அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இந்தி - தமிழ் மரபு அழிக்கும் செந் தீ
2

தமிழ் மொழி, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே யிருந்து எத்தனையோ பெரிய படையெடுப்புக்களையும், எத்தனையோ பெரிய தாக்குதல்களையும், எத்தனையோ பெரிய தூற்றுதல்களையும் தாங்கிக்கொண்டு, இன்றைய தினமும் தன்னிகரற்ற நிலையிலே இருக்கிறதென்றால், அந்த மொழி நமக்கு உகந்த மொழிதான் - நமக்கு ஏற்றமொழிதான் - தலைசிறந்த மொழிதான். பாரிலே உள்ள பல மொழிகளிலே தமிழ்மொழி தலைசிறந்த மொழி என்று தமிழன் தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டிருப்பது உண்மையிலேயே சில நேரங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். காதல் பேசும் நேரத்திலே, கணவன் தன் மனைவியை அருகிலே வைத்துக்கொண்டு "உன்னை விட அழகியை உலகத்திலே நான் கண்டதே இல்லை' எனக் கொஞ்சுவான். இப்படிக் கொஞ்சத் தேவையில்லையென்றாலும் கொஞ்சுவதாலே இலாபம் கிடைக்கும் என்பதாலே கொஞ்சுகின்றன். அதே முறையிலே தமிழ் மொழியை இன்றையதினம் கொஞ்சுகிறோமேயொழிய, அதற்கு வாதங்கள் தேவையில்லை. "என்னுடைய மொழியைவிடச் சிறந்த மொழி உலகத்திலே வேறொன்றில்லை' என்று எடுத்துச் சொல்லுகின்ற கடமை, எஸ்க்கிமோ நாட்டுக்காரனுக்கு, இருக்கின்றது. பின்லாந்து நாட்டுக்காரனுக்கு இருக்கின்றது. வளமற்ற மொழிபடைத்தவனானாலும் அவனுக்குச் செம்மொழி தாய்மொழிதான்.

"நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய்மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற நேரத்தில், பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம்படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டுக்காலமாகவா இந்த மொழி சிதையாமல் சீர்குலையாமல் இருந்து வருகின்றது? என்று ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும் கேட்கத்தக்க நல்ல நிலையிலேதான் தமிழ்மொழி இருக்கின்றது. ஆகையினாலே, தமிழ் மொழிக்காக - வாதாடுவதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை. ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்தில் பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் - இவைகளைக் கண்டித்து அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றது. தமிழ்மொழியிலே அகத்திலே என்ன இருக்கின்றது? புறத்திலே என்ன இருக்கின்றது? - என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அருமையாக நமக்குச் சொல்லிவிடுவார். தமிழ் மொழியிலே பெயர்கள் எப்படியெல்லாம் மாற்றப்பட்டன? என்பதைக் கூற "ஊரும்பேரும்' எழுதிய பேராசிரியர் சேதுப்பிள்ளை போதும். தமிழ் மொழியிலேயுள்ள இலக்கணச் செறிவுகள் என்னென்ன? - இதற்கு பாரதியார் ஒருவர் போதும்; ஆனால், அவைகளுக்காக மட்டுமல்ல; இங்கே இந்த மாநாட்டிலே நாம் கூடியிருப்பது.

"இந்த மாநாட்டிலே எடுக்கின்ற முடிவினை, இந்த மாநாட்டிலே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று நாம் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்திற்கு உயிரூட்டம் தரவேண்டுமானால், நீங்களெல்லோரும் 1937-க்கு வருவதற்குச் சித்தமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதற்கு மாநாடே தவிர, சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கல்ல; கம்பராமாயணத் தினுடைய சுவைகளை எடுத்துச் சொல்வதற்கல்ல; அகத்திலேயும் புறத்திலேயும் உள்ள அணிகளையும் அழகுகளையும் எடுத்து விளக்குவதற்கு அல்ல; அவைகளுக்குத் தமிழ்ப் பெரும்புலவர்கள் போதும்; வகுப்பறைகள் போதும்.

"வெட்ட வெளியிலே கொட்டகை போட்டு, வீதி தவறாமல் தோரணங்கள் கட்டிச், சிற்றூர்களிலிருந்தெல்லாம் சிங்க நிகர்த்த காளைகள் சாரைசாரையாக வந்து, இந்த மாமன்றத்தில் கூடியிருப்பதற்குக் காரணம், இந்தி மொழியைவிடத் தமிழ் மொழி சிறந்தது என்று வாதாடுவதற்கல்ல. தமிழகத்திலே இந்தி மொழி திணிக்கப்பட்டால், அதை எந்த வழியிலே ஒழித்துக்கட்டுவது? அதற்கு நம்முடைய காணிக்கை என்ன? என்று சிந்தித்து, அவரவர்கள் தங்கள் காணிக்கைகளைச் சேர்ப்பிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறார்களே தவிர, வெறும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல.

தமிழர் வளர்ந்திருப்பது தெரிந்தும், வடநாட்டார் இன்றைய தினம் வம்புக்கு வருகிறார்கள் என்றால், உங்களையும் என்னையும், நம்மைப் படைத்த தமிழ் நாட்டையும், தமிழ் நாட்டுக்கு உயிர் நாடியாக இருக்கின்ற தமிழ் மொழியையும் துச்சமென்று அவர்கள் கருதுகின்றார்கள். நீங்கள் எவ்வளவு வளர்ந்தாலென்ன? கவலையில்லை; 2,000 கிளைக் கழகங்களா? - வைத்துக் கொள்ளுங்கள்; 2 இலட்சம் உறுப்பினர்களா? - இருக்கட்டுமே; நாள் தவறாமல் பொதுக்கூட்டங்களா? - கேள்விப்படுகிறோம்! ஊர் தவறாமல் மாநாடா? - பார்த்துக்கொண்டிருக்கிறோம்; உங்களுடைய இயக்கத்திலே பத்திரிகைகள் பல இருக்கின்றனவா? - இருக்கட்டும் - இருக்கட்டும், உங்கள் இயக்கத்திலே அழகாகப் பலர் பேசுகின்றார்களா? பேசட்டும் - பேசட்டும்; ஆனால் எங்கள் ஆதிக்கம் நிறைவேறும் என்று அங்கே உள்ளவர் சொல்லுகிறார்கள்.

"இங்கே நாம் ஆயிரமாயிரமாகக் கூடியிருக்கிறோம். நாம் வளர்ச்சியடைந்திருக்கிற இந்த நேரத்திலும் நம்மை உண்மையிலேயே அடக்கி ஆளவேண்டுமென்று கருதுகின்றவர் கள், ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் இருக்கின்ற திக்கு நோக்கி நீங்கள் தமிழ்ப் பார்வையைக் காட்டவேண்டும். தமிழ்ப் பார்வையில் குளிர்ச்சியும் உண்டு, கோபக்கனலும் உண்டு. தமிழன் தன்னுடைய நாட்டையே அர்ப்பணிப்பான், தோழன் என்று வருபவனுக்கு; தமிழன், தன்னுடைய தாளை மிதித்தவனை அவனுடைய தலை தாளிலே படுகின்றவரை போரிட ஓயமாட்டான் என்பதை, நம்முடைய இலக்கியங்களெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றன.

இன்றைய தினம் வடக்கேயுள்ளவர்கள் இறுமாந்து இருக்கின்றார்களே, அவர்களெல்லாம் காடுகளிலே சுற்றி கொண்டும், குகைகளிலே வாழ்ந்து கொண்டும் மொழியறியாத காரணத்தாலே வாழ்க்கை வழி தெரியாமல் வழுக்கி வீழ்ந்து கொண்டும் இருந்த நேரத்தில், இங்கே அகத்தையும் புறத்தையும் நம்முடைய பெரும் புலவர்கள் இயற்றினார்கள். முடியுடைமூவேந்தர்கள் இருந்த காலமும், அவர்கள் காலத்திலே இயற்றப்பட்டப் பெரும் இலக்கியங்களும், அந்த நாளிலே வடநாட்டிலே வங்காளமானாலும் சரி, பாஞ்சாலமானாலும் சரி, பண்டித ஜவஹர்லால் நேருவினுடைய தாயகமாகப் போற்றப் படுகின்ற காஷ்மீரம் ஆனாலும் சரி, நான் வடக்கே இருக்கின்ற வரலாற்று ஆசிரியர்களைக் கேட்கின்றேன் - அந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே உங்களுக்கு ஏது மொழி? உங்களுக்கு ஏது இலக்கணம்? உங்களுக்கு ஏது இலக்கியம்? உங்களுடைய மொழி எந்த நாட்டிலே பேசப்பட்டது? ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே - தமிழ் வணிகன் ரோம் நாட்டுக் கடை வீதியிலே பேசினானே! ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே யவனத்திலல்லவா சென்று வியாபாரம் செய்தான்! ஈராயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னாலே உலகத்தோடு தொடர்பு கொள்வதற்கு எங்கள் தமிழ்மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்ததே. "ஈராயிரம் ஆண்டுக் காலத்துக்கு முன்னாலே அறவழி யிலே எங்கள் இனமக்களை அழைத்துச் செல்வதற்கு எங்கள் தமிழ் மொழி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது.

பாடி வீடானாலும் சரி, பள்ளியறையானாலும் சரி, சாலையானாலும் சரி, சோலையானாலும் சரி, களமானாலும் சரி, எங்கேயும் பயன் பட்டுவந்த இந்தத் தமிழ்மொழி பயன்படாது என்று சொல்லுகின்றவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? அவர்கள் தமிழ் மொழியறியாத காரணத்தால் அப்படிப் பேசுகிறார்கள் என்றால், மன்னித்து விடலாம். என்றாலும், அவர்களே சிற்சில வேளைகளிலே நம்முடைய முகவாய்க் கட்டையைத் தடவிச் சொல்லுகின்றார்கள், "தம்பி, தம்பி! தமிழ் மொழியை இகழ்வதாகக் கருதிக்கொள்ளாதே, அது மிக நல்ல மொழி, அழகான மொழி, எனக்குப் பேசத்தெரியாதே தவிர, பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மிக அழகாக இருக்கின்றது'' என்று நம்மிடத்திலே சொல்லிவிட்டு, "எங்களுடைய மொழி சிலாக்கியமானது என்று சொல்லவில்லை. எங்களுடைய மொழி இலக்கிய வளமில்லாத மொழிதான். நீங்கள் விரும்பினால் அதை 6 மாதக் காலத்திலே கற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக் காலத்திலே கற்றுக்கொள்ளலாம். என்றாலும், தமிழ் ஒரு புறத்திலே இருக்கட்டும்; இந்தியையும் ஏற்றுக்கொள்ளுங்கள், இந்திக்கு அதிகம் தாருங்கள்'' - என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

"சிலப்பதிகாரக் காலத்திலாவது, கண்ணகி அளிக்க முடியாத சுகத்தை மாதவி அளித்தாள் என்பதற்காக, வழிதவறிய ஒரு வணிகன் மாதவி இல்லத்துக்குச் சென்றான். இங்கு வழிதவறிய கோவலர்கள் இல்லை; வழிதவற வேண்டுமென்று நினைக்கின்றவர்களும், நீ கட்டிய மனைவி அழகாகத்தானிருக் கின்றாள்; நான் கொண்டு வருபவள் குணத்திலேயும் குடிகேடி; பார்ப்பதற்கு அருவருப்பாகத் தானிருப்பாள், இருந்தாலும் எத்தனை நாளைக்குத்தான் அந்தக் கட்டழகியோடு நீ இருப்பது, அவளைப் பின் அறையிலே தள்ளிவிடு, இவளை நீ முன்கட்டிலே வைத்துக்கொள் என்று கேட்கிறார்கள் என்றால், நாம்கூடச் சும்மாயிருக்கலாம், இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தாய்மார்கள் ஆர்த்தெழ வேண்டும்.

தமிழை, தம்பி! தாய்மொழி என்றுதானே அழைக்கிறோம்.

மொழி காத்திடத் தாய்மார்களை, நான் அழைப்பது முறைதானே!

களத்துக்கு வாருங்கள்! என்று கனிவுடன் அழைத்து வா, தம்பி! சீறிவரும் புலியதனை முறத்தினாலே அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! என்றன்றோ பாடினார், உடுமலை நாராயணக்கவி. தாய்மார்கள் ஆர்த்தெழுந்தால், தரணியே விழித்தெழுந்து நிற்கும். காணட்டும், அந்தக் காணற்கரிய காட்சிதனை!

தம்பி! மகனைப் பறிகொடுத்தாலும், மனங்கலங்காத மாதாக்கள் இருந்ததால்தான், தமிழகத்தின் மாண்பு தழைத்தது.

அத்தகைய, மாதர்குல மாணிக்கங்கள், எந்தெந்த நாட்டிலே இருந்தனரோ - இருக்கின்றனரோ - அந்த இடம் யாவும், புனிதம் பெறுகின்றன.

அத்தகைய வீரம், ஏதோ, பழங்கதை, பாடல் சுவடியில் உள்ளவை என்று ஏமாளிகளும், எதேச்சாதிகாரிகளும் எண்ணிக்கொள்ளட்டும். நீ அறிவாய், உலகிலே பல்வேறு இடங்களிலே கொதித்தெழுந்தபடி உள்ள உரிமைக் கிளர்ச்சிகளை அறிந்தவர் அறிவர், அத்தகைய வீரம் பட்டுப் போய்விடவில்லை; தேவைப்படும்போது, கொழுந்துவிட்டு எரியத்தான் செய்கிறது என்பதை.

"தாயே! தங்களை - அழைத்துப்போகத்தான் வந்திருக் கிறோம்.''

"என்னையா? எங்கு அப்பா, அழைக்கிறீர்கள்?''

"சுதந்திர விழாவிலே கலந்துகொள்ள, அம்மையே! அந்த விழா மாண்புபெற, மாதரசி! தாங்கள் வந்து அதிலே கலந்து கொள்ளவேண்டும்.''

"விழாவா! விழாக் காணவா அழைக்கிறீர்கள்? என்னையா, அழைக்கிறீர்கள்? அழுதழுது விழிகள் வீங்கிக்கிடக்கும், எனக்கு அழைப்பா! விம்மி விம்மிச் சாகும் எனக்கு, விழாவிலே பங்கா...?''

"தாயே! தாங்களன்றி வேறு எவர், தகுதி பெற்றவர், சுதந்திர விழாவிலே பங்குபெற. பதவிக்கும், பட்ட கடனைத் தீர்த்துக்கொள்ளவும், பல்லிளித்துக் கிடப்போரும், கொள்ளை இலாபமடித்தோரும், கள்ளச்சந்தைக் கழுகுகளும், சமூகச் சனியன்களும், சுதந்திர விழாவிலே கலந்துகொண்டு, அதன் மாண்பினையே மாய்த்துவிடுகின்றனர். மகனை நாட்டுக்காக அர்ப்பணித்து, ஒப்பிலாத் தியாகம் புரிந்த மாதர்குல திலகமே! உன் கால்பட்டு, விழா நடக்கும் இடத்தின் மண் மணம் பெறட்டும்! விழா, வீரர்க்கு ஏற்ற திருநாள் ஆகட்டும்! மகனைக் கொன்றனர், மாபாவிகள்! மனமுடைந்து அணு அணுவாக வேதனை பிய்த்துத் தின்னும் நிலைபெற்று, அந்த மாது கிடக்கிறாள். உரிமை என்றும் விடுதலை என்றும் பேசித்திரிவோர், அவளைக் கண்டால், "ஐயய்யோ! இவளுக்கு வந்துற்ற கதியன்றோ, நமக்கும்' என்று எண்ணிக் கலங்குவர், கதறுவர், விடுதலைப்படையில் சேராதீர் என்று பெற்றெடுத்த மகனுக்கும் உற்றார்கட்கும் கூறுவர்; உடைபட்டுப் போய்விடும் அணிவகுப்பு; சிதைந்துபோகும் கிளர்ச்சி; - என்றன்றோ, பேசுவர். அம்மா! உன் மகன் ஆவியைக் குடித்தது அடக்கு முறை! ஆயினும் அந்த அடக்குமுறை சாகவில்லை. அது செத்தொழியவேண்டுமானால், தாயே! "மகனை இழந்தேன். மனம் கலங்கினேனில்லை. அவன், எதன்பொருட்டுத் தன் இன்னுயிர் ஈந்தானோ, அந்த நோக்கம் ஈடேற, இதோ நானும் புறப்பட்டுவிட்டேன், பாடுபட, போரிட, தேவையானால் மடிந்துபட! வீரனைப்பெற்றவள் நான். கோழையாகமாட்டேன். தியாகியை ஈன்றவள் நான், தியாகம் செய்யத் தயங்கமாட்டேன்!' - என்று கூறிடின், தாயே! கொடுமைக்காரர், குலை நடுக்கம் கொள்வர், கொட்டம் அடக்கப்படும், வெற்றி நமக்குக் கிட்டும். வேதனையாகத்தான் இருக்கும், மகனைப் பறிகொடுத்ததால். ஆனால், அவன் இறந்தது, நாட்டுக்காக! அதை மீட்டுத்தரவழிகாட்டுங்கள்! சுதந்திர விழாவிலே கொடி ஏற்றுங்கள்! தங்கள் திருக்கரம் பட்டாகிலும், தீயோர் தொட்டுத் தொட்டுக் கரைபடிந்துகிடக்கும் அந்தத் துணித் துண்டு, மணிக்கொடி யாகட்டும். மாண்பு மீண்டும் கிடைக்கட்டும். வருக! அம்மையே வருக!''

சென்றாள், மாது! கொடி ஏற்றி நின்றாள். கூடி இருந் தோரைக் கண்டாள் - உரையாற்றிய பழக்கமில்லை. அதற்காகப் படித்ததில்லை. உணர்ச்சி மேலிட்டது. ஓரிரு கருத்தே உரைத்தாள் - ஓராயிரம் அறிவாளர் தீட்டிய நூற்களும், அந்தக் கருத்துக்கு மேற்பட்டதைத் தாரா!

என் மகன், எந்த நோக்கத்துக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி பெறப் பாடுபடுங்கள். அவன் செய்த தியாகம் வீணாகிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

தம்பி! குஜராத் தனி மாநிலமாக இருக்க வேண்டும்; அதனை மராட்டியத்துடன் பிணைத்து, ஒரு அவியல் அரசு ஆக்கிவிடக் கூடாது என்பதற்காக, டில்லி எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெருங் கிளர்ச்சியிலே ஈடுபட்டு, அடக்குமுறைக்கு ஆளாகித், துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி இறந்து பட்டான், 18 வயது இளைஞன், கல்லூரி மாணவன். இறவாப் புகழ்பெற்ற அந்த இளைஞனை ஈன்றெடுத்த தாயை, குஜராத் அரசு வேண்டி, கிளர்ச்சி நடாத்தியோர், சுதந்திர விழாவில் கொடி ஏற்ற அழைத்துச் சென்ற சம்பவம், மேலே குறிப்பிடப்பட்டிருப்பது.

அந்த வீரமாதேவி, வரலாற்றுச் சுவடிக்குள் புகுந்து கிடப்பவரல்ல! இப்போது, குஜராத்தில் வாழ்கிறார்கள் - வரலாற்றிலே இடம் பெற்றுக்கொண்டார்கள்.

மகன் கொல்லப்பட்டான் - குஜராத் கிடைத்து விட்டது.

என் மகன் செய்த தியாகம் வீண்போகக்கூடாது என்றாள் மாதரசி. வீண்போகவில்லை! அவள் கண்ணெதிரே, குஜராத் பூத்துக் குலுங்குகிறது!

என் மகன் இன்னுயிர் ஈந்தான் - குஜராத் கிடைத்தது - என்று எண்ணும்போதெல்லாம் அந்தத் தாயின் கண்களிலே நீர் துளிர்த்திடும் - ஆனால், அவர்கள் தாளிலே குஜராத் கிடைத்திட உழைத்த உத்தமர்களின், கண்ணீர் படும்!!

தம்பி! இத்தனைக்கும், தனி அரசு அல்ல - இந்தியப் பேரரசிலே ஒரு அங்கமாக இருக்கத்தான் - ஆனால் மராட்டியத்துடன் பிணைக்கப்படாமல் இருப்பதற்காக மட்டுமே, நடத்தப்பட்ட கிளர்ச்சி அது. அதிலே மகனைப் பறிகொடுத்தாள் மாதா!!

நாம் கேட்பது? தனி நாடு என்று மார்தட்டிக் கூறுகிறோம் - மமதையால் அல்ல - மரபு தெரிவதால்! அந்த மரபு அழிக்க வருகிறது, இந்தி எனும் செந்தீ.

அண்ணன்,

3-7-1960