அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

திருமலைக் கண்ட திவ்ய ஜோதி
1

(மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சித்திரிக்கப்படும் ஓவியம் இது. இட்டுக் கட்டியதோ என்று ஐயப்படுவோருக்கு, எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர் தீட்டிய ‘கன்னியர் வீரம்’ என்ற சிறு நூலில், பட்டர் புதல்வி சிறுகதையைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.)

சுந்தரவல்லி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரதம பட்டாச்சாரியாரின் திருமகள் நான். பெயர் சுந்தரவல்லி. இளமங்கை எழில்மிக்கவள் - பூங்கொடி - ஊர் புகழ்கிறது என்னை. இதோ, என் எதிரே இருப்பது விஷக்கோப்பை! தங்கக் கோப்பை! மன்னன் முன்பு தந்த பரிசு இது அப்பாவுக்கு! எனக்கும் பரிசு தந்திருக்கிறான், விஷம்!

“குழந்தை சொர்ண விக்ரஹம் போலிருக்கிறது! பாப்பா! வாம்மா, வா! ஏன் பயம்? ஓடிவா, ஓடிவா! இதோ பார், உனக்குத்தான் மல்லிகை - வா!” நான் சிறுமி, பட்டாச்சாரி மகள் - அவர்! நாடாளும் மன்னன். அவருடைய அன்புமொழி எனக்குத் தேனாக இனித்தது. அப்பா பூரித்துப் போவார். என்னைப் பிடித்திழுத்துக் கொண்டுபோய் மன்னர்முன் நிறுத்துவார். அவர் என் முகவாய்க்கட்டையைப் பிடித்து தூக்குவார்; கன்னத்தைக் கிள்ளுவார்; துவள்வேன். தூக்கி உட்கார வைத்துக் கொள்வார் மடியிலே! ஊரார், ‘சுந்தரவல்லி மஹா அதிர்ஷ்டக்காரி! மகாராஜாவுக்கு அவள் மீது உயிர்’ என்பார்கள். பலநாள் எனக்குப் பழமும், பட்சணமும், மல்லியும் முல்லையும் கொண்டு வந்து தருவார். ராஜகாரியங்கள் ஏராளம் என்றாலும், என்னைப் பார்க்கவும், விளையாடவும், எப்படியோ அவருக்கு நேரம் கிடைத்தது. சிறுமிதானே நான் - எனக்கு ஒரே பெருமை! என்னைப் போன்ற சிறுமிகளைப் பார்க்கும்போது, பெருமையாகச் சொல்வேன். ‘உங்க ஆத்துக்கு ராஜா வர்றாரா? எங்காத்துக்கு வரார் - என்னோடு வேடிக்காயாகப் பேசிண்டிருப்பார். என் மேலே பிராணன் மகாராஜாவுக்கு’ - என்றெல்லாம். சிறுமிகளிலே குறும்புக்காரிகள் கேலி பேசும் - “சந்தரியோட கண் இருக்கே, அது ராஜாவை மயக்கிவிட்டிருக்கும்” என்று ஒருத்தி சொல்வாள். கோடி ஆத்துக் கோமளம், “சுந்தரி சிரிக்கிறப்போ கன்னத்திலே குழி விழறது பாரடி, அதிலேதான் ராஜா சொக்கிப் போறார்” என்பாள். “சுந்தரியோட - கல்யாணத்துக்கு, ராஜா நிறைய சன்மானம் செய்வார்” என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

இந்தத் தென்றலால் நான் வளர்க்கப்பட்டேன் - பருவ மங்கையுமானேன்! மன்னன் எப்போதும் போலவே வந்து கொண்டிருந்தார். ‘சுந்தர், சுந்தரி!’ என்று கனிவுடன் கூப்பிடுவார். நான் ‘நமஸ்காரம்’ செய்துவிட்டு, உள்ளே போய்விடுவேன் - அப்பாவும், அவரும் பேசுவார்கள் - நான் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே இருப்பேன். சிறுமியாக இருந்தபோது இருந்தபடி இப்போது முடியுமா - அடே அப்பா! அப்போது ஒரே வேடிக்கைதானே! அதை எண்ணிக் கொள்வேன். புன்சிரிப்புடன் போகும்போது ஒருமுறை நமஸ்காரம் செய்வேன். அவர் மட்டும் அடிக்கடி, ‘சுந்தரி, சுந்தரி’ என்று கூப்பிட்டபடி இருப்பார்.

அப்பாவிடம் எனக்குப் பிரமாதமான கோபம் பிறந்தது. அரசர் மீது குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கினார். யாராரோ அப்பாவின் மனத்தைக் கெடுத்தனர். - இவரும் பிறகு, பலருடைய மனத்தைக் கெடுக்கலானார். மன்னர் எங்கள் நாட்டுக்கு வந்த கிருஸ்தவப் பாதிரிகளுடன் கூடிக் குலவுகிறார். என்பதுதான் புகார்! இதிலே என்ன தவறோ தெரியவில்லை! கிருஸ்தவப் பாதிரிகள் என்றால் என்ன, மனிதர்கள்தானே! ஏன், அப்பாவுக்கு மற்றும் சிலருக்கும் அருவருப்பு - நான் கேட்டேவிட்டேன் அப்பாவை - அவர், ‘பைத்யம்! உனக்கென்னடி தெரியும்! நம்ம புராதன மதத்துக்கு வைரிகள் இந்தத் கிருஸ்தவா. நம்ம மதத்திலே உள்ளவாளை, ஏழை எளியவர்களையும் விவரம் அறியாதவர்களையும் பிடித்து, கிருஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறா. இந்த அக்ரமத்தை ராஜன் அனுமதிக்கிறான். இவனே, கிருஸ்தவனாகி விடுவானோன்னு நேக்கு பயமாயிருக்கு - ஊர் முழுதும் இதைப் போலத்தான் பேசிக் கொள்கிறா” என்று சொன்னார். ‘இவ்வளவுதானா! தங்கக் குன்றப்பா மகாராஜா! அவரைச் சந்தேகிப்பது மகாதோஷம்” என்று நான் வாதாடி வந்தேன்.

ஒருநாள் அப்பா வெளியே போயிருந்தார் - அவர் வந்தார். நமஸ்காரம் செய்ய வேண்டுமே - ஊராரும் ராஜா வந்திருக்கிறார், உட்காருங்கள் என்று சொல்லா விட்டால் எப்படி... கூச்சத்தோடு நின்றேன் கும்பிட்டேன் - ஏதோ குளறினேன் - உட்காருங்கள் என்றுதான் சொல்லியிருப்பேன், ஊஞ்சலில் உட்கார்ந்தார். நான் அவர் கண்களில் பட்டும் படாததுமாக நின்று கொண்டிருந்தேன்.

“அப்பா, இல்லையோ... சரி, வருவார், சீக்கிரம்” என்று சொல்லியபடி, மன்னர், நான் இருந்த பக்கம் கவனித்தார் - என்னையும் அறியாமல் கூச்சம். தலை குனிந்தபடி நின்றேன். “ஏன் கூச்சமோ? சிறு பெண்ணாக இருக்கும்போது எவ்வளவு விளையாடுவாய், மான்குட்டி போல! நான் என்ன புது மனிதனா? என்னைக் கண்டு, ஏன் இவ்வளவு வெட்கம்?” என்று கேட்டார் நியாயந்தான் - ஆனால் இந்தப் பாழாய்ப் போன வெட்கம், என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. கொஞ்சம் ஜலம் கேட்டார்; ஓடினேன் உள்ளே - வெள்ளிச் செம்பிலே வெட்டிவேர் தண்ணீர் நிரப்பி, ஊஞ்சலருகே கொண்டு சென்றேன் அதை வாங்கும்போது, அவர் கரம், என் கரத்தின் மீது படுவது போலிருந்தது - ஊஞ்சலின் மீது செம்பை வைத்துவிட்டு விலகி நின்றேன். புன்னகையுடன் அவர், “அடே அப்பா! எவ்வளவு ஜாக்ரதை! நான் என்ன, பூதமா, பிசாசா?’ என்றார். நான் என்ன பதில் சொல்வது - புன்னகை புரிந்தேன். அப்பா வந்தார், எனக்கு அப்போது தான் மன அதிர்ச்சி மறைந்தது. பிறகு அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பா இல்லாத வேளையில் இதுபோல அவர் வருகிற போதெல்லாம் எனக்குப் பெரிய மனநெருக்கடியாகவே இருந்து வந்தது. ‘வேண்டுமென்றே, அப்பா இல்லாத நேரமாகப் பார்த்து வருகிறாரோ, தெரியவில்லையே!” என்று சந்தேகம் கிளம்பிற்று லேசாகத் திகிலும் பிறந்தது. ஏனென்றால், மகா உத்தமர், தர்மிஷ்டர் என்றாலும், மன்னருக்கு மாதர்களிடம் மையல் அதிகம் என்று அப்பாவும் மற்றவர்களும் பேசிக் கொண்டது எனக்குத் தெரியும். முந்நூறு அழகிகள் இருக்கிறார்கள் அந்தப்புரத்தில் என்று சொன்னார்கள். நானோ பருவமங்கை! அவரோ அடிக்கடி நான் தனியாக இருக்கும்போது வருகிறார். அன்னியராக இருந்தால் அப்பா இல்லை என்று ஒரே வார்த்தையில் அனுப்பிவிடுவேன். அரசர்! குழந்தைப் பருவ முதல் விளையாடிய பழக்கம்! எப்படி அலட்சியப்படுத்த முடியும்? ஆனால்...!

என் அடிவயிற்றிலே அடிக்கடி இந்த ‘ஆனால்’ கிளம்பும். ஆனால் மறுகணம், செச்சே! என் அப்பாவுக்குச் சமானம் என்ற எண்ணம் தோன்றி, சாந்தி உண்டாக்கும்.

என்ன அவசரமாகத்தான் இருக்கட்டும்; இப்படி, வெள்ளிச் செம்பை நானாகத் தருவதற்குள் அவர், என் கரத்தைத் தொடுவதா - நான் கொஞ்சம் முகத்தைச் சுளித்துக் கொண்டேன். அவர், ‘செச்சே! இதென்ன இவ்வளவு பயம்! பைத்யமே! உன் அப்பா, ஜெபதபாதிகளை முடித்துக் கொண்டு வீடு வர நெடுநேரமாகும்’ என்றார் - என்மனம் பதறிவிட்டது. விலகினேன் விடவில்லை - கரத்தை உதறித் தள்ளினேன்; கருத்து புரிந்துவிட்டது. அவரோ... என்ன சொல்வேன் - அணைத்துக் கொண்டார் பிறகு - கூவுவேன் - என்று மிரட்டினேன். ‘கோமளமே’ என்று கெஞ்சலானார். ‘என் மீது கோபித்து என்ன பயன் கண்ணே! தேவரும் மூவரும் கூட மதிமயங்கக்கூடிய அழகை உனக்குத் தந்த அயன்மீது கோபித்துக் கொள் அல்லது உன் அழகைக் காண எனக்குக் கண்ணளித்த கடவுளின் மீது கோபித்துக் கொள். நான் மன்னன். ஆனால், மனிதன்! முனிவனுமல்ல! மோகனாங்கி!” என்றார். அரசர் பேசும் பாஷையா இது - என் உடல் துடித்தது - நான் துணிந்து, அவரைக் கண்டித்தாக வேண்டும் - விலகினேன் - விழியிலே நீர் தளும்பிற்று -
“இந்த அக்ரமம் ஆகாது - அரசரின் புத்தி இப்படி அழியக் கூடாது” என்று சொன்னேன் - கோபமாகத்தான். ஆனால் உரத்த குரலிலே அல்ல - வெளியே தெரியக்கூடாதே. பதில் பேச வாயில்லை - ஆனால்... என்னை விடவில்லை... “உன்னிடம் பிச்சை” என்று கெஞ்சினார். இந்தத் துர்ப்பாக்கியனைச் சாகடிக்காதே” என்றார், சாகசமாக. எனக்கும் வார்த்தைகள் மளமளவெனக் கிளம்பின. ஏசினேன். “என் மீது என்ன சுந்தரி, தவறு கரும்பு வில்லோன் என்னைக் கொல்கிறான்” என்று கூறினார். ஆத்திரம், எனக்கு. கரும்பு வில்லோன் இப்படித் தான் கதியற்ற கன்னியைக் கற்பழிக்கச் சொல்கிறானா?” கபடத்துக்குக் கவசமிடாதீர், காவலரே! விநாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்; அழிந்து போவீர் - நிச்சயமாக - சத்தியமாக” என்று கூறினேன், அழுதபடி, பயம் போய் விட்டது. கோபம் அதிகரித்தது. ஓடிவந்து என்னைப் பிடித்திழுத்தபடி, ‘அழிவேனா! நானா! உன்னைப் பெறாவிட்டால்தான் பேரழகி நான் அழிவேன். பெற்றால் பெருவாழ்வு, புதுவாழ்வு இருவருக்கும்’ என்றார். வெறுப்பு எனக்கு - அவர் பிடியிலிருந்து விடுபடக் கூட முயற்சிக்க வில்லை - ‘வாழ்வு எதுக்குக் கற்பிழந்த பிறகு?’ என்று சொன்னேன். என் கூந்தலைக் கோதியபடி அவர், ‘கற்பு! யார் வேண்டாமென்பார் அந்தப் பூஷணத்தை - என்னைக் கணவனாகக் கொள் -பதிசொல் தவறாத உத்தமியாக வாழ உன்னை அழைக்கிறேன்; வெறும் உல்லாசத்துக்கு அல்ல” என்றார். ஒரு கணம் திகைத்துப் போனேன், என்ன சொல்வது என்று தெரியாமல்! கற்பு கெடாதாமே! திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாரே! என்று யோசித்தேன். வார்த்தைகள் வெளிவரத் தாமதமாயின - அவருடைய சேட்டைகளோ துரிதமாயின. “அரசே! குலம் அறியாது பேசுகிறீர்” என்றேன், அணைப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டபடி, ‘அழகு அறிந்து நாடுகிறேன். சுந்தரி! அவ்வளவுதான் எனக்குத் தெரியும் பேச’ என்றார். அவருடைய மயக்கத்தைப் போக்க மேலும் பேச எண்ணி, ‘அழகு கண்டு அகலிகையிடம் மோகம் கொண்ட இந்திரன் என்ன கதியானான்? தெரியுமே உமக்கு’ என்றேன். அவர், என் வாயை அடைக்கும் விதமாக, ‘உனக்கு ஒரு கௌதமன் இல்லையே சுந்தரி! அதை மறந்து பேசுகிறாயே’ என்றார். ஆமாம்! நான் கன்னி! அவரோ கலியாணம் செய்து கொள்ள அழைக்கிறார். கற்பை, பூஷணமென்று புகழ்கிறார். ஒருவேளை, என்னை மனைவியாகக் கொள்ளத்தான் விரும்புகிறாரோ, என்றெல்லாம் எண்ணம் பிறந்தது, ஆனால் இதை அவர் அப்பாவிடமல்லாவா கூறவேண்டும்; இப்படி என்னைத் தனியாகச் சந்தித்தா... முறை வேண்டாமா எதற்கும். கோபம் குறைந்தது; பரிதாபமாக இருந்தது - எனவே, நான் என் தந்தை, ஆதீனம் என்று கூறி என் நிலைமையை விளக்கினேன். அவர் கொஞ்சும் மொழியில், ‘நீ உன் தந்தை ஆதீனம். அவரோ சாஸ்திர ஆதீனம். சாஸ்திரமோ பிரம்ம குலமங்கையை க்ஷத்ரியன் மணம் செய்துகொள்ள இடம் தராது - என்ன செய்வது?” என்று கேட்டார். எனக்கு அவருடைய வாதம்கூட, சிறிது மகிழ்ச்சி தந்தது. ஆனால் அவருடைய செய்கை எனக்குக் கோபமூட்டியது. கடுமையாகவே “என்ன செய்வது - மனத்தை அடக்குவது - தர்மத்துக்குக் கட்டுப்படுவது - பாபதோஷத்துக்குப் பயந்து நடந்து கொள்வது” என்று சொன்னேன். நான் சொல்லச் சொல்ல அவர் என்னை நெருங்கி, “ஏட்டுச் சுரை! எல்லாம் ஏட்டுச் சுரையடி எழிலரசி” என்று கூறிவிட்டு, கட்டிப் பிடித்தார் - “காட்டு முறை இது; வேண்டாம்” என்று கூறியபடி விலகினேன் - சுவரிலே கூட மோதிக் கொண்டேன் மேலே போக இடமுமில்லை; அவர் விடவுமில்லை. ‘ஐயோ’ என்று அலறினேன். ஆஹ! என்று புகழ்ந்தார். இதழை இதழ் தொட்டது; துடித்தேன் - ‘அட பாவி!’ என்று சபித்தேன்; ‘என் அன்பே’ என்ற சரசமொழி பேசி விட்டு...! அக்ரம்ம - என்று கூறியபடி என் பலம் கொண்ட மட்டும் தள்ளினேன். ஆனால் நான்தான் கால் இடறிக் கீழே வீழ்ந்தேன் - அழிந்தேன். நான் அழுத கண்களைத் துடைத்தபடி ‘பாவீ! பாதகா!’ என்று ஏசினேன். ‘அமிர்தம்! தேவாமிர்தம்!’ என்று அந்தப் பாவி பஜனை பாடிக் கொண்டிருந்தான். உள்ளே சென்று, படுக்கையில் புரண்டு புரண்டு அழுதேன். ‘சுந்தரி - சுந்தரி - சுந்தரி’ என்று விதவிதமாகக் கூறினார் - காலால் எட்டி உதைத்தேன் கதவை - உரத்த குரலில் சிரித்து விட்டு, வெளியே போய்விட்டார், இரத்தம் குடித்த புலி போல. நான்! நானா! நரகப் படுகுழியிலே தள்ளப்பட்ட நான் என்ன செய்வது? நான், யார் இனி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரதம பட்டாச்சாரியாரின் மகள் சுந்தரவல்லி, மன்னின் காமப்பசிக்குப் பலியாக்கப் பட்டுவிட்ட பாபியானாள்! என்ன செய்வது! ராஜ சர்ப்பம் தீண்டிவிட்டது - துடைக்க முடியாத கறை படிந்துவிட்டது.

அரசன், சாமான்யன் - சகல கலாவல்லவன், சாமான்யன், நல்லவன், கெட்டவன் என்று ஆட்வர்களை எப்படி வேண்டுமானாலும் நிலைமையையும் குணத்தையும் பிரித்துக் காட்டலாம். ஆனால் பெண்கள் விஷயத்திலே ஆடவர்கள் கொள்ளும் போக்கைக் கவனித்தாலோ, செச்சே! எல்லா ஆடவரும் ஒரே தரமாகத் தான் இருக்கிறார்கள். இந்த அரசன், நான் பந்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தவன் தான்! ‘பாப்பா, பாப்பா’ என்று கூப்பிட்டவன்தான்! இப்போது, காமப்பசி பிடித்து என்னை நாசம் செய்துவிட்டான், நிலைமையை மறந்து, இனி என் கதி?

மறுமுறை அந்த மாபாவியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கலாகாது என்று தீர்மானித்தேன். அப்பா வருவதற்குள் என் அலங்கோலமான நிலைமையைத் திருத்திக் கொண்டேன் - தலைவலி - அதனால்தான் முகத்திலே மாறுதல் என்று தந்திரம் பேசினேன். அப்பா, மீனாட்சி கோயிலிலே வந்திருந்த பக்தர்களின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டே, பிரசாத வகைகளை வைத்தார். ‘அம்பிகே! என்னை ஏங்கினேன். அப்பா, வேதாந்த விகாரத்தில் ஈடுபட்டார் - வேதனையில் நான் மூழ்கிக் கிடந்தேன். வேட்டைக்காரன் அரண்மனையில் ‘தர்பார்’ நடத்தியிருப்பான்! ஊரார்? அவர்களுக்கு என்ன...

மறுபடியும் மறுபடியும் புலி வந்தது! நான் என் கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படையாகக் காட்டினால், அப்பா என்னவென்று கேட்பாரே - அதனால், நடிக்க வேண்டி நேரிட்டது. அப்பா இல்லாத சமயங்களிலேயோ, அப்பப்பா! அரசனாகவா இருந்தான்; சித்ரவதை செய்தான். செந்தேனே என்று அவன் கொஞ்சுவது கருந்தேள் கொட்டுவது போலிருந்தது. சரி, இனி, நிலைமையை வேறுவிதமாகவாகிலும் சரிப்படுத்திக் கொண்டாக வேண்டும் என்று எண்ணி, திருமணப் பேச்சைத் துவக்கினேன் - அதற்குத் தடை ஏது என்றான் - அந்த ஏற்பாட்டைத் துரிதப்படுத்தச் சொன்னேன். அவன் அதற்காக ‘அச்சாரம்’ பெற்ற வண்ணம் இருந்தான்; உரிமையோடு பெறலானான்; நான் என்ன செய்வேன். இனிப்பு பண்டம் கசக்கலாயிற்று; பால் புளித்தது; பசி குறைந்தது! பாதகன், எனக்குப் ‘பரிசு’ தந்துவிட்டான். நான் கருவுற்றேன் - அவன் சொல்லத்தான் அதையும் அறிந்து கொண்டேன். பயத்தால் முகம் வெளுத்தது. அப்பா, இதைக்கண்டு கொண்டார். ‘ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை’ என்ற பதில் எத்தனை நாளைக்குப் பலனளிக்கும்? உண்மையைக் கூற வேண்டியதாகிவிட்டது.

“சுந்தரி! ஏன் உன் முகம் சோபிதமிழந்து கிடக்கிறது. கசங்கிய தாமரை போலாகி இருக்க என்னம்மா காரணம்?”

“ஒன்றுமில்லையப்பா?”

“என்னம்மா ஒன்றுமில்லை தேகாந்தி மங்கிக் காட்டுகிறது. விழி சதா, மிரட்சி கொண்டபடி இருக்கிறது. இரவு தூங்குவதில்லை சரியா மனதிலே, உனக்கென்னம்மா விசாரம்?”

“அப்பா! என்னை, வேதனைக்காளாக்காதீர்...”

“பைத்தியமே! காரணம் கூறாமல் கலங்கி நிற்கிறாயே. கண்களிலே நீர்... என்னம்மா...”

“அப்பா! நான் ஓர் பாபி!”

“பாபியா! பைத்தியமே! பித்தமா உனக்கு?”

“பித்தனின் காமப்பசிக்கு இரையான பேதையப்பா. நான்... படுகுழியில் தள்ளப்பட்டேன்... பாவியால்...”

“காமப்பசி! பலி! படுகுழி! என்னம்மா பிதற்றுகிறாய்?”

“ஐயோ! அப்பா! நான் எப்படிக் கூறுவேன்... என்னை... மன்னன்... எவ்வளவோ தடுத்தும்... பலாத்காரமாக”,

“சிவ, சிவ! என்ன பாபம் - என்ன கர்மம் இது! திருமலையா இத்தீய செயலைச் செய்தான்... அழியாத அபகீர்த்தியை உண்டாக்கி விட்டான் - என் குலக் கொழுந்தைக் கெடுத்தானா மகளைக் கெடுத்தானா மாபாவி - அடே, பாதகா! வஞ்சகா! பஞ்சமா பாதகம் செய்யும் வஞ்சகா! என் குடும்பத்தைக் கெடுத்தாய் - உன் கையிலே ஒரு கத்தி கிடைக்கவில்லையா - அவனைக் கொல்ல? உன்னால் முடியாவிட்டாலும், நீ செத்திருக்கலாமே! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... என் குலப்பெருமை, குடும்பப் பெருமை, எல்லாம் போயிற்று! தேவி! எப்படி இந்தத் தீயகாரியம் நடைபெற அனுமதித்தாய்! உன்னைத் தொழுது வரும் எனக்கா, இந்த அபகீர்த்தி! என் மகள், விபசாரி... கற்பழிந்தவள்...”

“அப்பா! அந்தக் கபடன், என்னைக் கலியாணம் செய்து கொள்ளவும் சம்மதம் என்று பேசுகிறான்.”
“உரக்கப் பேசாதடி! புத்தி யுக்தியற்ற பேதையே! கலியாணமாம் - ஜாதி; ஆசாரம் - சாஸ்திரம் - எல்லாம் என்ன ஆவது?...”

“இப்போது எல்லாம் நாசமாகித்தான் போயிற்று...’

“திருமலை! உன்னைப் பழிவாங்காதிருக்கப் போவதில்லை - நாடாளும் உன்னை, நான் நாசமாக்காவிட்டால், என் பெயர் சந்திரசேகர பட்டர் அல்ல. மமதை கொண்டு, வேதிச்ய குலம் என்றும் பாராமல், உன் நண்பனென்றும் யோசிக்காமல், தேவி மீனாட்சி கோவில் திருப்பணி செய்யும் பட்டர் என்பதையும் பார்க்காமல், என் மகளைக் கெடுத்தாய்! உன்னை நான் பழி வாங்காமுன்னம், ஊண் உறக்கம் கொள்ளேன் - இது சத்தியம் தேவி மீதானை - உன்னைத் தொலைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்.

தேவி கோவிலுக்கு வா, தெளிவற்ற பெண்ணே! ஆலயம் வா! பக்தர்களை அழைக்கிறேன்! உன்னை மன்னன் கெடுத்த பாபக் கிருத்யத்தை எடுத்துக்கூறி, பாபிக்கு என்ன தண்டனை என்று கேட்கிறேன். கற்பழிக்கும் காதகனையா, காவலனாகக் கொள்கிறீர் என்று கேட்கிறேன் - கல்மனம் கொண்டவனும் கண்ணீர் விடாமலிருக்க முடியாதே! கல்லால் அடித்துக் கொல்வர், காவலனாக உள்ள காதகனை!

“சொல்லடியை நாம் தாங்க வேண்டுமே! ஊர் மக்கள், இழித்தும் பழித்தும் பேசுவரே...”

“ஆமாம்... அதைக் கேட்டுக் சகிக்க முடியாதே... ஆத்திரப் பட்டுப் பயன் இல்லை... ஆனால் என் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிய அக்கிரமக்காரனைச் சும்மா விடுவது இல்லை - ஆமாம். என்னம்மா? ஏன் ஐயோ, அப்பா - என்ன?”

“அடி வயிற்றிலே ஒருவிதமான வலி அப்பா!”

“வலியா?”

“பாப மூட்டையைச் சுமக்கிறேன்.”

“பரமேஸ்வரா! ஏனேப்பா இந்தச் சோதனை? நான் செய்த பாபம் என்னவோ? தேவி! தேவி!...”
இதற்குமேல், தந்தையும் மகளும் என்ன பேச முடியும்?

அவர் தலைதலையென்ற அடித்துக் கொண்டு அழுதார் - நான் என்ன கூறிச் சமாதானப்படுத்துவேன்.

நான் துணிந்துவிட்டேன் இனி நான் வாழமுடியாதவள் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விட்டது ஆனால், என் உயிரைப் போக்கிக் கொள்ளவா முடியாது!

மானம் போயிற்று. பறித்தவனோ மன்னன்! ‘மணம் செய்து கொள்’ என்று வலியுறுத்தலாம்; மக்களிடம் முறையிடலாம். அந்தப்புரத்தில் போய்ச் சேரலாம். ஆனால் அப்பாவோ, சாஸ்திர விரோதம் என்கிறார். ஆகவே, நான் இனி பிழைத்திருக்க முடியாது. செத்தாக வேண்டும். குடும்பத்துக்கு இழிவைத் தராதிருக்க வேண்டுமானால், சாகத்தான் வேண்டும்.

அப்பாவிடம் வாதாடினேன் - திருமணத்துக்கு. மன்னன் எப்படியும் ஒப்புக் கொள்வாரப்பா என்று கெஞ்சினேன் - அவர், வெந்த புண்ணிலே வேலைச் சொருகாதேடி என்று கொக்கரித்தார். பெண்ணின் வாழ்வு பெரிதா, சாஸ்திர சம்பிரதாயம் பெரிதா என்று கேட்கத் துடித்தேன். நான், அழுகிய பழம், அப்பாவுக்கு அந்த நாற்றம் குடையும்போது, நான் வாதாடுவது வேதனையாகத் தானே இருக்கும். அகவே சாவு தவிர வேறு மார்க்கம் இல்லை ஆமாம், நான் சாகத்தான் வேண்டும். விஷம்! சாவு!! வேறு வழியில்லை.

என் மகள் மாண்டு போனாள் - அந்த இரகசியமும் அவளோடு, மண்ணோடு மண்ணாகப் புதைந்து போய்விட்டது. ஆனால் என் மனம்! நான் கோயில் அர்ச்சகன் என் மூலம்தான் எண்ணற்றவர்கள், தேவியின் அருளைப் பெறுகிறார்கள். ஆனால் தேவி எனக்கு அளித்தது? ஊரெல்லாம்தான் புகழ்ந்தது சுந்தரியின் அழகை! மன்னன் காட்டிய பரிவு, பலருக்குப் பொறாமைத் தீயைக்கூட மூட்டிவிட்டது. அந்தப் பாவி, என் மகளைக் கொன்றான். மாரடைப்பு என்று ஊராருக்குக் கூறினேன். ஆனால் என் உள்ளம் அறியுமே! விஷமருந்திச் செத்தாள் என் மகள்! பாதகன், என்ன காரியம் செய்துவிட்டான்! “சபலம்? ஆமாம், நடந்தது நடந்துவிட்டது. என்னையும் அறியாமல் நேரிட்டுவிட்டது. அவள் அழகு என் அறிவை அழித்து விட்டது. அந்தணரே! இனி அதுபற்றி பேசிப் பயனில்லை. நிலைமையை, நெஞ்சிலே கபடமின்றிக் கூறிவிட்டேன். நீர் மதியூகி! வேறென்ன சொல்ல - அவ்வளவுதான்” - இப்படிப் பேசினான். என் மகளை இரை கொண்ட காமாந்தகாரன். அவளைத் திருமணம் செய்து கொள்வானாம் கைவிடமாட்டானாம்! வேறு ஏதாகிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றாலும் தயாராம்! இந்த மண்டலத்திலேயும், எந்த மண்டலத்திலேயும் உள்ள மறையவர்குலத்திலேயும் எனக்குப் பெரும்பழியைத் தேடிக்கொள்வதா? எப்படிச் சம்மதிக்க முடியும் திருமணத்துக்கு.