அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

புதிய பொலிவு
5

“அவசரப்பட்டு மாட்டிக் கொள்வானேன் - இப்போது அவதிப் படுவானேன்” என்று ஊர்மிளா கேட்கிறாள்.

“என்னைச் சித்திரவதை செய்யாதே, எனக்கு ஒரு மாதிரி மனமயக்கம். கிராமத்துமீது மோகம், அந்த நிலையில், செல்லி என் கண்ணுக்குத் தங்கப்பதுமைபோலத் தெரிந்தாள்...!

“இப்ப மட்டும் என்னவாம்? நல்ல உடற்கட்டு! உழைப்புக்கு ஏற்றவள்”

“போதும், ஊர்மிளா! நான்தான் பெருந்தவறு செய்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேனே. இனி என்ன செய்ய முடியும்? சனியனை விரட்ட முடியுமா? ஊருக்குப் போய்த் தொலை என்று சொன்னாலும் நகர மறுக்கிறது...”

“எப்படிப் போவாள்? அவள் என்ன இலேசுப்பட்டவளா? அங்கே போனால், வெல்வெட்டு மெத்தையா போட்டு வைத்திருக்கு, வைக்கோற்போர்தானே...”

அதற்குமேல், பேச்சு கேட்கவில்லை. வளையல்கள் ஒலித்தன! நாற்காலிகள் மோதின! ஊர்மிளா சிரித்தாள்! செல்லி கண்களைத் துடைத்துக்கொண்டு, சமயற்கட்டுப்பக்கம் சென்று விட்டாள். ஒரு மணி நேரம் கழித்து, வடிவேலன், குளிக்கச் சென்றான், புதிதாக வந்த சினிமாவில் காதலர்கள் பாடும் பாட்டை மெல்லிய குரலில் பாடியபடி.

பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுத்துவிட்டோம், அடிக்கடி அங்குப் போனால், பெண்ணின் மீதுள்ள ஆசையால் வருவதாக ஊரார் எண்ணிக் கொள்ளமாட்டார்கள், பசையும் ருசியும் உள்ள இடத்துக்குப்போய், கிழவன் ஒட்டிக்கொண்டான் என்றுதான் ஏசுவார்கள் என்ற எண்ணத்தால், சடையாண்டி மகளைப் பார்க்க வருவதில்லை ஏதாவது ‘விசேஷம்’ நடக்கும் போது போய்ப் பார்க்கலாம் என்று இருந்துவிட்டான்.

கிராமத்தின் கவர்ச்சியை அடிக்கடி சென்று ‘ரசித்துவந்த’ வடிவேலன், கலியாணமான புதிதில் வந்துகொண்டிருந்தான் - பிறகு அந்தப் பழக்கம் நின்றுவிட்டது.

ஊர்மிளா, கிராமத்தைப்பற்றி அருவருப்புக் கொள்ளும்படி கூடச் சொல்லிவிட்டாள்.

“என்ன இருக்குது கிராமத்திலே! ஒரே பொட்டல்காடு! பொந்துகளில் நரிகள் இருக்கும்! புதர்களிலும் புற்றுகளிலும் பாம்பு இருக்கும். வயலிலே நண்டு இருக்கும் குளத்திலே முதலை இருக்கும், காளிகோயில் இருக்கும், கூளிகோவில் இருக்கும், இதன் நடுவே தலை ஒருவேசமும் துணி ஒரு வேசமுமாக ஜனங்கள் இருப்பார்கள். மாடு ஆடு ஒட்டிக் கொண்டு, அல்லது சேறு சகதியிலே புரண்டுகொண்டு! ஓவியமாகப் பார்க்கும்போது, கண்ணுக்கு அழகுதான், ஆனா கிராமத்திலே வாழ்ந்துகொண்டு, கிராமத்து வேலையைச் செய்து கொண்டு, கிராமத்தார்போலவே இருந்து விடமுடியுமா? சொல்லுங்க பார்ப்போம்? பொழுது போக்குக்கு என்ன இருக்கு? கிளி கொஞ்சும், சோலையிலே என்று, சொல்லுவீர் - சரி - இராத்திரி வேலையிலே, நரி ஊளையிடும், ஆந்தை கத்தும், வெறிநாய் குரைக்கும், பயமற்றுத் தெருவிலே நடக்கமுடியுமா? கிராமம், உலகம் தெரியாதவர்கள், படிப்பு அறியாதவர்கள் உழைத்துப் பிழைக்கறதுக்காக உள்ள இடமே தவிர நமக்கு ஏற்ற இடமா? செச்சே! என்னாலே ஒரு நாளைக்குமேலே தங்கி இருக்க முடியாது. பத்துப் பதினைந்து சினேகிதாளோட ‘வன போஜனம் செய்யப்போகலாம்; டார்ச்லைட் மட்டும் இருந்தாக்கூடப் போதாது, பெட்ரமாக்ஸ் இருந்தாக்கூடப் போதாது, பெட்ரசியம் இருக்க வேணும், கிராமபோன் அவ இவ்வளவு பக்கமேளம் இருந்தாத்தான் ஒரு பொழுதை ஓட்டமுடியும், கிராமத்திலே...” என்றாள். ஆமாம் என்று ஆமோதித்தது மட்டுமல்ல, வனபோஜனத்துக்கு ஏற்பாடு செய்தான், வடிவேலன்; ஊர்மிளா சொன்ன முறைப்படி! ஒரே ஒரு மாறுதலுடன். பத்துப் பதினைந்து நண்பர்களை அழைத்துக் கொண்டுபோகவில்லை - இருவர் மட்டும் சென்றார்.
* * *

கிராமத்துத் தோப்பில் மருமகப் பிள்ளை ‘கூடாரம்’ அடித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, சடையாண்டி ஓடோடிக் சென்றார்.

“மருமவப் பிள்ளே! இது நல்லா இருக்குதுங்களா? கல்லுப் போல நானொருத்தன் இருக்கறப்போ, தோப்புலே வந்து தங்கிட்டீங்களே. வாங்க, நம்ம வீட்டுக்கு. இப்ப, புதுசா முன்பக்கம் ஒரு கூடம்கூட போட்டு இருக்கு... வசதியாகத்தான் இருக்கு...” என்று அழைத்தார். வடிவேலன் வருவதற்கில்லை என்று கூறி அனுப்பிவிட்டான். வருத்தம், வெட்கம், சடையாண்டிக்கு. அதிலும், தன் மகளை அழைத்து வராமல், ஏதோ ஒரு ‘புடலங்காயை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்தபோது, வயிறு எரிந்தது.

இந்த வயிற்றெரிச்சலோடு வீடு சென்றான் வாசலில், வேலப்பன் நின்று கொண்டு இருந்தான் - உருமாறிப்போய்! அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது, சடையாண்டிக்கு. துக்கம் கப்பிக்கொண்டது, எவ்வளவு அருமையாக வளர வேண்டியவன், அவனை மருமகனாக்கிக் கொள்ள , அவன் மனம் எவ்வளவு துடித்தது, படுபாவி ஆடி அழிந்து, நமது ஆசையை அழித்துவிட்டு, இப்போது பட்டுப்போன மரம்போல வந்து நிற்கிறானே என்று ஆத்திரமாகக் கூட இருந்தது. அடக்கிக் கொண்டு, ஒப்புக்கு ‘சேதி’ விசாரித்தான். வேலப்பனும் சுருக்கமாகவே பதில் சொல்லிவிட்டு, சிலோனுக்குப் போக ஏற்பாடாகிவிட்டதாகவும் செலவுக்கு ஓர் ஐம்பது ரூபாய் வேண்டும் என்றும் கேட்டான்.

மனத் துணிச்சலைப் பாரு! என் மகளோட மனக் கோட்டையைத் தூளாக்கிவிட்டு. எனக்கும் மானம் போகிற விதமா நடந்துவிட்டு, குடித்துக் கூத்தாடி, ஜெயிலுக்குப் போய் வந்து, என்னையே பணமல்லவா கேட்கறான், பாவிப் பய - என்று கோபம்தான். ஆனால், வேலப்பனை ஏறிட்டுப் பார்த்த போது, அவன் கண்களிலே இருந்த வேதனையைத் தெரிந்து கொண்டு சடையாண்டியால் அழுகையை வெகு சிரமப்பட்டுத் தான் நிறுத்திக்கொள்ள முடிந்தது.

“நாளை மறுநாள் பார்ப்போம். தோப்பிலே, மருமகப் பிள்ளை வந்திருக்காரு, வாழைத் தாரு இரண்டு, பத்து இளநீர் பறிச்சிக் கொண்டு வா, கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வரலாம்.”

“நான் வரமாட்டேன், அங்கே சொல்லி வந்திருக்குமே... எப்படி அதோட முகத்திலே முழிக்கறது, வேண்டாம்...”

“செல்லி வரலே... அவரு வேறே ஒரு சிநேகிதர் கூட வந்திருக்காரு...”

“அப்படியா? வாரேன் அவரைப் பார்த்ததே இல்லை.”

இருவரும் கிளம்பினர்; தோப்பிலே கிராமபோன் இசையில் இலயித்தபடி சாய்ந்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா! வடிவேலன் ‘ஸ்டவ்’ பற்ற வைத்து, ‘காபி’ போட்டுக் கொண்டிருந்தான்.

வடிவேலனைப் பார்த்ததும் வேலப்பனுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.

மோட்டார் கழுவ பொடிப் பயலுக்கு எட்டணா கொடுத்தவர்!

“இவர்தானா? தங்கமானவர் தெரியுமே” என்றான் வேலப்பன்.

“யார் இவன்?” என்று சடையாண்டியைக் கேட்டான் வடிவேலன்.

“நமக்கு வேண்டியவன்... பந்துதான்” என்றான் சடையாண்டி.
“செல்லியை நான்தானுங்க கட்டிக் கொள்ள இருந்தேன் - முன்னே...” என்று கபடமற்றுச் சொன்னான் வேலப்பன்; வடிவேலன், “இடியட்! புரூட் ராஸ்கல்! எவ்வளவு வாய்க் கொழுப்பு இப்படிப் பேசுவ என்று கூறிக் கோபித்துக்கொண்டான். ஊர்மிளா குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே, பலமான சிந்தனையில் ஈடுபட்டாள்.
* * *

“எப்படி ஊர்மிளா, அவ்விதம் சொல்வது எனக்கே அவமானமாக இருக்குமே...”

“இதிலென்ன அவமானம்? வேறு எந்த வழியிலேயும் அந்தப் பட்டி இந்த இடத்தை விட்டுப் போகமாட்டாள். சோரம் போனாள் என்று வழக்குப் போடுவதுதான் அவளை ஒழித்துக் கட்டும் வழி, எனக்குத் தெரிந்த வழி. இதற்கு உங்கள் மனம் இடங்கொடுக்கவில்லை என்றால், வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள் நான் கல்கத்தா போய்விடுகிறேன்.”

“வேலப்பனுடன் செல்லி சோரத்தனமாக நடந்து கொண்டாள் என்று புகார் கூறினால், கோர்ட்டில் நம்ப வேண்டுமே - எப்படி முடியும்?”

“அது என் பொறுப்பு. நான் வேலப்பனை வரச்செய் கிறேன். இருவரும் சந்திப்பார்கள். பழைய காதலர்களாயிற்றே! பார்த்துப் பல நாள் ஆகிவிட்டது. பதைப்பு எவ்வளவு இருக்கும், பகலே இரவாகத் தெரியும்; பக்கத்தில், எதிரில் உள்ளவர்கள் கூடக் கண்ணுக்குத் தெரியாது.”

“போதுமா, ஊர்மிளா! என் மனம் சரியாக இல்லை எனக்கு வேதனையாகவே இருக்கிறது.”

“அப்படியானால், ஏன் வீணாக, இரண்டுகெட்டு அலைகிறீர்கள்? என்னை மறந்துவிட்டு அந்த அழகியோடு சல்லாபமாக வாழ்க்கையை நடத்துவதுதானே.”

“உன்னைவிட்டுப் பிரியவே முடியாது, ஊர்மிளா அவளை விரட்ட வேறு என்ன வழிவேண்டுமானாலும் சொல்லு, அவள் சோரம் போனவள் என்று சொல்லி வழக்குப்போடும் ஈனத்தனத்தை மட்டும் செய்யும்படி என்னைத் தூண்டாதே.”

“வழக்கு போடும்படி சொன்னது தவறு.. அப்படித்தானே... சரி... அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று நெடுநாளாக ஆவலாக இருந்தார்கள், பழகி வந்தார்கள் என்று அந்தச் சடையாண்டியே சொன்னானே. அந்தக் காலத்திலே உத்தமியாகவா இருந்திருப்பாள், உங்களோட தர்மபத்தினி?”

‘பளார்! பளார்!’ என்று அறை விழும் சத்தமும் ஐயோ! ஐயோ! என்ற அலறலும் கேட்டு, அதுவரை அந்த உரையாடலை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த செல்லி, என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே புயல்போல நுழைந்தாள்; ஊர்மிளா, வேகமாக வெளியே நடந்தாள் அடியற்ற நெடும் பனைபோலக் கீழே விழுந்தாள், வடிவேலனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

‘கலியாணத்தின்போது நான் இந்தக் களிப்பு அடைய வில்லை. என்னை இவ்வளவு செல்வத்திலே வைத்தபோதும் சந்தோஷப்படவில்லை. எவ்வளவு தான் என்மீது வெறுப்பு இருந்தாலும், என்மீது அபாண்டம் சுமத்த, என் பெயரைக் கெடுக்கமுடியாது அது ஈனத்தனமான காரியம் என்று சொன்னீர்களே அதுபோதும் எனக்கு, அந்த ஆனந்தம் எனக்கு வேறு எதிலும் கிடையாது. என்னை நீங்க, அவசரப்பட்டு ஆய்ந்து பார்க்காமத்தான் கலியாணம் செய்துகொண்டிங்க... ஆனா மேலே எரிகிற சூரியன் சாட்சியாகச் சொல்கிறேன், நான் மாசு மருவற்றவள்- பழிபாவத்துக்குப் பயந்து நடக்கறது, கிராமத்துக்குப் பரம்பரை பரம்பரையாள பழக்கம். வேலப்பனும் நானும் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டது நிஜம் - தவம் கிடந்தேன்னு கூடச் சொல்லலாம் - ஆனா அவரு, தவறான பாதையிலே போயிட்டாரு, தன்னைத்தானே கெடுத்துகிட்டாரு... அப்போதே என் மனத்திலே இருந்து போயிட்டாரு... ஒரு தப்பும் ஒரு நாளும் நடந்ததில்லிங்க. ஊர்மிளா இல்லங்க நானும், ஊர் உலகத்துக்கு மட்டும் இல்லாங்க, உள்ளத்துக்குப் பயந்து நடக்கிறவ. பட்டிக்காட்டா, பட்டினத்திலே, வந்ததாலே, உங்களுக்கு மனைவியாக வந்ததாலே, பல மாதிரியான அவமானம் உங்களுக்கு வந்தது எனக்குத் தெரியும்... என் மேலே தப்பு இல்லிங்க, என்மேலே தப்பு இல்லே. இப்பவும் நான் உங்க வாழ்க்கைக்குத் தடையா இருக்கவே மாட்டேன் - ஆனா, ஊர்மிளா வேண்டாமுங்க: உத்தமர்களோட அறிவை எல்லாம் கெடுத்துவிடுகிற காதகி வேண்டாமுங்க, நல்ல படிச்ச பெண்ணா பார்த்து, உங்களோட நாகரிகத்துக்கு ஏத்தவளாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு வாழ்ந்துகிட்டு இருங்க - ஒரு நாலு மாதம் தவணை கொடுத்தா போதுமுங்க... கருவிலே சிசுவோடு தற்கொலை செய்துகொள்ள மனம் வரவில்லிங்க, இல்லையானா, நான் சின்னப் புள்ளையிலேயிருந்து விளையாடிக் கொண்டிருந்த மடுவிலே இப்பவும் தண்ணி இருக்குதுங்க, என்னாலே முடியும் உயிரை மாய்த்துக் கொள்ள...”

‘கோ’வெனக் கதறித் தலை தலை என்று அடித்துக் கொண்டு, அப்படியே வாரி எடுத்துச் செல்லியை மார்புற அணைத்துக்கொண்டு,
“செல்லி! செல்லி!” என்று மட்டுமே கூறிக் கொண்டு நின்றான், வடிவேலன்.

அவன் தீட்டிய ஓவியம் புதிய பொலிவு பெற்றது போலக் காட்சி அளித்தது.

(திராவிட நாடு - 1956)