அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


ஏழை சொல் அம்பலம் ஏறிவிட்டது!
1

மின்சார இரயில் செங்கற்பட்டு வரை -
சர். சண்முகனார் வழி -
தமிழ்நாட்டின் பின் தங்கிய நிலை

தம்பி!

ஒரு உறுப்பினர்: தென்னிந்திய ரயில்வே பாதையில், தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுக்கும், அதற்கு அடுத்தபடி விழுப்புரம் வரையிலும், மின்சார ரயில் எப்போது அமைக்கப்படும் என்பதுபற்றித் தயவுசெய்து இரயில்வே அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா?

இரயில்வே அமைச்சர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், எப்போது நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும் நிலையில் இப்போது சர்க்கார் இல்லை.

மற்றோர் உறுப்பினர்: தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் அமைக்க, சர்க்கார் திட்டமிடுவதில் என்ன தடையாக இருக்கிறது என்று கேட்கலாமா?

அமைச்சர்: ஒன்றுமில்லை, திட்டத்தை ஏறத்தாழ உருவாக்கி விட்டிருக் கிறோம். இரயில்வே பொது நிர்வாகி, நமது என்ஜினியர்களுடன் விவரங்கள் குறித்துக் கலந்து பேசும்படியும் கூறி இருக்கிறோம். என்ஜினியர்கள் சரி என்று சொன்னதும், திட்டத்தை நிறைவேற்ற எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மற்றோர் உறுப்பினர்: திட்டம் எப்போது முடிவான வடிவம் பெறும்? எப்போது வேலை துவக்கப்படும் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?

அமைச்சர்: இரயில்வே பொது நிர்வாகி இப்போது என்ஜினியருடன் கலந்து பேசி வருகிறார் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவர்களின் பதில் கிடைத்துவிடும். பிறகு, திட்டத்தை அமுலாக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கவனிப்போம்.

ஆக்கப் பொறுத்தவர் ஆறப்பொறுத்திட வேண்டாமா? அமைச்சர்தான் அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாரே, தாம்பரத்துக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில், மின்சார இரயில் அமைப்பதிலே தடை ஏதும் இல்லை என்று. திட்டம் கூடத்தான், உருவாகிவிட்டதாமே, முறைப்படி நடைபெற்றாக வேண்டிய "கலந்தாலோசித்தல்' எனும் கட்டத்திலல்லவா, இப்போது நிலைமை இருக்கிறது. இந்த நிலையில் வீணாக ஆரவாரம் செய்வதும், தெற்குப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் பேசுவதும் எற்றுக்கு! உறுப்பினர் கேட்டதற்கு, இரயில்வே அமைச்சர், அன்பும் அக்கறையும் ஆர்வமும் ததும்பும் வகையில் பதில் அளித்திருக்கிறார். தெற்குச் சீமையின் குரலுக்கு அவ்வளவு மதிப்பு! மறுப்பு எழுவதில்லை! எது கேட்டாலும் கிடைக்கிறது. இதனை அறியாமல் இந்தத் தீனாமூனாக்காரர்கள், வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறார்களே! அமைச்சர் அளித்த பதில், இதுகளின் கன்னத்தில் அறை கொடுத்தது போலன்றோ இருக்கிறது. தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டு வரையில் மின்சார இரயில் போட முடியாது என்றா அமைச்சர் கூறினார்! அங்ஙனம் கூறியிருந்தால், ஆர்த்தெழலாம், அதட்டிக் கேட்கலாம், ஆகுமா ஓரவஞ்சனை என்று சாடலாம். ஆனால் நடந்தது என்ன? உறுப்பினர் கேட்டார்; அமைச்சர் உள்ளன் புடன் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று, நமது அகம் மகிழத்தக்க விதத்தில், பதில் அளித்திருக்கிறார் - உறுதி அளித்துவிட்டார். இப்போது இதுகள் என்ன செய்யும்! கைகால் வெடவெடக்கத் தலை கவிழ்ந்துகொண்டு, வாயடைத்துக் கிடக்கவேண்டியது தானே! வடக்கே உள்ளவர்கள் என்னமோ, தெற்குச்சீமையை ஓரவஞ்சனையாக நடத்துவது போலவும், தெற்குக்குத் தேவையானவற்றைச் செய்ய மறுப்பது போலவும் பேசித் திரியும், இந்த பிளவு மனப்பான்மையினரைக் கண்டால், கேளுங்கள், "ஏடா, மூடா! கேட்டனையோ, இரயில்வே மந்திரியின் பேச்சை, வெட்டவெளிப் பேச்சல்ல; பாராளுமன்றத் தில் பேசியுள்ளார். பேச்சா அது! வாக்குறுதி!! நமது பகுதிக்கு, வரப்போகிறது வளம்; தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் அமையப்போகிறது. விரைவில் அது அமையாததைக் காட்டிக்காட்டி அங்கலாய்த்துக் கொண் டிருந்தாயே! இனி என்ன பேசுவாய்! மின்சார இரயில் கிளம்பியதும் எதிரே வீழ்ந்து இறந்துபடுவாயோ!!'' கேட்கவேண்டும். அப்போதுதான், "அதுகளுக்கு, புத்தியில் தெளிவு ஏற்படும்; பேச்சிலே அடக்கம் உண்டாகும்; நூறே நாட்கள்! மின்சார இரயில் அமைந்துவிடப் போகிறது. அமைச்சர் உறுதி தந்தாகிவிட்டது'' என்று காங்கிரஸ் கட்சியில் முழக்கம் எழுப்புவோர் எக்காளமிடுவர்; மூலைக்கு மூலை நின்று கொண்டு நமது கழகத் தோழர்களே கூட, "உண்மைதானே, இரயில்வே அமைச்சர்தான் கட்டாயமாக, இரண்டு மூன்று மாதங்களில், தாம்பரம் - செங்கற்பட்டு இரயில் பாதை மின்சார மயமாகிவிடும் என்று உறுதி கூறிவிட்டாரே! வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று பேசினால், மக்கள் இனி நம்புவார்களா?'' என்று எண்ணிக்கொள்ளக் கூடும். அவ்விதம் எண்ணத்தக்க விதமாகத்தான் அமைந்திருக்கிறது, இரயில்வே அமைச்சர் பேச்சு!

ஆனால், காங்கிரஸ்காரர் எக்காளமிடவும், கழகத்தவர் எண்ணமிடவும் தக்கதானவிதத்தில், இரண்டு மூன்று மாதங்களில் தாம்பரத்திலிருந்து செங்கற்பட்டுவரை மின்சார இரயில் திட்டம் நிறைவேற்ற எடுத்துக்கொள்ளப்படும் என்று பாராளுமன்றத்திலே வாக்களித்துப் பேசிய, இரயில்வே அமைச்சர், தம்பி! திடுக்கிடாதே! மனதைத் திடம்செய்து கொள்! கேட்கும்போதே இனிக்கும் வாக்குறுதி தந்த அந்த அமைச்சர் இறந்துவிட்டார்!!

என்ன அண்ணா இப்படி ஒரு போடுபோடுகிறாயே என்று என்னைக் கேட்டுப் பயனில்லை, தம்பி! நான் உண்மையைத்தான் உரைக்கிறேன். அந்த இரயில்வே அமைச்சர் இறந்துவிட்டார்!!

அப்படியானால்...? என்று, ஏதோ கேட்க எண்ணுகிறாய் - தெரிகிறது. கேள் விஷயத்தை; தாம்பரம் - செங்கற்பட்டு மின்சார இரயில் அமையும் - மூன்று மாதத்திற்குள் - என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதும், அந்த உறுதிமொழி பெற, உறுப்பினர் இருவர், கேள்விகள் எழுப்பியதும், இப்போது அல்ல; ஆண்டு பத்துக்கு முன்பு! ஆமாம், தம்பி, வேடிக்கை அல்ல. படிக்கும் போது, இப்போதுதான், பாராளுமன்றத்திலே, கேட்கப்பட்டது போலத் தோன்றும் - ஆனால் நான் துவக்கத்திலே குறிப்பிட் டிருக்கும், கேள்வி - பதில் டில்லி பாராளுமன்றத்தில், 1950 மார்ச்சுத் திங்கள் 17-ம் நாள் கிடைத்ததாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு!! மூன்று மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள், முடிவடையும் தருவாயில் இருக்கிறது திட்டம் நிறைவேற்றத் தடை ஏதும் இல்லை என்று, இரயில்வே அமைச்சர் பேசினார், பத்து ஆண்டுகளுக்கு முன்பு. அவர் இறந்துபோய்விட்டார் - மின்சார இரயில் திட்டம் இப்போதும், "விவாத'க் கட்டத்திலேதான் இருக்கிறது, மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், நூற்று இருபது மாதங்களாகிவிட்டன அந்த வாக்குறுதி கூறி. மின்சார இரயிலும் ஓடவில்லை சுவைதரும் உறுதிமொழி கூறிய இரயில்வே அமைச்சர் கோபாலசாமி ஐயங்காரும் மறைந்து போனார்.

கேள்வி கேட்ட உறுப்பினரில், ஒருவர், கனகசபை என்பார்; மற்றொருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார்!

ஆண்டு பத்துக்கு முன்பே, அளிக்கப்பட்ட வாக்குறுதி, இன்னும் நிறைவேற்றப்படவில்லை!!

வடக்கு - தெற்குக் குறித்து, கழகம் பேசிவருவது, நியாயமற்றதா, தேவையற்றதா என்று காங்கிரஸ் நண்பர்கள், எண்ணிப்பார்த்திடவேண்டும்!! வடக்கு, தெற்கை எவ்வளவு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு என்ன செய்ததோ அதையேதான், இன்றும் செய்யவேண்டி இருக்கிறது! மூன்று மாதம் என்று தவணை குறிப்பிட்டார், கோபாலசாமி ஐயங்கார். - இப்போது உள்ள அமைச்சர்களும், அதேபோன்ற பதிலைத் தருகிறார்கள் - வரும் - நிச்சயம் வரும் என்கிறார்கள்!

இந்தப் பத்து ஆண்டுகளில், வடக்கே எத்தனை எத்தனை புதுமைகள் ஏற்பட்டுள்ளன, அவைகுறித்து எத்துணை பெருமிதத்துடன், காங்கிரஸ் தலைவர்களே பேசி மகிழ்கிறார்கள். நாமும் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று எண்ணுகிறார்கள். பாலைவனங்களைப் பழமுதிர் சோலைகளாக்கியுள்ளனர்; பாதாளத்தில் அடைபட்டுக்கிடந்த கனிப்பொருள்களை வெட்டி எடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர்; புதிய துறைமுகங்களையும் புத்தம் புதிய தொழிற்சாலைகளையும் கண்டுள்ளனர்; நாடு விடுதலை பெற்றுவிட்டது. நம்மவர் ஆட்சி நடைபெறுகிறது என்று பாமர மக்களும் உணர்ந்து உவகை கொள்ளத்தக்க விதத்திலே, வடிவம், வண்ணம், வளம், வாய்ப்பு எனும் எந்தத் துறையிலும் ஓர் ஏற்றம் தெரியத்தக்க விதத்திலே, வடக்கே காரியங்களை நடத்திக் காட்டுகின்றனர்; இங்கோ, பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எந்த மின்சார இரயில் பாதைக்காகப், பாராளுமன்றத்திலே, கேள்விகள் கேட்கப்பட்டு, அமைச்சர் பதிலும் வாக்குறுதியும் அளித்தாரோ, அதே நிலைதான் நீடிக்கிறது; ஏன் இந்த நிலை என்று கேட்டால், "ஜெய் ஹிந்த்' என்று கூச்சவிட்டுக் குமுறலை அடக்கப் பார்க்கிறார்கள்.

* * *

நாம், தம்பி! இந்த ஓரவஞ்சனையை ஓயாமல், அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறி வருவதால், நமது கழகத்தில் இல்லாதவர்கூட, நமது கழகத்தின், தனி அரசுக் கோரிக்கையை வெறுப்பவர் எதிர்ப்பவர் கூட, இப்போது, வெளிப்படையாகவும் சிறிதளவு வீராவேச உணர்ச்சியுடனும், தெற்குச் சீமையை பட்டினிபோட்டுப், பஞ்சத்தில் ஆழ்த்திப் பராரிக் கோலத்தில் வைத்திருக்கும் போக்கினைக் கண்டிக்கக் கிளம்புகின்றனர். தான் தீட்டிய ஓவியம், ஓர் மாளிகைக் கூடத்தில் இடம்பெறக் கண்டால், மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ளும் ஓவியன்போல, இன்று, நாம் கூறிவரும் மருந்து பிறருடைய இதயங்களிலே இடம் பெற்று, பேச்சிலே வெளிப்படுவது காணும்போது கழகம், மகிழ்ச்சி பெறாமலிருக்க முடியுமா! எத்துணை இன்பம்! எத்துணை இன்பம்!! பொருளற்ற பேச்சு என்றனர், நாம், முதலில் பேசும்போது. இன்றோ, பல்வேறு அரசியல் முகாம்களிலுமிருந்து அதே பேச்சு எழுகிறது. வசை பேசும் வன்கணாளர்கள் என்று நம்மைத் தாக்கினர், தம்மைத் தலைசிறந்த தேசியக் குணாளர்கள் என்று கருதிக்கொண்டு கதைப்போர்; இன்றோ, இங்கு ஏன் புதிய இரயில் ஏற்படுத்தவில்லை? எல்லாம் வடக்கேதானா? ஏன் இந்த மாற்றாந்தாய்ப் போக்கு? என்று பலரும் துணிந்து கேட்கின்றனர். இல்லையே, உங்கட்கு நிரம்பச் செய்கிறோமே. இன்னும் பல செய்யப் போகிறோமே என்று கோவிந்தவல்லப பந்து, குழைகிறார். எனினும், தெற்குப் பகுதியைப் புறக்கணிக்கிறீர்கள், இது தீதே பயக்கும். இதை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்று பலரும் குமுறிக் கேட்கின்றனர்; இந்தப் புதிய பேச்ச, சுவைமிகு இசையாக நமது செவியில் வீழ்கிறது; பட்டபாடு வீண் போகவில்லை, எடுத்துச் சொன்னோம், தடுத்துப் பார்த்தனர், முடியவில்லை; இன்று அவர்களே, நாம் சொல்வதைச் சொல்கிறார்கள் என்று அறிந்து அகமகிழ்கிறோம்.

"பார்த்து நடக்கவேண்டாமா! மேலே வந்து மோதிக் கொள்கிறீரே?''

"பார்த்து நடக்கத் தெரியாதா..... எதிரே வருபவர்மீது இடித்துக்கொள்வதுதான் உமது பொழுதுபோக்கா?''

"யாரய்யா இது, போக்கிரித்தனம் செய்கிறீர். எதிரே வருபவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? முரட்டுத்தனமா?''

"கண் குருடா, உனக்கு!''

"குருடா! என்ன? உதை கேட்கிறதா?''

"திமிர் பிடித்து அலைகிறான். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்குச் சரியானபடி பூஜை கொடுத்துப் புத்தி கற்பிக்க வேண்டும்.''

"தடிக்கழுதை! ஏ! எருமை மாடு! யாரிடம் காட்டுகிறாய் உன் மண்டைக் கனத்தை''

தம்பி! பார்வை பழுதானவன், பாதையில் நடந்து செல்கையிலே யார்மீதாவது மோதிக்கொள்ள நேரிட்டுவிடும். முதல்முறை சிறிது மரியாதையாகவும், பிறகு படிப்படியாகக் கோபம் வளர்ந்த நிலையிலும் கேள்விகள் கிளம்பி, இறுதியில், "அடி தடி' அளவுக்குச் சென்றுவிடும். இது இயல்பு.

அஃதே போலத்தான், திட்டங்கள் தீட்டப்பட்டபோது தென்னகத்துத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டது கண்டு, ஏனய்யா இந்தப் போக்கு என்று ஆரம்பமான பேச்சு, இப்போது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்படும் கட்டம் ஏற்பட்டிருக்கும் வேளையில், தட்டிக் கேட்கும் பேச்சாக, அதட்டிக் கேட்கும் போக்காக, உண்டா இல்லையா? முடியுமா முடியாதா? உன் யோக்யதையே இதுதானா? என்று கேட்கும் விதமாக, வீரம், உரிமை உணர்ச்சி, ஆத்திரம் எல்லாம் கலந்த வகையான பேச்சாக வளர்ந்துவிட்டது. நமது கழகம் மட்டுமே இந்தப் பேச்சைப் பேசியபோது, இது கல்லாதார் போக்கு என்று கூடப் பலரும் கருதிக்கொண்டனர்; இன்றோ கற்றறிந்தோர் என்று நாடு கொண்டாடத்தக்க நிலைபெற்றவர்களுங்கூட, இதே பேச்சினைப் பேசக் கேட்கிறார்கள். கேட்டிடவே, செச்சே! நாம்தான் தவறு செய்துவிட்டோம் - தீனாமூனாக்காரர்கள் பேசியபோது, ஏனோதானோ என்று இருந்துவிட்டோம், அவர் களை ஏதுமறியாதார் என்றுகூட ஏசிவந்தோம், இப்போதல்லவா தெரிகிறது உண்மை. அவர்கள் இத்தனை நாட்களாக எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்ததத்தனையும் உண்மை. முழு உண்மை, என்று கூறிவருகிறார்கள். நாம் பெற்ற மகத்தான வெற்றி, தம்பி! இதிலேதான் இருக்கிறது!! நாம் எடுத்துக்கொண்டிருக்கிற காரியம் நமது உள்ளத்தில் இடம்பெற்று, தம்மைப் புதுமனிதர் களாக மாற்றிவிட்ட அந்த இலட்சியம், இன்று மற்றையோரால் அலட்சியப்படுத்தப்படும் நிலைமாறி, அந்த இலட்சியம் உருவானதற்கான, உணர்ச்சி, இன்று தூற்றியோர், தொலைவிலிருந்தோர் ஆகியோருக்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. அவர்கள், அந்த இலட்சியத்தை இன்னும், ஏற்றுக்கொள்ள வில்லை; கூச்சம் காரணமாக இருக்கலாம்; அச்சம்கூட எழக்கூடும்; ஆயினும், எப்போது அவர்களுக்கு நமக்கு ஏற்பட்ட உணர்ச்சி ஏற்பட்டுவிட்டதோ, இனி அவர்கள், விலைக்கு வாங்கப்பட்டாலொழிய, வழுக்கி வீழ்ந்தாலொழிய, நிச்சயமாக, இலட்சியப் பாதையில் நடந்து நடந்து, நாம் இருக்கும் இடம் வந்து நிற்பர்; இது உறுதி. சிலருக்கு அந்த நெடுவழி நடந்திடும் அளவுக்கு வலிவு இலாது போகக்கூடும்; சிலர், வழியில் இருக்கும் சத்திரம் சாவடி தங்கி இளைப்பாறிவிட்டு பிறகு மேலால் நடக்கலாம் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திப், பிறகு, சத்திரச் சாப்பாடே போதும் என்று அங்கேயே தங்கிவிடவும் கூடும்; ஆனால், தன்னலமற்றவர்கள், தளராது பாடுபடும் போக்கினர், நாடு பெரிது வீடல்ல என்ற குறிக்கோள் கொண்டோர், நிச்சயமாகப் பயணத்தைத் துவக்கிடின், இறுதிவரை நடந்து, நாம் இருக்கும் இடம் வந்தே சேருவர். எண்ணும்போதே, செந்தேன் பருகிடும் நிலை; தம்பி! அதற்கான அறிகுறிகளைக் காண்கிறேன், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தனை பெரியவர்கள், மெத்தப் படித்தவர்கள், மேல் நிலை உள்ளவர்கள், பலநாடு சென்று பக்குவமடைந்தவர்கள், என்போரெல்லாம், நமக்கென்ன என்று இருக்கிறார்களே, யாதும் ஊரே என்று உரைக்கின்றனரே, நமது போக்கைக் குருட்டறிவு என்றும், குறைமதி என்றும் குறுகிய மனப்போக்கு என்றும், பிளவு மனப்பான்மை என்றும் கூறி, கேலியும் கண்டனமும் வீசி நிற்கின்றனரே! நமது இதயமோ நாம் கொண்டுள்ள கொள்கை நியாயமானது என்று கூறுகிறது; நாட்டின் நாயகர்கள் என்று கூறத்தக்க விருதுபெற்றோரோ, இதை வெட்டிப்பேச்சு என்கிறார்கள். நாம் என்ன செய்வது? இதயம் இடும் கட்டளையையோ மீற முடியவில்லை! முடியாது! கூடாது! இந்தப் பெரியவர்களோ, நமது உள்ளுணர்ச்சியையே ஒழித்திடத்தக்க விதத்தில் பேசுகிறார்கள்!! என்செய்வது! என்று தம்பி! என்னைப் பொறுத்தவரையில் பல நாட்கள் எண்ணியதுண்டு. பெரியாருக்கு இதுபோன்ற நிலை பலமுறை ஏற்பட்டதுண்டு; ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

ஈரோடு, என் இருப்பிடமாக இருந்த நாட்கள். சித்தப்பா சீற்றமாக இருந்தாலும், அப்பா ஆர்ப்பரித்து வந்தாலும், ஓடோடி வந்து, நான் படுத்திருக்கும் இருக்கைக்குக் கீழே பதுங்கி, அப்படியே, தம்பி சம்பத்து உறங்கும் நாட்கள். யாராவது சிறிதளவு கடுமையாக நமது இயக்கத்தைப்பற்றிப் பேசினாலும், துடிதுடித்து எழுந்து, படபடவென்று பேசிடும் பருவத்தில் நான் இருந்த காலம். ஒரு மாநாடு ஏற்பாடாகி இருந்தது, ஈரோட்டில். எந்தத் திடலில் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாய் அல்லவா? திடலில் அல்ல!! பள்ளிக் கட்டிடத்தில் - கூடத்தில்.

நாங்கள் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது; திடீரென்று, சர். ஆர். கே. சண்முகம் செட்டியார், தாம் மாநாட்டுக்கு வருவதாக, தாமாகவே பெரியாருக்குத் தெரிவித்தார்.

ஏன் வருகிறார்? இவருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அலுவலுக்கு இடையிலே, இந்த மாநாட்டுக்கு வர எண்ணிட காரணம் என்ன? என்று யோசிக்கவேண்டி நேரிட்டுவிட்டது. எதிர்பாராத இந்த அறிவிப்பு, ஏதேதோ எண்ணங்களை மூட்டிவிடலாயிற்று.

பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் பெருமதிப்பு, பாசம்! எனவே பயந்து போனார்.

பாசம் இருந்தால், பயம் ஏற்படுமா என்று கேட்பாய், தம்பி! பாசம் எப்படிப்பட்டது; அதன் வயமாகி விட்டால், அது என்னென்ன பாடுபடுத்தும் என்பதை, தம்பி! உன்னால் எப்படி இன்று உணர முடியவில்லையோ, அதுபோலத்தான் எனக்கு அப்போது நிலை; இப்போது அந்தப் பாசம், என்னை என்ன பாடுபடுத்துகிறது என்பதை, நானன்றோ அறிவேன்.

பெரியாருக்கு, சர். சண்முகத்திடம் இருந்த பாசத்தால்தான் பயமும் ஏற்பட்டது; காரணம் என்ன தெரியுமா? சிலர், சர். சண்முகம் மாநாட்டுக்கு வருவதாகத் தெரிவித்திருந்தாரே, அதற்கு ஒரு காரணம் காட்டினார்கள் - கற்பித்தார்கள் - என்றே கூறலாம்.

விளைவு எப்படி எப்படி ஏற்பட்டுவிடக்கூடும் என்பதுபற்றி எண்ணிப் பார்க்காமல், நிகழ்ச்சிகளுக்கு, அவரவர் தத்தமக்குத் தோன்றிய வகையில், பொருள்கூற முற்படுவது, எளிதிலே நீக்கிட முடியாத இயல்பல்லவா? அதனால்தான், அன்று சண்முகம் அவர்கள் ஈரோட்டு மாநாடு வருவது எதற்காக என்பதுபற்றி, அவரவர் அவரவருக்குத் தோன்றிய காரணங்களைக் காட்டினர். அதிலே, பெரியாருக்கு மன அதிர்ச்சியே தரத்தக்க விதத்தில் சிலர், ஒரு காரணம் காட்டினர்.

நாட்டுப் பிரிவினைத் திட்டத்தை, நாம் கைவிட்டு விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பெரியாரின் போக்கை அன்பினால் கட்டுப்படுத்தி மாற்றக்கூடிய ஆற்றல் படைத்தவர், சர். சண்முகம் ஒருவர்தாம் உளர் என்பதறிந்து அவரை அனுப்புகிறார்கள்; அவர் மாநாடு வந்து நாட்டுப் பிரிவினைத் திட்டம் நாசம் தரும், மோசம் போகாதீர் என்று பேசப் போகிறார்; அவ்விதம் வேறு எவரேனும் பேசினால், பெரியார் தமது கோபப் பார்வையாலேயே அவர்களை அடக்கிவிட முடியும்! எவருடைய வாதத்தையும் பொடிப் பொடியாக்கிடமுடியும்!! ஆனால் சர். சண்முகம் நாட்டுப் பிரிவினையை எதிர்த்தால், அவரிடம் பாசம் கொண்டுள்ளதால், பெரியாரால் மறுத்திட, எதிர்த்திட மட்டுமல்ல, வாதிடக்கூட முடியாது; மனம் நெகிழும், குழம்பும்; நம்ம சண்முகமா இப்படி ஆகிவிட்டார் என்று எண்ணுவார், வருத்தம் மேலிடும்; நம்ம சண்முகமே இப்படி ஆகிவிட்டபிறகு நாம் யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றும், திகைப்பு மேலிடும் என்பது பலருடைய கருத்து. அதிலே பெருமளவு உண்மையும் உண்டு. பெரியார் உள்ளபடி பயந்தார், அன்புக்குரிய சண்முகத்தை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையும் ஏற்படும் போலிருக்கிறதே என்று.

நான் உடனிருந்தேன்; என்னை அவர் பார்த்தார்; பார்வையைப் புரிந்துகொண்டேன்; சிறிது பணமும் கொடுத்தார், புதிய சில புத்தகங்கள் வாங்க; படித்துக் குறிப்புகள் எடுத்தேன், நாட்டுப் பிரிவினைக்கு ஆதாரங்கள்.

இந்த ஆதாரங்களை, வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினால், சர். சண்முகம்கூட மறுக்க முடியாது என்ற தெம்பு எனக்கு.

ஆனால், நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.

மெத்தக் கஷ்டப்பட்டு நான் தேடி எடுத்த குறிப்புகள் எனக்குப் பயன்படவில்லை!