாம்ராஜ்யம், என்ன ஆயிற்று? உடைபட்டுப் போயிற்று!

துருக்கியை மையமாக வைத்துத்தான், உதுமானிய சாம்ராஜ்யம் கட்டப்பட்டது; இன்று மிச்சமாக இருப்பது துருக்கி ஒன்றுதான்.

வரலாறு அறியாதார், ஈஜிப்ட் ஒரு காலத்திலே, துருக்கி யால் அமைக்கப்பட்ட, உதுமானிய ராஜ்யத்திலே ஒரு பகுதி என்று நாம் கூறினால், ஆச்சரியப்படுவர்.

கிருஸ்தவ மார்க்கத்தைக் கொண்ட பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளாகிலும், இஸ்லாமிய மார்க்கத்தைக்கொண்ட துருக்கியர் அமைத்த சாம்ராஜ்யத்தில் இருப்பது இழுக்கு, கடவுளுக்கே பொறுக்காது என்று கருதிக் கொதித்தெழுந்து, விடுபட, தனியரசாகத் துடித்திருக்கலாம் - ஈஜிப்டுக்கு என்ன கெடுதல்?

ஈஜிப்டில் உள்ளவர்கள் அராபியர்.

துருக்கியரும் அராபியரும் இருவருமே, இஸ்லாமியர். மதம் ஒன்று! என்றாலும், அராபியருக்கு அராபியர் என்ற இன உணர்ச்சி, துருக்கியரின் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு அழுத்த மாகப் பிணைக்கப்பட்டிருந்தும் மங்கிப் போய்விடவில்லை.

இஸ்லாம்போல், மார்க்கத்திலே சேர்ந்துள்ளவர்களை ஒன்றுபடுத்தும் மகத்தான சக்தி வேறு இல்லை. இருந்தும், அராபியர் தம் இன உணர்ச்சியை இழக்கவில்லை!

இப்போதும், நாசர், அராபியப் பேரரசு என்றுதான் கூறிப் பூரிப்படைகிறார்.

இமய முதல் குமரி வரை, எங்கு இருந்தாலும், இந்தியப் பேரரசில், பேதம் காட்டப்படுவதில்லை; எல்லோரும் சமம் - எவரும் தாழ்வில்லை - எவரும் உயர்ந்தோர் என்றும் உரிமை கொண்டாடுவதற்கில்லை - என்று இந்தியப் பேரரசுக்காக வாதிடுவோர் பேசுகின்றனர்.

உதுமானிய சாம்ராஜ்யத்தில், துருக்கியர், அராபியரை எந்த ஒரு துறையிலும், எந்த வகையிலும், தாழ்வாக நடத்த வில்லை. படையிலாகட்டும், ஆட்சி அலுவலகங்களிலாகட்டும், அராபியர், துருக்கியருக்குச் சமமாகவே இடம் பெற்றனர், பெருமை பெற்றனர். என்றாலும், நாம் அராபியர்! நமது நாடு, ஈஜிப்ட்! இன்று அதனைத் துருக்கியர், தமது சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தியுள்ளனர் என்ற எண்ணம், அவர்கள் மனதை விட்டு அகலவே இல்லை.

அராபியம் துருக்கியரும் கலப்பு மணம் செய்துகொண்டும் வாழ்ந்தனர். என்றாலும், அராபியர் என்ற தேசிய உணர்ச்சி, பீறிட்டுக்கொண்டு வந்தது, சாம்ராஜ்யப் பிடிப்பு பொடிப் பொடியாயிற்று; விடுபட்ட ஈஜிப்ட் தனி அரசு, தன்னரசு நடத்துகிறது.

***

அது அந்தக் காலம் - புரட்சி செய்து - படைகொண்டு தாக்குவது - அதனால்தான் பேரரசிலிருந்த நாடுகள் பிரிந்து, தனி அரசு என்றாகிவிட்டன. இது வேறு காலம்!! என்று மிரட்டும் குரலிலும், கேலி செய்யும் விதத்திலும், ஆதிக்கக்காரர் பேசுகின்றனர்.

காலம், முறைகளை மாற்றுமே தவிர, மனப்போக்கையும், உணர்ச்சியையும், நிச்சயம் மாற்றிவிடாது - அழித்துவிடாது.

முன்புபோல அல்ல, இப்போது. எந்த இடத்திலிருந்து, குமுறல் கேட்டாலும், எந்தப் பகுதியில் வீரத் தியாகிகளின் இரத்தம் கொட்டப்பட்டாலும், ஏன்? என்று கேட்கவும், நியாயம் பேசவும், துணை நிற்கவும், உலகில் பல்வேறு நாடுகள் முனைந்து நிற்கின்றன.

அந்தக் காரணத்தால்தான், கெனியா நாட்டு விடுதலைக் கான நல்லெண்ண ஆதரவு பெற, அந்நாட்டு விடுதலைத் தளபதி டாம் இம்போயா, இந்தியப் பேரரசுத் தலைவரை நாடி வருகிறார்.

அவர்களுக்கெல்லாம், தமது நாட்டு விடுதலை குறித்து எடுத்துரைக்க, இங்கெல்லாம் வரும் அளவுக்கு "ஏகாதிபத்தியம்' உரிமை தருகிறது. ஆனால், இங்கு நடைபெறும் "அன்பாட்சி', "அகிம்சையாட்சி' வெளி நாடுகள் செல்ல, நமது கழகத்தவருக்கு, அனுமதி வழங்க இப்போதே மறுக்கிறது.

இஃதொன்றே, இந்தியப் பேரரசுக்கு உள்ள வலிவைக் காட்டவில்லையா என்று கேட்கத் தோன்றும். தம்பி இது அந்த அரசுக்கு உள்ள வலிவை அல்ல, நம்பிக்கைக் குறைவை, பயத்தைத் தான் காட்டுகிறது. எந்த நாடு சென்று இவர்கள், வரலாற்று, இலக்கிய ஆதாரங்களைக் காட்டித் தங்கள் இன இயல்புகள் பற்றி எடுத்துச் சொன்னாலும், ஏற்றுக்கொண்டு ஆம்! ஆம் என்று பேசுவார்களே, நாம் பிறகு, பலருடைய கேள்விகளுக்கு அல்லவா பதிலளிக்கவேண்டி வந்துவிடும், என்ன பதில் அளிப்பது? நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்த அமைக்கப்பட்ட பேரரசுக்கு என்ன நியாயம் காட்டுவது? என்ற பயமும், நம்பிக்கைக் குறைவுமே, கழகத் தோழர்களை, வெளிநாடுகள் போகவிடாமல் தடுத்து வைத்திடச் செய்கிறது.

ஆனால், தம்பி! இலண்டனிலோ, பெர்லினிலோ, டோக்கியோவிலோ, பாரிசிலோ, வாμங்டனிலோ இதுபற்றி இப்போது ஒன்றுமே தெரியாது என்றும் கூறிவிட முடியாது.

நமது பூம்புகார் பற்றியும், கொற்கை குறித்தும், உறையூரில் நமது அரசு இருந்த ஏற்றம்பற்றியும், நமது மன்னர், காழகம், கடாரம், வங்கம், கலிங்கம் சென்று வெற்றி கண்டது குறித்தும், நமது தமிழகப் பட்டி தொட்டிகளிலெல்லாம், எடுத்துக்கூறும் கட்டத்திலே நாம் மும்முரமாக ஈடுபடவேண்டி இருக்கிறது.

தமிழகமெங்கணும், தமிழ் இன உணர்வு வீரமணம் எழுப்பினால், பிற நாட்டார் நம்மை அறிந்துகொள்ளச் செய்வதிலே கஷ்டம் அதிகம் இருக்காது.

எந்த நாடும், ஒரு நாட்டின் ஆட்சி மன்றத்திலே எவர் இடம் பெறுகின்றனர். அவர்தம் திட்டமென்ன, கொள்கை என்ன, மக்கள் ஆதரிப்பது எந்தக் காரணம் கொண்டு என்பதனை இன்று அறிய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

எனவேதான், இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம், சுரண்டல் யந்திரம், இன உணர்வு அழிக்கும் பலிபீடம் என்ற கொள்கையைக் காட்டி, திராவிடம் அமைக்கவேண்டும் என்ற திட்டத்துக்காகப் பணியாற்றும், நமது கழகம், பொதுத் தேர்தலில், மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெறவேண்டும் என்று விரும்புகிறோம்.

அது கிடைத்திடுமேல், தட்டாமலே, அறமன்றக் கதவுகள், திறக்கப்படும்; கேளாக் காதினருக்கும், நமது விடுதலைப் போர்ப் பணி கேட்கும், வெற்றித் தென்றல் வீசிடும்.

தம்பி! இன்று விழாநாள். தென்றல் காண்கிறாய் இல்லத்தில்! இது, உன் மனைமாட்சிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் நாட்டிலே வீசி, நலிவுகளைப் போக்கிடும், வெற்றித் தென்றல் விடுதலை எனும் சந்தனமணம் கமழ்ந்து வீசிட வேண்டும் அன்றோ?

அதற்கான அரும்பணி அடுக்கடுக்காய் உள்ளது, அறிவாய். அறிந்ததை உரைத்திடின், ஆரணங்கும் தடுத்திடப்போவதில்லை.

பொருள்தேடப் புறப்படுகிறார் என்றால், இருப்பார்க்கு வந்து உரை என்று இயம்பிடுவாள், சங்க காலத்துப் பெருமாட்டி! அந்த ஆரணங்கே கூட, களம் செல்கிறான் என்றாலோ, வேல் எடுத்துக் கரம் கொடுத்து, புன்னகை விருந்திட்டுப் போய்வருவீர், என் அரசே! வெற்றித் திருவுடனே, நீர் வருவீர், நானறிவேன்! நாடு உமை அழைக்கிறது. நாட்டுக்கே நாம் உள்ளோம். மாடு மனை இருப்பதும், மலர்த்தோட்டம் இருப்பதும் ஆங்கு நாம் ஆடி மகிழ்வதுவும் நாடு நமது என்ற நன்னிலை இருப்பதனால் தான், அந்த நிலைக்கு ஒரு துளியும் குந்தகம் விளையுமென்றால், ஆவி தரிக்காது; மானமொன்றே நமக்கு வழி வழி வந்த செல்வம், அது காக்கப் புறப்படுவீர்! ஆற்றல் உண்டு நாட்டைக் காக்க! அந்தக் கடமையினை ஆற்ற நீர் செல்கையிலே, பிரிவு தாங்கும் மனம் உண்டு, தமிழ் மகள் நான்! என்றுரைத்துக் களம் அனுப்பி வைப்பர்.

இன்றும், அந்தப் பண்பு பட்டுப்போய்விடவில்லை. எத்தனையோ தாய்மார்கள் நாட்டுக்கு இடிவந்துற்ற காலையிலே, ஆரணங்கு பலரும், தம் நெஞ்சில் நிறைந்தவரை, கொஞ்சு மொழி பேசிடும் தம் கொழுநரை, கோல்கொண்டோர் அது சாய்க்கும் வேலையிலே ஈடுபட்டு, தமிழ் வீரத்தைப் பழித்தபோது, அறப் போருக்கு அனுப்பி வைத்தார் - அறிவோம் நாம். அது நம் கழக வரலாறு.

"நாகநாடு' கேட்டிடும் தலைவனை வேட்டையாடிப் பிடிக்கப்பார்த்தனர்; இன்றோ அவன் கேட்டிடும் "தனிநாடு' போன்ற ஒரு ஏற்பாடு தந்து, சமரசம் கேட்கிறார்; நாகர் இணங்க மறுக்கின்றனர்.

"பஞ்சாபி சுபா' கேட்கும் பழம்பெரும் வீரராம் தாராசிங் பாடிடும் பரணி கேட்டுப் பல்லாயிரவர் சிறை சென்று, இன்று விடுதலை பெற்று வந்தனர் வெளியே, அறப்போர் தொடுத்திட - புதிய முறையினில்.

"ரகுவம்ச' காலமுதல் எமது வங்கம் எவருக்கும் அடி பணிந்து கிடந்ததில்லை, இன்றும் எவர் எம்மை அடிமை கொள்ளச் சூழ்ச்சிகள் செய்திடினும், முறியடிப்போம் என்று முழக்கமெழுப்புகின்றனர் வங்க மக்கள்.

அவரெலாம் அடவி தன்னைப் புகலிடம் என்று பெற்று உழன்ற காலத்திலேயே, அணிநகர் பலவும் கண்டு, அறநூற்கள் பலவும் பெற்று, அரசு அமைத்து, தமிழர் வீர முரசு கொட்டி வாழ்ந்தார்.

ஆப்பிரிக்கக் கண்டத்துள்ளார், அடவியில் உள்ள பொல்லா மிருகத்துக்கொப்பார் என்று, அவர்களைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றார், ஆணவ வெறியர் முன்பு. இன்று ஆப்பிரிக்க பூபாகமெங்கும் விடுதலை முரசு!

எவரையும் அடிமைகொள்ள எவருக்கும் உரிமை இல்லை; அவரவர் தாயகத்தில் தனி அரசமைத்து வாழ்வதே, அவனிக்கு அடுக்கடுக்காய், அழகுறு அணி அளிக்கும். இதனை இனிக் காணாவிட்டால், இருண்டிடும் எதிர்காலமென்று, அறிவுளார் அனைவருமே அறைகின்றார் நாளும்.

இத்தகு நாட்கள் தன்னில் இருந்திடும் நமக்குத் தம்பி! மெத்தவும் பொறுப்பு உண்டு. விடுதலைக்கு நல்வாய்ப்பு உண்டு; வேண்டுவதெல்லாம் உறுதி; அதுபோல் உறுபகை அழிக்கவல்ல கருவியும் வேறு உண்டோ?

அந்த உறுதிபூண்ட வீரனாம் உனக்கு ஓர்நாள், திருநாளாய் உள்ளது; உறுதி வளர்த்திடும் வகையான உற்சாகம் பெற்றிட.

ஆகையினால், அருமைத் தம்பி! ஆகட்டும், ஆகட்டும் இன்றுனக்கு அரிய விழா; அதிலே கிடைக்கும் இன்பம், பெற்று மகிழ்ந்திடுக! பேசிட ஆயிரம் உண்டு! பூசிடச் சந்தனம் உண்டு! வாசமலரெடுத்துச் சூட்டிடவும், வாய்ப்புண்டு!! இத்தனையும் உன் செல்வம், இடம் கொடுத்தால் மட்டுந்தான்!

இன்பம் பொங்கி, நின் இல்லம் எழில் பூத்து விளங்கட்டும். அந்த இன்பத்தூடே, திருநாடு தெரியட்டும் என்ற என் நல்வாழ்த்தே, நான் இன்று உனக்களிப்பேன்; வேறென்ன வேண்டும் உனக்கு?

மழை
நெஞ்சில் நெருப்பு
கன்னி விதவையானாள்
நீதிபதி, வக்கீலானார்
செந்தாமரையாள்
பூச்சு வேலை

என்பன

*** இக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளன; அவை நானளிக்கும், இஞ்சி, மஞ்சள் இன்ன பிற என்று கொள்ளேன்!

பொன் எனினோ, என் மின்னிடையாள், மேனிக்கென்ன!

மணி எனினோ, மகவின் கண் ஒளியே, காண்பாய்! உன்னிடம் உள்ள செல்வம் ஏ! அப்பா! மிக அருமை!!

நான் அளிக்க ஒன்று உண்டு; என் நல்லெண்ணம்; வாழ்த்துக்கள்; இல்லம், இன்பப் பூங்காவாகத் திகழ்க! உனக்கென்று அளிக்கும்போது, அதனைப் பெற்று, மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து மகிழ்வாய் என்று, சொல்லவா வேண்டும்? நீ, தமிழன்; என் உடன்பிறப்பு! வாழ்க! வாழ்க!!

அண்ணன்,

14-1-1961