அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயம் வென்றிட. . . (3)
1

தருமபுரி தோல்வி நம்பிக்கை கொண்டோர்க்கு நம்ப முடியாச் சேதி
மக்களின் பரிவு கழகத்திடம்
ஆபிரகாம் லிங்கனுடைய தோல்வி - வெற்றிப் பட்டியல்
அமைச்சர்கள் தருமபுரி தலைநகர் என்றதால், கழகத்துக்குக் கிடைத்த வாக்குக் குறைவு.

தம்பி!

மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருக்கக் காணும் போது எவருக்கும் அடடா! ஒடிந்துவிட்டதே! கொடியே இதனாலே கெட்டுப்போய்விடுமோ, காய்ந்துபோய்விடுமோ, இனி இந்தக் கொடியிலே அழகிய மலர்கள் பூத்திடாதோ! மணம் பரப்பிடாதோ! என்றெல்லாம் கூறிடத் தோன்றும், கவலை உண்டாகும்.

எருக்கஞ் செடி எருமையின் காலிலே சிக்கிக் கூழாகிப் போயினும், யார் அதைக் கண்டு கவலை கொள்வார்கள்!! ஊருக்கே எழிலளித்து வரும் மணிமாடத்தின் சுவரிலே ஒரு சிறு வெடிப்பு ஏற்பட்டால் காண்பவரெல்லாம் கவலை கொள்வார்கள்;

இந்த வெடிப்பினாலே கட்டடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அச்சம் கொள்வதால். கலனாகிப்போய் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பாழுங்கிணற்றிலே மேலும் சிறிது கலன் காணப்பட்டால் கவலைகொள்வார் உண்டோ?

பட்டுச் சட்டையிலே ஒரு பொட்டு மசி வீழ்ந்தாலும், எல்லோர் கண்களிலும் படுகிறது, என்ன இது! என்ன இது! என்று கேட்கிறார்கள்; குடுகுடுப்பாண்டியின் உடையிலே காணப்படும் கறைபற்றிக் கவலைப்படுவார் உண்டோ?

வீரனுடைய கரத்திலே வீழ்ந்துவிட்ட "வெட்டு' எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்; உடற்கட்டைப் பார், இரும்புபோல! என்று கூறினாலும், வீணனுடைய உடலமைப்பிலே எவரும் கவனம் செலுத்தமாட்டார்கள்.

திருக்குறள் ஏட்டின் பேரிலே மைக்கூடு கை தவறிக் கவிழ்ந்துவிட்டால், பதறிப்போவோம்; பழைய பஞ்சாங்கத்திலே கறையான் குடியேறினால்கூட கவலை கொண்டிடத் தோன்றுமா?

நாம் நல்லது என்று எண்ணி மதிப்பளித்திடும் எந்தப் பொருளுக்கேனும், ஏதோ காரணத்தால் ஏதாகிலும் ஒரு சிறு கெடுதல் ஏற்பட்டுவிட்டாலும், பதறிப்போகிறோம். அது அந்தப் பொருளிடம் நமக்கு இருக்கும் பற்று எந்த அளவு இருக்கிறது என்பதற்குச் சான்று!

தம்பி! மகிழ மரத்தடியிலே உதிர்ந்து கிடக்கும் பூக்களை, ஒவ்வொன்றாகப் பக்குவமாகப் பொறுக்கி எடுத்து மகிழ்ந்திடுவர் சிற்றிடையார்!! தேங்காய் ஓட்டுத் துண்டுகளை அல்ல!

கழுத்தளவு தண்ணீரில் இறங்கிப் பறிக்கிறான் ஓர் காளை, அழகோவியமாகத் திகழ்ந்திடும் செந்தாமரையை - அவன் காலைச் சுற்றிக்கொள்ளும் பாசியைத் தூக்கி வீசிவிடுகிறான் மற்றோர் பக்கம்.

தத்தமது கருத்துக்கு எவை எவை விரும்பத்தக்கன, மகிழ்ச்சி தரத்தக்கன என்று தோன்றுகின்றனவோ, அந்தப் பொருளினைப் பெற அவர்கள் முனைவதும், அந்த முயற்சியிலே வெற்றி கிடைத்திடும்போது மகிழ்ச்சி கொள்வதும் இயற்கை.

பொழுது சாயும் நேரம், உச்சிப்போது முதல் தேடித் தேடிக் கண்டிட முடியாது கவலை மிகுந்திருந்தவனுக்கு, அவன் தேடிவந்த மூலிகை, ஒரு சிறு குன்றின்மீது இருப்பதாகச் "சேதி' கிடைக்கிறது; கிடைத்ததும், இன்றைக்கு இதுபோதும், நாளைய தினம் பார்த்துக்கொள்ளலாம் என்றா இருந்துவிடுவான்? ஒருக்காலும் இல்லை; அலுப்பினை மறந்திடுவான்; அக மகிழ்ச்சியுடன், குன்று நோக்கி நடந்திடுவான்

தாம் விரும்பும் பொருளைப் பெற்றிடும் முயற்சியில் ஈடுபடுவோருக்கும், இன்னலையே கன்னலாக்கிக் கொள்ளும் இயல்பு ஏற்பட்டுவிடும்.

ஆனால், அத்தனை கஷ்டப்பட்டு அவன் கொண்டுவந்த மூலிகை, கடுங் காற்றொன்று வீசியதால், கரம் விட்டுக் கிளம்பி, காட்டிலே ஓர்புறத்திலே, கள்ளி காளான் மிகுந்த பகுதியிலே பறந்து சென்றுவிட்டால், அவன் எவ்வளவு பதறிப்போவான்!

வெறுங்கையுடன் வீடு திரும்புகிறான்; எடுத்த காரியந்தனை முடித்திடும் ஆற்றல் மிக்கவன் இவன் என்பதால், இல்லத் துள்ளோர், மூலிகை கொண்டு வருகிறான் என்று எண்ணிப் புன்னகை காட்டுகிறார்கள்; பெருமூச்செறிந்தபடி அவன், பட்டபாடு வீணாயிற்று! கரத்திலே சிக்கிற்று, கடுங்காற்று பறித்துக்கொண்டது! என்று கூறுகிறான்; கேட்போர் உள்ளம் என்னென்ன எண்ணும்!

தாம் விரும்பும் பொருள், மதித்திடும் பொருள், பெற்றிட வேண்டி, ஆற்றல் மிக்கவனை அதற்காக அனுப்பி வைத்திட, அவன் ஆயிரத்தெட்டு இன்னலைத் தாங்கிக்கொண்டு, பொருளைக் கண்டெடுத்து வருகிற வழியில், அவனையும் மீறியதோர் வலிவினால் பறிக்கப்பட்டுப் போய்விடின், பொருளைப் பெறத் துடித்துக்கொண்டிருப்பவர்களின் மனம் என்ன பாடுபடும்!

பெற்றிடவேண்டியதாக ஒரு பொருள் இருந்து, அதைப் பெற்றளிக்கும் ஆற்றல் மிக்கவன் அதைப் பெற முனைந்து, பெற்றிடுவான் என்று நம்பிக்கை பெரும் அளவுக்கு எழுந்திட்ட நிலையில், பெற்றிட இயலவில்லை என்றோ, பெற்றிட முனைந்தேன், வேறொருவன் அதனைத் தட்டிப் பறித்துக் கொண்டு சென்றான் என்றோ அப்பொருளைப் பெற்றளிக்கச் சென்றவன் வந்து கூறிடும்போது, பொருளைப் பெற்று மகிழ்ந்திட எண்ணி ஆவலுடன் காத்துக் கிடந்தவர்களின் உள்ளம், உலைக் கூடமாகிவிடும்.

பொருளின் அருமை, அதனிடம் ஏற்பட்ட விருப்பம், பொருளைப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை, அதனைப் பெறச் சென்றவனின் ஆற்றலிலே வைத்துள்ள நம்பிக்கை, இவற்றின் தன்மையைப் பொறுத்திருக்கிறது, பொருள் பெறாததால் ஏற்படும் ஏமாற்றம், எரிச்சல், கவலை, வேதனை.

பஞ்சவர்ணக் கிளியைப் பக்குவமாகப் பிடித்திடச் சென்று, பாதி மரம் ஏறுகையில், அது பறந்துபோய்விட்டது என்றொருவன் கூறும்போது, கேட்பவர்கள், அடடா! அப்படியா! என்று பேசுவர், பரிவுகாட்டி!

ஒரு மணி நேரமாகக் காத்திருந்தேன் கிடைக்கவில்லை என்றொருவன் கூற, எதற்குக் காத்திருந்தாய் ஒரு மணி நேரம் என்று மற்றவன் கேட்க, ஓணானுக்கு என்று முன்னவன் சொன்னால், மற்றவன், பேதையே! பேதையே! இதற்கா இத்தனைக் கவலை கொள்கிறாய்! ஒரு ஓணான் கிடைக்காததற்காகவா!! என்று கூறிக் கை கொட்டிச் சிரிப்பான்.

தர்மபுரியில், தம்பி! நாம் கட்டாயம் வெற்றிபெற்றுத் தருவோம் என்று, வெற்றி பெற்றாக வேண்டும் என்று மெத்தவும் விரும்பி, வெற்றி பெற்றளித்திடுவோம் என்று அழுத்தமாக நம்பிக்கொண்டிருந்தவர்கள் தமிழகத்திலே மிகப் பலர் - கழகத்துக்கு வெளியேகூட. தர்மபுரி வெற்றி இந்த நேரத்தில் மிகவும் விரும்பத்தக்கது என்பதிலேயும், அந்த வெற்றியைக் கழகம் பெற்றளிக்கும் ஆற்றல் உள்ளது என்பதிலேயும், அவர்கள் அவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறார்கள்! அதனால்தான், தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற "சேதி' வந்ததும், அவர்களால் நம்பமுடியவில்லை, கவலை அவர்களை அலைக்கழித்திருக்கிறது.

தர்மபுரியில் தோற்றுப்போனதால், எல்லோருக்கும் ஏற்படுவதுபோல எனக்கும் கவலையும் வேதனையும் ஏற்பட்டது என்றாலும், அந்தக் கவலையும் இடையில்,

மக்கள் கழக வெற்றியை எவ்வளவு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள்,

கழக வெற்றி நிச்சயம் என்று மக்கள் எத்துணை நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள்,

வெற்றி பெற்றிடத்தக்க ஆற்றல் கொண்டது கழகம் என்ற எண்ணம் எவ்வளவு அழுத்தமாக இருந்திருக்கிறது,

என்பவைகளை அறிந்துகொள்ள முடிகிறது; கவலையையும் கலைத்துவிட்டு ஓர் இன்பப் புன்னகை எழுகிறது.

கழகமாவது, வெற்றி பெறுவதாவது!
கழகத்துக்கு ஏது அந்த வலிவு!

கழகம் வெற்றி பெற்றால் என்ன, தோற்றால் என்ன!

என்ற இந்த முறையிலே, பற்றற்று, மக்கள் இருந்துவிடவில்லை; உலகிலே கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள் எத்தனை எத்தனையோ இருக்கின்றன. இப்போது கழகம் தர்மபுரியில் வெற்றி பெற்றதா இல்லையா என்பதிலா கவனம் செலுத்த வேண்டும்! என்று கூறி அலட்சியப் போக்கிலே இருந்துவிட வில்லை. கழகம் வெற்றி பெறவேண்டும், கழகம் வெற்றி பெறும், அந்தச் சேதி காதில் விழும், களிப்புக் கிடைத்திடும் என்று மக்கள் மிக்க ஆவலுடன் இருந்திருக்கிறார்கள். ஆகவேதான், கழகம் தர்மபுரியில் தோற்றுவிட்டது என்றதும், அவர்கள் திடுக்கிட்டுப் போயினர், துயர் கப்பிக்கொண்டது.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கழகம் ஒரு தேர்தலிலே ஈடுபடும்போது, வெற்றி யாருக்கு என்பது பற்றி, மக்கள் இந்த அளவு அக்கறை காட்டினதில்லை.

வெற்றி பெற்றால்கூட, கழகமா? வெற்றியா? சரி, அதனால் என்ன? கழகம் வெற்றிபெற்றுவிட்டதால்! காய் கனியாகிவிடப் போகிறதா, காகம் கானம் பாடப் போகிறதா! ஏனப்பா, கடுகை மலையாக்கிக் காட்டுகிறாய்!! என்று பேசிடுபவரின் தொகைதான் மிகுதி.

இன்று நிலைமை அவ்விதம் இல்லை; கழகம் தேர்தலிலே ஈடுபடுகிறது என்றால், கட்டாயம் வெற்றிதானே! இதிலென்ன! ஐயப்பாடு எழ முடியும்!! என்று மக்களில் பெரும் அளவினர் பேசிக்கொள்ளக்கூடிய கட்டம் தோன்றிவிட்டது.

கழகம், மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது; கழகம் வெற்றிபெறத்தக்க ஆற்றலுடன் இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களிடம் மிகுந்திருக்கிறது; கழகம் வெற்றிபெற வில்லை என்றால், மக்களுக்குத் திகைப்பு ஏற்படுகிறது, எனும் இவை பொருள் மிக்கன. நாம், மக்களின் பார்வையிலே இருக்கிறோம், மக்களின் பரிவு நம்மிடம் உறவுகொண்டிருக்கிறது என்பது பொருள்.

ஆகவேதான் தம்பி! தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்றவுடன், மல்லிகைக் கொடியின் முனை ஒடிந்திருப்பதைக் காணும்போது, மணிமாடச் சுவரிலே வெடிப்பு ஏற்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, பட்டுச் சட்டையிலே ஒரு சொட்டு மசி விழுந்திருப்பது காணும்போது, வீரன் கரத்திலே ஒரு வெட்டு வீழ்ந்திருப்பது தெரியும்போது, திருக்குறள் ஏட்டிலே மசிக்கூடு கவிழ்ந்தது காணும்போது, எப்படிப் பதறுவார்களோ, கவலை கொள்வார்களோ. அப்படிக் கவலை கொள்கிறார்கள், கழகத்தின் தோல்வியைக் கேட்டு.

செல்லாத நாணயத்தைத் தந்திரமாக, நல்ல நாணயம் என்று கடைக்காரனை நம்பச்செய்து தந்துவிட்டு, பொருள் பெற்றுக் கொண்டுவந்து விடுபவன் அடையும் மகிழ்ச்சி காங்கிரஸ்காரர்களைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது, இப்போது!!

அதிலும், பல நாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு ஒரு நாள் விருந்து கிடைத்துவிட்டால், தின்னமுடியாத அளவுக்குத் தின்றுவிட்டுத் திணறுவார்களே, அந்த நிலைக்குச் சென்று விட்டார் முதல் அமைச்சர் பக்தவத்சலனார்!

பல நாட்களாக, கொளுத்தினார்கள், இடித்தார்கள், சுட்டார்கள், செத்தார்கள், ஓடினார்கள் துரத்தினார்கள், பிடித்தார்கள், அடைத்தார்கள் என்ற விதமான "சுபசேதி'களையே கேட்டுக்கேட்டு, இடிந்துபோயிருந்தவரல்லவா, இப்போது வெற்றி என்றதும், தெருக்கூத்திலே காண்போமே, கலர்க் கண்ணாடித் துண்டுகள் பதித்த கிரீடமும், காக்காப் பொன்முலாம் பூசப்பட்ட கட்கமும், ஐந்தாறுவிதமான வர்ணத்துணிகளைச் சுற்றி விடப்பட்ட ஆடை அலங்காரமும், பிசின்போட்டு ஒட்டப்பட்ட மீசை கிருதாவும் கொண்ட "ராஜா' குதித்துக் கூவுவாரே, ராஜாதி ராஜன் வந்தேனே! மகா ராஜாதி ராஜன் வந்தேனே!! என்று அதுபோலாகிவிட்டார்!

வெற்றி! வெற்றி! வேட்டுச்சத்தம் கேட்ட நாட்டில், வெற்றி! வெற்றி! சுட்டுத்தள்ளிய சூரர்கட்கே வெற்றி! வெற்றி! என்று பாடுகிறார். பல நாள். பதைபதைத்துக் கிடந்தவர், இந்தப் பாயசம் பருகட்டும் பாவம்! வேண்டாம் என்பார் இல்லை. ஆனால், இப்படித்தான் வெற்றி கிடைக்கும் என்று முன்பே தமக்குத் தெரியும் என்று பேசுகிறாரே, அது தவறு, தேவையற்றது, பொருளற்றது!

ஆனால், வெற்றிக் களிப்பிலே பொருள் பொருத்தம் பார்க்கவா தோன்றும்; ராமன் பிறவாததற்கு முன்னாலேயே இராமாயணம் எழுதினாராமே வால்மீகி, அதுபோலத் தம்மை எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, அத்தனை பாராட்டத் தக்கதாக கொண்டாடத்தக்கதாக ஏன் தோன்றுகிறது? துளியும் எதிர்பார்த்திராததால்!!

தாளம் துளிகூடத் தவறவில்லை என்று பாராட்டுக் கிடைத்ததும், யாருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிளம்பும்? இசை மன்னர் சித்தூர் சுப்பிரமணியத்துக்கா!! இன்றைக்கு வரவேண்டிய வித்துவான் வராததாலே, இலுப்பையூர் கருப்பையா பாடுவார்!! என்ற அறிவிப்புடன் பாடத் தொடங்கியவர், ஆனந்தத் தாண்டவம் ஆடுவார், தாளம் தவறாமல் பாடியதாகப் பாராட்டப் பட்டால்.

பொதுத் தேர்தலுக்குப் பிறகு கழகம், காங்கிரசைச் சந்தித்த, தேர்தல் களம்,

திருச்செங்கோடு
திருவண்ணாமலை
சென்னை மாநகர்
தர்மபுரி

இவற்றில், முதல் மூன்று இடங்களிலும் காங்கிரஸ் தோற்கடிக்கப் பட்டது; தர்மபுரியிலே வெற்றிபெற்றது.

தாளம் தவறவில்லை என்று தட்டிக்கொடுப்பது போன்ற பாராட்டுதலுக்கு மட்டுந்தான் காங்கிரஸ் உரிமை கொண்டாட முடியும். அதற்கு மேலே கொண்டாடுவது, உப்பை அதிகமாக்கு வதாகும்; மணம் நெடியாகிவிடும் நிலைமை!! ஆனால், அதைத்தான் முதல் அமைச்சர் செய்துவருகிறார் - மும்முரமாக!! நெடுநாளைக்குப் பிறகு புதிதாக வளையல்களை நிறையப் போட்டுக்கொண்டவள், குலுக்கி நடைநடந்து கலகல ஒஎழுப் பிக் காட்டுவதுபோல,

மூன்று முறை கழகம் வெற்றி பெற்றபோது, இதை "முன்கூட்டியே' இன்னதுதான் நடக்கும் என்று கணித்திடும் வால்மீகி எங்கே போயிருந்தாரோ!!