அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


எங்கள் பெரியார்
1

அரசனும் அமைச்சரும் -
கதை -
இராதாவின் நாடகம் -
திராவிடக் கழகக் கிளர்ச்சியும் தி. மு. க. வும்.

தம்பி,

ஆற்றலரசர்கள் காலம் முடிவுற்று, "அரசன் மகன் அரசன்' என்ற நிலை பிறந்த பிறகு இருந்த ஒரு முடிதாங்கிக் காலத்துக் கதை கூறுகிறேன் - குடி அரசுக் காலத்து நிகழ்ச்சிக்கு விளக்கம் காணப் பயன்படுகிறது.

காலையில் கண் விழித்த காவலன், அரண்மனை "மாடி'யில் வந்து நின்றான், "அரச பாட்டையில்' ஒருவன் அரண்மனையை அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்; அரசன் கண்களுக்கு வேறு விருந்து ஒன்றும் கிடைக்கவில்லை; சரி, என்று சலித்தபடி பார்த்துவிட்டு உள்ளே சென்றான்; செல்லும் போது, "வாசற்படித் தூலத்தில்' தலை மோதிக் கொண்டது, இரத்தம் கசிந்தது.

அப்பப்பா! என்று அரசன் அலறினான்; களம் கண்ட காவலனல்லவே, வளை ஓடிந்ததாலும், பல் படிந்ததாலும் மட்டுமே ஏற்படும் வடுக்களைக் கண்டவன். எனவே, தலையில் அடிபட்டதும், துடியாய்த் துடித்தான். அரசனல்லவா? எனவே, "அப்பப்பா'வைக் கேட்டதும், ஆட்கள் ஓடோடி வந்தார்கள். மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள், அமைச்சருக்கு ஆள் அனுப்பப்பட்டது. அவனுடைய வேட்டைக்குச் சிக்கி, சேட்டைக்குப் பலியான மாதரசிகள்கூட, என்னவோ ஏதோ என்று பதைத்தனர்; கசிந்த குருதியைத் துடைத்தபடி காவலன்,

"சனியன்! அவன் முகத்தில் விழித்தேன், உடனே இந்தப் பலன் ஏற்பட்டது!'' என்று முணுமுணுத்தான். அமைச்சர் கேட்டார், "அரசே! எந்தச் சனியன்? யார் முகத்தில் விழித்தீர்கள்? என்ன கூறுகிறீர்கள்?'' என்று. அமைச்சர் அறிவார், அப்படி ஒன்றும் அவலட்சணங்கள் அரண்மனையில் கிடையாது என்பதை - அவலட்சணத்தை அணிபணி, பூச்சு ஆகியவற்றால் மறைத்திடும் திறமையுள்ளோரே மன்னனுக்கு மனோகரிகளாக இருந்தனர்.

"காலையில் எழுந்ததும், அமைச்சரே! மாடியில் நின்றேன், வீதியில் ஒரு சனியன் சென்று கொண்டிருந்தான். அவன் முகத்தில்தான் விழிக்க நேரிட்டது. கண நேரத்தில் இந்தக் கதி நேரிட்டது'' என்றான் மன்னன்.

"அப்படியா! அப்படிப்பட்ட "சகுனத் தடை' ஏன் இராஜபாட்டையில், அதிகாலையில் நடமாட அனுமதித்தார்கள், மடையர்கள்! இனி மன்னா! காலையில், மங்கள ஆரத்தியுடன் மாதர்கள், மலர்க்கூடைகள், பசு, இப்படிப்பட்ட "தரிசனம்' தான் இருக்க வேண்டும், விடிந்ததும் - அதை இனிக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு'' என்று ஆறுதலளித்தான் அமைச்சன்.

"எவ்வளவு மோசமான ஜென்மமாக இருக்க வேண்டும், அந்த மனிதன்; அவன் முகத்தில் விழித்ததும், இரத்தக் காயம் ஏற்பட்டதே, யார் அவன்?'' என்று கேட்டான் மன்னன்.

"யாரடா அவன்? என்று முழக்கமிட்டார் அமைச்சர். மெய்ப் பாதுகாப்பாளனை நோக்கி.

"ஏ! யார் அந்தச் சனியன்?'' என்று போர் வீரனை நோக்கிக் கர்ஜித்தான் மெய்ப் பாதுகாப்பாளன்.

ஓடோடிச் சென்று "இராஜபாட்டை'யின் கோடியில் அசைந்து சென்று கொண்டிருந்தவனைப் பிடித்திழுத்து வந்தான் போர் வீரன். விசாரணை நடைபெற்றது - மன்னன் முன் அல்ல. தீர்ப்பு அளிக்கப்பட்டது அமைச்சரால்.

"மன்னர்பிரானுக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த மாபாவி முகத்தில் மன்னர் அதிகாலையில் விழிக்க நேரிட்டது என்பது நிரூபிக்கப் பட்டிருப்பதால், இவன் ஓர் சகுனத் தடை என்பது தெளிவாகி விட்டது. இத்தகையவன், அதிகாலையில் இராஜபாட்டையில் நடந்து சென்று, அதன் பலனாக மன்னருக்கு இரத்தக் காயம் ஏற்படக் காரணமாக இருந்ததால், இந்த மாபாவிக்கு மரண தண்டனை விதிக்கிறேன்.''

மரண தண்டனை! என்று தீர்ப்புக் கூறப்பட்டதும், அவன் மருண்டு, காலில் விழுந்து உயிருக்கு மன்றாடவில்லை, மயக்க முற்றுக் கீழே விழவில்லை, 'இடி இடி' யெனச் சிரித்தான். அமைச்சர் குழுவுக்கு ஒரே ஆச்சரியம். இப்படியும் ஒரு பைத்யக்காரன் இருப்பானா? மரண தண்டனை விதிக்கிறோம். பயல் சிரிக்கிறானே அதைக் கேட்டு, பித்தனோ! சித்துகள் தெரிந்தவனோ! என்று பலப்பல எண்ணினர்.

"ஏ, ஏமாளி! என்னடா சிரிக்கிறாய்? உனக்குத் தண்டனை விதித்திருக்கிறேன் - தெரிகிறதா! வேட்டுப்பாறையில் உன் தலை துண்டிக்கப்படும், இன்று மாலை - புரிகிறதா?'' என்று விளக்கமளிக்கும் விதத்தில் பேசினார் அமைச்சர்.

"புரிகிறது அமைச்சரே, நன்றாகப் புரிகிறது'' என்று கூறிவிட்டு. அவன் மீண்டும் சிரித்தான்; சிரித்துவிட்டு, "மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது, என் முகத்தில் விழித்த காரணத்தால். அப்படிப்பட்ட பொல்லாத முகம் எனக்கு, அமைச்சரே! அதுதானே எனக்கு மரண தண்டனை அளித்திடக் காரணம்?'' என்று கேட்டான்.

"ஆமாம், அற்பனே! அரசனுக்குப் படுகாயமல்லவா ஏற்பட்டு விட்டது, உன்னுடைய பாழான முகத்தை அவர் பார்க்க நேரிட்டதால்'' என்று அமைச்சர் "விவேகம்' பேசினார்.

"விளங்குகிறது, அமைச்சரே! என் முகத்தின் இலட்சணம் இன்னது என்று விளங்குகிறது. என் முகத்தில் அதிகாலையில் மன்னன் விழித்ததால், அவருக்கு மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டது அப்படிப்பட்ட "சனியன் பிடித்த முகம்' எனக்கு. போகட்டும் என் முகமாவது இந்த மட்டோடு கெடுதல் விளைவித்தது - அந்த மன்னன் முகத்திலே நான் அதிகாலையில் விழித்தேன் - பலன் என்ன ? உயிர் போகப் போகிறது. மரண தண்டனை கிடைக்கிறது. எவ்வளவு புண்யவானய்யா நமது பூபதி. எத்தகைய "பாக்யம் அருளும்' முகமய்யா அவருக்கு. அதி காலையில் "இராஜ தரிசனம் கிடைத்தால் உனக்கு நல்ல "யோகம்' கிடைக்குமென்று ஒரு "ஞானி' சொன்னார். அதனால்தான் அமைச்சரே, நான் அதிகாலையில் ஒருவர் முகத்திலும் விழிக்காமல், அரண்மனை எதிரே காத்துக் கொண்டிருந்தேன். இராஜ தரிசனத்துக்காக; இராஜ தரிசனம் கிடைத்தது, மரண தண்டனையும் கிடைக்கிறது. மகா பாக்யவான், புண்யவான் நமது பூபதி. பார்த்தால் போதும், பிராணண் போகிறது. நான் சனியன் பீடை தன்னைப் பார்த்ததால் மன்னனுக்கு மண்டையில் அடிபட்டது - இரத்தம் கசிந்தது, அவருடைய முக தரிசனம் கண்ட எனக்கோ, மரண தண்டனை கிடைக்கிறது'' என்று கூறிச் சிரித்தானாம்.

தம்பி, நாம் கூட இருப்பதால் மாற்றுக் குறைகிறது, ஆற்றல் குன்றுகிறது, தூய்மை கெடுகிறது, ஏனெனில், நாம் சுயநலவாதிகள், வயிற்றுப் பிழைப்புக்காகவே பொது வாழ்வில் இருப்பவர்கள், சூதர்கள், சூழ்ச்சிக்காரர்கள், நாம் ஒழிந்தால் மட்டுமே உண்மைக்கும் உயர்வுக்கும், தீரத்துக்கும் தியாகத்துக்கும், அதிதீவிர திட்டத்துக்கும் அபார வெற்றிகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். வயலில் களை போல் இருக்கிறோம், எனவே நாம் ஒழிந்தது மிக மிக நல்லதாகப் போய் விட்டது. இனி, தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும், எவரும் கண்டிராத, கேட்டிராத, மகத்தான பலன்கள் கிடைக்கத்தக்க, மயிர்க் கூச்செறியும் போராட்டங்களும், மாபெரும் வெற்றிகளும் கிடைத்து விடும். பொறுக்கி எடுக்கப்பட்ட மணிகள், புடம் போட்ட தங்கக் கட்டிகள், கொள்கை தவிர வேறேதும் அறியாத கோமான்கள், கீறிய கோட்டினைத் தாண்டாத கடமை வீரர்கள் ஏன் என்று கேட்காத ஏந்தல்கள், எப்படி என்றுகூட எண்ணிடாத சுத்த வீரர்கள், இவர்கள் மட்டுமே இப்போது பாசறையில் இருக்கிறார்கள் என்றனர் பூரிப்புடன்.

நமது கூட்டுறவு கேடு பயப்பது, காட்டு வெள்ளத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கும் வீரர்கட்கு நாம் வேண்டாத சுமையாக, கால் கட்டாக இருந்து வந்தோம், வெளியே ஓடி விடுகிறோம், அதனால் இனி "சொரி சிறங்கு! நீங்கிய உடலோன் போல தி. க. "தேஜோன்மயமாக' விளங்கப் போகிறது. தொட்டால் போதும், பட்டமரம் துளிர்க்கும், பார்வை பட்டால் போதும், பனையில் பலாச்சுளை தொங்கும்' என்றெல்லாம் "ஆரூடம்' பேசினர்.

தம்பி, இப்போது தி. க. "பத்துப் பாட்டு பாடுகிறது - அவர்கள் பத்து மாபெரும் காரியங்களில் ஈடுபட்டார்களாம், நாம் அவர்களுடன் சேரவில்லையாம் - பாவிகாள், இப்படி எங்களைக் கைவிட்டது நியாயமா? களத்திலே நாங்கள் இறங்கிக் கடும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, நீங்கள் கைகொடுத் தீர்களா? கன்நெஞ்ச மென்பதா, கபடமென்பதா - என்னென்று புகல்வது உமது செய்கையை, அவனியோரே, அவனியோரே! இதோ பாரீர், பத்துக் குற்றச்சாட்டுகள், இந்தப் பாவிகள் செய்த பாதகச் செயல்கள் - என்று பட்டியல் கொடுக்கிறது தி. க. ஏன்? பத்துக் காரியங்களையும் துவக்கிய போது, தமது பாசறையில் போதுமான "சரக்கு' இல்லை என்பதும், துவக்கிவிட்டு, ஒவ்வொன்றும் துவண்டு போகக் கண்டு துடியாய்த் துடித்ததும், இப்போது மெள்ள மெள்ளத் தெரிகிறது என்றுதானே பொருள்.

நடிகவேள் இராதாவின் "இழந்த காதல்' பார்த்திருக்கிறாயா தம்பி! நாம்தான் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றபடி, நம்மை நையாண்டி செய்தாலும், "நம்ம இராதா' என்ற பாசத்தை விடாப்பிடியாகக் கொண்டவர்களாயிற்றே.

ஆகவே, இராதாவின் நாடகத்தைக் காண்கிறோம், அடிக்கடி, "இழந்த காதல்! நாடகத்திலே ஒரு கட்டம்!

வெறிக்கக் குடித்துவிட்டு, தலை கால் தெரியாமல் ஆடிக் கொண்டு வீட்டிக்குள் நுழைவார் ஜெகதீஸ். பத்மா, "கணவனே கண்கண்ட தெய்வம்' என்று எண்ணும் பத்தினிப் பெண்! பயந்தபடி கணவனுக்குப் பணிவிடை புரிவாள். அந்தப் பணி விடைகளிலே ஒன்று, ஜெகதீசுக்குச் சிகரெட் கொடுத்து, அதைப் பற்றவைப்பது. இராதாவின் நடிப்பு அபாரமாக இருக்கும் இந்தக் கட்டத்தில். ஆனால் தம்பி, அது ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு விளக்கம் அளிக்க உதவும் என்று நான் அப்போது எண்ணியதே இல்லை!

"சிகரெட்' எடுத்துப் பத்மா, ஜெகதீசன் கரத்திலே கொடுப்பாள் - அவனுக்குக் கால் பூமியில் பாவாது, கரம் ஒரு நிலையில் நிற்காது, கண்களோ "துறைமுகத்து' விளக்குப் போலச் சுற்றும், சுழலும், ஒளிவிடும், குறையும். வாய் திறப்பான் கண்ணை மூடிக்கொண்டு - சிகரெட்டை வாயில் திணிப்பாள் - உதட்டுக்கும் சிகரெட்டுக்கும் சண்டை நடக்கும் - சிகரெட் ஒருவாறு வெற்றி பெறும் - தீக்குச்சி எடுத்துச் சிகரெட் பற்ற வைக்க பத்மா முயற்சிக்க வேண்டும் - ஒவ்வொரு தீக்குச்சியும் சிகரெட் அருகே செல்லும்போது அணைந்து போகும். குடிபோதை மிகுதியால் அவன் ஆடிக் கொண்டே இருப்பதும், மேஜைமீது இருக்கும் மின்சார விசிறிக் காற்று பலமாக இருப்பதும்தான் காரணம். அதைச் சொல்லக்கூடப் பயம் பத்மாவுக்கு, பத்துத் தீக்குச்சிகள் அணைந்து போகும், ஜெகதீசனுக்குக் கோபம் வரும்.

"ஏ, பத்மா! சிகரெட் பற்றவைக்கக் கூடத் தெரிய வில்லையா. . . . கழுதே'' என்று கூவுவான் - கண்ணீர் சிந்துவதைத் தடுக்க முயன்றபடி பத்மா, "தீக்குச்சி அணைந்து அணைந்து போகிறது'' என்று கூறுவாள்.

"ஏனடி அணைகிறது?'' என்று கேட்பான் ஜெகதீஸ்.

"விசிறி . . . . காற்று. . . . அதனால்'' என்பாள், பத்மா.

ஒரு கேலிச் சிரிப்புடன், ஜெகதீஸ், அவள் கரத்திலிருந்து தீப்பெட்டியைப் பறித்துக் கொண்டு, "விசிறினால் என்னடி, விசிறினால் என்ன? விசிறி இருக்கும்போது சிகரெட் பற்ற வைக்க முடியாதா? எவண்டி சொன்னது? இதோ பாரடி நான் கொளுத்துகிறேன் - பாரடி இப்போ, விசிறி இருந்தால் தீக்குச்சி அணைந்து விடுமாம் - எந்த "இடியட்' சொன்னாண்டி அப்படி? நான் பற்றவைக்கிறேன் பாரடி. . . . இதோ பார் - நன்றாகக் காற்றடிக்கட்டும் - பலமாக அடிக்கட்டும் - இதோ பார் . . . '' என்று கூறுவான். தீக்குச்சி ஒவ்வொன்றும் அணைந்து கொண்டிருக்கும் - கொட்டகையில் சிரிப்பொலி கிளம்பும் - "இதோ பார், கொளுத்திக் காட்டுகிறேன்'' - என்று மீண்டும் கூறியபடி, தீக்குச்சியைப் பாழாக்குவான், திடீரென்று, "சீ! சனியனே! விசிறியை நிறுத்தேண்டி, அதுதான் விசிறிக் காத்தாலே தீக்குச்சி அணையுதே - பார்த்துக் கொண்டே சும்மா நிற்கிறியே, சனியனே!'' என்று கூறிக் கூச்சலிடுவான். கொட்டகையில் கையொலி இடி முழக்கம் போலாகும்.

தம்பி! விசிறிக் காற்று இருக்கும் போது, தீக்குச்சி கொண்டு சிகரட் பற்றவைக்க முடியவில்லை என்று பத்மா சொன்ன போதும் கோபிக்கிறான்; காற்று இருந்தால் என்ன, நான் பற்ற வைத்துக் காட்டுகிறேன் பார் என்று "சவால்' விடுகிறான்; செய்ய முடியாமல் போனதும், கோபம் கொப்பளித்துக்கொண்டு வருகிறது, விசிறியை ஏன் நிறுத்தக் கூடாது என்று கேட்டுப் பத்மாவை ஏசுகிறான். பரிதாபத்துக்குரிய பத்மாவுக்கு எதைச் செய்யும் போதும், எதைச் செய்யாமலிருக்கும் போதும் திட்டு, திட்டுதான் - "இழந்த காதல்' நாடகத்தில்.

நாம் "பத்மா'வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறது தி. க. தம்பி. தம்பி, அந்தமட்டும்தான் உவமை - அதை முழு அளவுக்கு நீட்டிச் சென்று, - "ஓஹோ! எங்களைக் குடிகாரன் என்றா கண்டிக்கிறாய், உன் தலையில் இடி விழ, இல்லையானால் சாப்பாட்டு இலையில் ஈயாவது விழ,'' என்று "சாபம்' கொடுத்துவிடப் போகிறார்கள் - என் நோக்கம், "பத்மா' போல பரிதாபத்துக்குரிய நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டுவதுதான்.

பத்துப் போர்களில் நாம் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே, இன்று, அன்று நாம், யோசனை கூற அனுமதிக்கப்பட்டோமா, கலந்து பேசி, ஏதாவது ஒரு திட்டம் தீட்டப்பட்டதா? அவர்கள் அழைத்து, நாம் நிராகரித்தோமா?

ஏ! அப்பா! இவ்வளவு பயங்கரமான போரில் ஈடுபட எம்மால் முடியுமா? இதற்குத் தேவைப்படும் வீரம், தீரம், தியாகம், எம்மிடம் ஏது என்று கூறிவிட்டா, கைகட்டி வாய்ப்பொத்தி நின்றோம். இல்லை. ஒவ்வொரு "போர்'ப் பிரகடனம் வெளிப்பட்ட நேரத்திலும், நோக்கம், முறை, அமைப்பு எனும் மூன்று விஷயங்கள் குறித்த விளக்கமும், கலந்து பணியாற்றும் அழைப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவண்ணம் இருந்து வந்தோம் - நம்மில் சிலர் ஏங்கிக் கிடந்ததுமுண்டு. "போர்' அறிவிக்கப்பட்ட போது, "இதுகளை' ஒரு கட்சி என்று மதித்து, அழைப்பு வேறு அனுப்ப வேண்டுமா! கால்தூசு! அறுந்து போன செருப்புகள்! ப்யூஸ் போன பல்புகள்! போக்கிடமத்ததுகள்! என்றெல்லாம் சாக்கடை மொழியில் ஏசிவிட்டு, பத்தும் விதவைக்கரு வேஓரத் தில் அழுகிக் கிடப்பது போலான பிறகு, பத்துப் போரிலும் ஈடுபடாத பாவிகள், பழிகாரர்கள் என்று தூற்றுவதா! இதென்ன நியாயம்? எவர் ஏற்பர் இதனை?

தி. க. வின் போர்த் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரும் வேலையை, நாமாக, வலிய வலியச் சென்று, வசையையே விருந்தாகக் கருதி மேற்கொள்ள வேண்டுமாம். தம்பி மன்னன் ஆயிரம் மடங்கு மேல் என்பேன் அவனுக்காவது, மண்டையில் அடிபட்டது, நாமோ, நம்மால் இவர்களுக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் வெற்றி கெடலாமா, நாம் ஒதுங்கிக் கொள்வோம், நம் கூட்டுறவு இல்லாவிட்டால்தான், இவர்கள் எதிரிகளின் கோட்டைகளைத் தூளாக்குவர், கொடி மரத்தை வெட்டி வீழ்த்துவர் என்று கருதினோம் - பாதை திறந்து இருந்தது, எனினும், இப்போது, வெற்றி கிட்டாததால் ஏற்பட்ட வேதனை கோபத்தைக் கிளப்பிவிட, நாங்கள் துவக்கிய "பத்துக்' கிளர்ச்சிகளிலே இவர்கள் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டுகிறோம் என்று பட்டியல் வெளியிடுகிறார்கள். இதைப் போன்ற வேடிக்கை - நான் துவக்கத்தில் சொன்ன கதை, 'இழந்த காதல்' நாடகம் இரண்டிலுமே கூடக் கிடைக்காது.

தி.க.-வின் "பத்து' அவர்களாகத் தேடிக்கொண்ட சொத்து. நமக்கு அதிலே பங்கு கிடையாது - கேட்க நமக்கு உரிமையும் கிடையாது - வெற்றி தோல்விக்கு தி. க. தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் - பிறர்மீது, உதவி செய்யவில்லை என்று பழி சுமத்துவது, தோல்வியை மூடி மறைக்கக்கூட உதவாது.

எந்த முற்போக்கான கட்சியும், நாம் மேற் கொண்டுள்ள மூலாதாரக் கொள்கைக்கு ஊறு நேரிடாத வகையிலும், நமது கழகத் தன்மானத்துக்குக் கேடு சூழாத வகையிலும், எந்தப் போராட்டம் துவக்கி, அதிலே கலந்து பேசிக் காரியமாற்ற அழைத்தாலும், நாம் தயாராக இருக்கிறோம் என்பதை அடிக்கடி அறிவித்திருக்கிறோம் - இப்போதும் அறிவிக்கிறோம்.

எங்களால் முடியாவிட்டால்தானே, பிறரை - அழைக்க என்று வாதாடுவோருக்கு, நாம் மதிப்பளிக்கிறோம் - அவர்கள் பேச்சுக்கேற்ப வெற்றியும் பெற்றால், அவர்கட்கு வாழ்த்தும் வணக்கமும் கூறுகிறோம்.

இவர்களை மதித்து நாங்கள் அழைக்க வேண்டுமா? என்று கேட்பரேல், அரசியல் நாகரிகம் அல்ல அது என்று பணிவுடன் எடுத்துக் கூறுவோம்.

அழைப்பானேன், தாமாக வந்து கலந்து கொள்வதுதானே! என்று வாதாடுவரேல், தன்மானத்துக்கு அது அழகுமல்ல, தானாகத் தாவிக் குதித்து நாங்கள் போட்டிருந்த திட்டத்தை நாசமாக்கி விட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஒரு சமயம் ஆளாக வேண்டிவரும் என்பதை எடுத்துக் கூறுகிறோம்.

ஒருவர் தயவை, கூட்டுறவை, ஒத்துழைப்பை, எதிர்பாராமலேயே நாங்களே நடத்தி நாங்களே பெற்ற வெற்றி காணீர், இதிலே எவனும் பங்கு கேட்கக் கூடாது என்று கூறுவரேல், வேண்டாம் ஐயனே! முழுக் கீர்த்தியும் உமக்கே இருக்கட்டும், எமக்குப் பங்கு ஒரு துளியும் தரவேண்டாம் என்று கூறுகிறோம்.

ஆனால்,

போர் நோக்கம், முறை, அதற்கான அமைப்பு யாவும் எங்கள் இஷ்டம் போல்தான் இருக்கும்.

யாரையும் கலந்து பேசமாட்டோம்,
எவரையும் அழைக்க மாட்டோம்,
நாங்களே நடத்துவோம்
மற்றவர்கள் தாமாக வராவிட்டால், பிறகு அவர்களைப் பலமாகக் கண்டிப்போம்,
சாபம் கொடுப்போம்,

என்று ஒரு அரசியல் கட்சி கூறுகிறது என்றால், நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள், நமக்கென்ன என்று இருந்து விடுவதன் விளைவு இந்த விபரீதப் போக்கு என்று கூறுவதன்றி, வேறென்ன தம்பி கூறமுடியும்?

எனினும், ஒரு விதத்திலே எனக்கு அந்தப் "பத்து' பார்க்கும் போது அலாதியான மகிழ்ச்சி. பத்து வெற்றிகளைக் காட்டி, வீணர்காள்! நீங்களெல்லாம் பந்தாடிக் கொண்டும், பந்தியில் சுவைத்துக்கொண்டும் இருந்தீர்கள், நாங்கள் பள்ளமென்றும் மேடென்றும் பாராமல், பகலென்றும் இரவென்றும் கவனியாமல், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற எழுச்சியுடன், களத்திலே காற்றெனச் சுற்றிக் கடும் போரிட்டுப் பெற்றோம் பத்து வெற்றிகள், காணீர்! காணீர்! என்று கூறவில்லை. நாங்கள் பத்து விதமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டோம், அவைகளில் இவர்கள் சேரவில்லை என்று கூறுகிறார்கள்; கூறுவதன் மூலம் இவர்கள் சேராததால் நாங்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தோம், வெற்றி கிட்டவில்லை என்று ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்! வேறென்ன?

வஞ்சகி! கன்நெஞ்சக்காரி! ஏறெடுத்தும் பார்க்க மறுத்து விட்டாள் - என்றான் ஏமாந்த காதலன். நண்பன் கேட்டான், அவர்களுடைய காதலைப் பெற நீ எடுத்துக் கொண்ட முயற்சி என்ன என்று. நானா?

கல் வீசினேன்.
காட்டேரி! மூளி! என்று ஏசினேன்.
அவள் பாதையில் படுகுழி வெட்டினேன்.
அவள் தோட்டத்து மலரை அழித்திட மந்தியை ஏவினேன்.

இவ்வளவு செய்தும் அவள் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். என்னென்பது அவளுடைய கன்நெஞ்சத்தை. காதகி! பாதகி! அவளைக் கண்டிக்க, ஊராரே! உலகோரே! ஒன்றுகூடுமின், உடனே எழுமின்! என்று கூறினால் எப்படி இருக்கும்!